Thursday, May 20, 2021

அப்பா

எழுதப்படிக்க தெரியாத ஏழைதானே அப்பா
எத்தனை அக்கறை எங்களுக்கு எழுத்தறிவித்த அப்பா
தொழுது கிடந்த தொல்குடியின் துயரம் சுமந்த அப்பா
தோளுயர்த்தி நான்நடக்க தொண்டுசெய்த அப்பா
வீதியெலாம் சுத்தம் செய்து விருந்து படைத்த அப்பா
விளையாட்டாய் உன்னருமை மறந்திருந்தேன் அப்பா
ஒதி ஓதி படிக்க வைத்த உயர்ந்த மனது அப்பா
உன்னால்தான் இப்போதுநான் உயர்ந்த மனிதன் அப்பா
அரசுப் பணி முடித்தநொடி அடுத்து நீயும் உழைப்பாய்
ஆறுபிள்ளைகள் காப்பாற்ற அடிமைபோல உழைப்பாய்
கடுகளவும் பாசம் குறையா காவல்தெய்வம் அப்பா
கள்ளு சாராயம் பழக்கத்தினால்
கவலை சுமந்தேன் அப்பா
நெடுமரம் போல் உயர்ந்த உருவம்
நெசத்தில் குழந்தை அப்பா
நேர்மையிலே மாறாத நேசக்கார அப்பா
பாலுவென அழைக்கையிலே பயந்து நடுங்கி வருவேன்
பாசத்தோடு நீசிரிக்க பனிபோல குழைவேன்
ஆளுமட்டும் முரட்டு ஆளுநீதான் அப்பா
அன்பு துளியும் குறையாத அறிவன் நீதான் அப்பா
நான்வாழும் ஒவ்வொரு நொடியும் உன்னுழைப்பின் மிச்சம்
நானிந்த பூமியிலே உன்னுடைய எச்சம்
ஓடும் வரை ஓடி ஓடி உழைத்த தியாகி அப்பா
ஓய்ந்த பின்னே உனக்கொன்றும் செய்தறியேன் அப்பா
கூடுவிட்டு பறந்த குஞ்சுபறவை ஆனேன்
குழந்தைகளை வளர்த்தெடுத்தேன் உன்னைப்போல நானே
சார்ந்திருக்க கூடாதென சத்தியமாய் சொன்னாய்
சாகும் வரை அப்படித்தான் சரித்திரமாய் ஆனாய்
ஒருநொடியும் உனைமறந்து நானிருந்ததில்லை
உன்னுழைப்பை அசைபோட நான் மறந்ததில்லை
மறுபிறவி நம்பிக்கை எனக்கிருந்ததில்லை
மகனாக மீண்டும் பிறக்க மறுதலிக்கவில்லை
என் பிறந்த நாளுக்கு முதல்நாளில் மறைந்தாய்
விண் கலந்து வளிகலந்து காவல்தெய்வம் ஆனாய்
ஊணும் உயிரும் இருக்கும்வரை உனைமறக்க மாட்டேன்
உழைப்பின் தெய்வம் உன்னருளால்
உலகம் போற்ற வாழ்வேன்
நினைவி்ல் வாழும் அப்பா உன்னை வணங்குகின்றேன்
மனைவி மக்கள் சுற்றம் நட்பு
காக்க வேண்டுகின்றேன்





No comments: