Thursday, January 9, 2020



நடைபாதைக் கடையோரம்
நாம் நடக்கும் பாதையோரம்
விடைதெரியா கேள்விகளை
விழிகளில் சுமந்தபடி
உடையின்றி உணவின்றி
உடலுழைத்து வேர்வைசிந்தி
தடைகளே பாதைகளாய்
தவித்திடும் காட்சிகளும்
குடையாக வானமே
குளிருக்கு கைகளே
இடையிடையே ஆயிரமாய்
இன்னல்களும் சூழுகின்ற
முடைநாற்றம் வீசுகின்ற
மூடத்தனம் கவ்வுகின்ற
அடையாளம் நடைபாதை
அவர்வாழ்க்கை பரிதாபம்

நாளெல்லாம் பூக்கட்டி
நற்கூந்தல் ஏறா பெண்
பால்விற்று பிழைப்போரும்
பால்குடிக்க வழியில்லை
வீடுகட்டும் உழைப்பாளர்
வீதிகளில் இராக்கழிப்பார்
நாடுவிட்டு நாடுவந்து
நாளெல்லாம் உழைப்பவர்கள்
கேடுகெட்ட சமூகத்தில்
பசித்திருக்க வழியில்லை
பாடுபடும் பாட்டாளி
படுத்துறங்க வழியில்லை

சித்திரங்கள் இரசித்திடலாம்
சிலிர்த்தும்நாம் எழுதிடலாம்
பத்துநூறு காவியங்கள்
பாடிடலாம் பாவியங்கள்
முத்திரைகள் பதித்திடலாம்
முழுமையாய் மகிழ்ந்திடலாம்
எத்தனையோ சோகங்களை
எல்லோரும் சுமந்தபடி
இத்தரையில் வாடுகின்றார்
இதற்கொரு விடிவிலையோ?
நடைச்சித்திரங்கள்
நமக்கெல்லாம் பாடங்கள் !







அமைதியாய் உறங்கிய
ஆளில்லாத தோப்பில்
அலையடித்தது போலொரு
அச்ச பேரொலி
ஆழ்ந்த நித்திரையில் இருந்த
ஆலமரம்
ஆதவனின் ஒளிக்கீற்றுகளால்
சோம்பல் முறித்தது
ஒவ்வொரு பறவையாக
கடமை உணர்வோடு
காலி செய்யத் தொடங்கின
தத்தம் இருப்பை.
எறும்புகள்
உணவுக் கடத்தலை தொடங்கின
காக்கைகள் உறவை அழைத்தன
எங்கிருந்தோ வந்த
பாங்கு ஒலி
நேரத்தை சொல்லி
நித்திரை கலைத்தது.