Tuesday, August 27, 2013

தபோல்கர்

புனே நகரத்து மேம்பாலத்தில்
புல்லர்களை விரட்ட சிந்தித்து
நடைப் பயிற்சி செய்தபோது

மூட நம்பிக்கை இருளை
ஓட விரட்ட வந்த பகலவன்
சுட்டு வீழ்த்தப் பட்டான்

மருத்துவம் பயின்றாலும்
சமூகத்தை அறிவியல்  மனப்பான்மையோடு
வளர்ப்பதில் அரும்பாடுப் பட்டவர்

இந்துத்துவ வெறியர்கள் இரத்தவெறியோடு
எழுந்த காலத்தில் எதிர்ப் பிரச்சாரம் செய்து
எழுந்தது நிர்மூலன் சமிதி

பாமர மக்கள் ,படித்தவர்களையும்
சடங்கு ,பில்லி சூனிய இருளில்
சிக்க வைத்துக் கொழுத்த
போலிச் சாமியார்களின்
முகத்திரையைக் கிழித்தார்

அறிவாசான் அம்பேத்கர் மண்ணில்
அய்யா பெரியாரின் கொள்ளைகளை
பரப்புரை செய்தார் தபோல்கர்

மந்திரமென்ற பெயரில் தந்திரமாய்
மக்களை ஏமாற்றிய மந்திரவாதிகளை
மக்கள் மன்றத்தில் அம்பலப் படுத்தினார்

மகாத்மா பூலேவின் பேருழைப்பின் பூமியில்
சாமியார்களின் மோசடிகளை
சந்தி சிரிக்க வைத்தார்

காணிக்கை என்ற பெயரில்
காசை கரியாக்கும் கண்மூடிப் பழக்கத்தை
வேரறுக்கப் பாடுபட்டார்

அருந்தும் குடிநீர் ஆண்டவன் கரைசலால்
நஞ்சாகிப் போவதை
நடக்காமல் தடுத்தார்

கட்டப் பஞ்சாயத்து கௌரவக்கொலைகள்
திட்டமிட்டுப் போராடி
தீவிரமாய் எதிர்த்தார்

போதை அடிமைகளை
'பரிவர்த்தன்' மூலம்
போராடி மீட்டெடுத்தார்

காந்தியைக் கொன்றவர்கள்
கருத்துவாதம் செய்யாமல்
ஏந்தலைக் கொன்றுவிட்டார்

சூரியனை இருளால்
சுட்டுவிட முடியுமா?

மாரியினை எவனால்
மடக்கிவிட முடியும்?

ஆழியலை எவரால்
அடக்கிவிட முடியும்?


அறிஞர் தபோல்கரின்
அயராத உழைப்பிற்கு -மராட்டிய
அரசின்று,மூடநம்பிக்கை
பரப்புவோர்க்கு எதிராய் சட்டமியற்றி
அஞ்சலி செலுத்தியுள்ளது

அறிஞர் வழியில்
அடிப்படை வாதிகளுக்கு எதிராய்
அணிதிரள்வோம்

பகுத்தறிவுக் கொள்கை
திசையெட்டும் சேர்ப்போம்
பாமரமக்களை மீட்டெடுப்போம்

நரேந்திர தபோல்கருக்கு
நம்மின் வீரவணக்கம்






Wednesday, August 21, 2013

அவதாரப் புருஷன்

வயோதிகத்திலும்
வாலிபமாய்
உன்
வசன கவிதை

திருவரங்கமிருந்து
தமிழை
திரையிசையில்
தெருவெங்கும் முழங்கியவன்1

கருவறையிலேயேக்
கவிதைகளைத்
திருவாகப் பெற்றவன்!

நக்மாவைப் பாடினாலும்
நமீதாவைப் பாடினாலும்
அக்மார்க் கவிதைகளால்
அட்டகாசம் செய்தவன் !

கம்பன் தமிழைக்
கடனாகப் பெற்றதனால்
நம்பிக்கை விதைகளை
நடவு செய்தவன்!

வெற்றிலைச் சாற்றோடு
வெல்லத் தமிழை
மெல்ல மென்று மென்று
மேனி சிவந்தவன்!

புதுக் கவிதைப் பூக்களால்
அவதாரப் புருஷனை
அரங்கேற்றம் செய்தவன்

பாரதக் கதையை
பாண்டவர் பூமியாய்
வேண்டியேப் படைத்தவன்

உன்
அம்மா பாட்டென்றால்
கல்லும் கரையும்                                                                                                                               காயும் கனியும்

நடிகன் இராமச்சந்திரன்
நாட்டை ஆள்வதற்கு
'பாட்டை' போட்டவன்

அரிதாரம் பூசிய
அவதாரங்களையெல்லாம்
அழகாகக் காட்டியவன்

அன்றாடம் குழிதோண்டும்
அபாயத் திரைத் துறையில்
வென்று ஐம்பது ஆண்டு
வெற்றிக்கொடி நாட்டியவன்

தாடியைத் தடவி நீ
பாடும் தமிழ்ப் பாட்டு
நாடி தளர்ந்தவருக்கும்
நம்பிக்கைத் தெம்பூட்டும்

இசங்களுக்கு வசமாகா
நிசமானக் கவிஞன்

உதட்டைப் பிரித்து நீ
உச்சரிக்கும் வேளையிலே
இதமாகத் தமிழ்த் தாய்
எப்படி நடம்புரிவாள்!

எதிரே அமர்ந்து
எத்தனை முறைநான்
குதியாய்க் குதித்து
குயில் தமிழ்க் கேட்டிருப்பேன்!

மருத்துவ மனையில்
கருத்துகளைச் சிந்தித்து
காவியங்கள் படைப்பாயென
காத்திருந்த வேளையிலே

அதிர்ச்சி செய்தியோடு
அலைவரிசை கத்தியதே
முதிர்ந்த தமிழ்ப் பழமே!
மூச்சை ஏன்விட்டாய்?

பேச்சே வரவில்லை
பேதை சிறுவனென்
ஆழ்ந்த அஞ்சலிகள்
ஆசிர்வதிப்பாயாக!