Saturday, February 10, 2018

அப்பா
நான் பிறந்த நாள் முதலாய்
நடப்பதெல்லாம் உன்னால்தான்
ஊண் வளர்த்து உயிர் வளர்த்து
உருவாக்கி மகிழ்ந்தவர்  நீ
இருக்கும் போது சிறிதுணர்ந்தேன்
இழந்தவேளை எனை தொலைத்தேன்
மறுபிறவி நம்பாதவன்
மறுபடியும் வருவாயா?

Wednesday, December 2, 2015

புறப்படு புறப்படு பேய்மழையே!

வா வா மழையே என்றழைத்தோம்
வந்து கொட்டித் தீர்க்கின்றாய்
சாவா வாழ்வா நிலை எமக்கு
சற்றே பொறுக்க மாட்டாயா?
போய்வா என்றே சொல்கின்றோம்
புறப்படு புறப்படு பேய்மழையே!
தாய்பிள்ளை முதியவர் தவிக்கின்றார்
தாமதம் இனியும் ஏன் மழையே
ஊடகம் முழுதும் உன்னாட்சி
உயிருக்கு போராடும் நிலையாச்சு
நாடகம் ஏனோ பேய்மழையே
நலங்கெட பெய்தல் முறையாமோ?
எங்கே பேரிடர் என்றாலும்
எங்கள் மக்கள் உதவிடுவார்
இங்கே வெள்ளம் சூழ்கையிலே
எங்கே போவார் எம்மக்கள்?
இயற்கையே சீற்றம் குறைத்துவிடு
இனியும் வேண்டாம் விளையாட்டு
செயல்பட முடியல வழியைவிடு
சினத்தை குறைத்து வாழவிடு
நல்மனம் படைத்த நண்பரெலாம்
நன்றாய் உதவிகள் செய்கின்றார்
வல்லமை உண்டு மீண்டுவர
வருணா கருணை காட்டிவிடு

Wednesday, November 11, 2015

நெய்தல் குரல்

அலைகடல்  மேலே வலைவிரிப்போம்
ஆயிரம் மைல்கள் பயணிப்போம்
நிலையிலா வாழ்க்கை வாழுகிறோம்
நீர்இலை எறும்பாய் வாடுகிறோம்

மனைவி மக்கள் கரையினிலே
மன்னவன் மட்டும் அலையினிலே
மனையும் உயிரும் நிலையில்லை
மாக்கடல் தாயே  துணையெமக்கு

தெக்குத் தெரியாமல் போயிடுவோம்
தினம்தினம் செத்தே பிழைத்திடுவோம்
எக்குத் தப்பாய் திசைமாற
எல்லை சிக்கலில் உயிரிழப்போம்

அடிக்கும் அலையினில் சிக்காமல்
ஆபத்து மீனிடம் மாட்டாமல்
இடித்து பாறையில் மோதாமல்
இன்னுயிர் பிழைத்தல் மறுபிறவி

உப்பு நீரினில் உயிர் வளர்த்து
உறவுகள் மறந்து  உழைப்பெடுத்து
தப்பித் தவறி மீன்பிடித்தால்
தரகனேப் பெருந்தொகை  விழுங்கிடுவான்

உள்ளூர் வலைக்குத் தடையிங்கே
உலக வர்த்தகம் தாராளம்
கொள்ளை கடல்வளம் ஏராளம்
கொள்கை வகுத்தாள் தாயிங்கே

கடலைப் படைத்தது கவர்ன்மென்டா?
கயலை விதைத்ததும் கவர்ன்மென்டா?
அடடா இவனுக்கு அதிகாரம்
அடக்கிட எங்களை எவனளித்தான்?

கடலோடு தானேயாம் பிறந்தோம்
கடலன்னை பாலைதான் குடித்தோம்
கடலன்னை தாலாட்டில் உறங்குகிறோம்
கவர்ன்மென்டு உயிரைப் பறிப்பதற்கா?

ஆழி நீரினில் கோடெதற்கு?
அலைகடல் ஆண்டிட ஆளெதற்கு?
தாழி உடைத்திட தாயெதற்கு?
தரணியில் வன்முறை வளர்ப்பதற்கா?

உலக வர்த்தக உடன்பாடு
உரிமை பறிக்கும் ஏற்பாடு
கலகம் அதனால் தானிங்கே
கழுத்தை அறுக்கும் சமன்பாடு

குப்பம் முழுதாய் அழித்துவிட்டு
கும்மாள மடிக்க விடுதிகளை
செப்பமாய் கட்டிக் குவிக்கின்றான்
செம்படவர் வாழ்க்கை அழிக்கின்றான்

ஆழ்கடல் மீன்பிடி படகுகளை
அமெரிக்க கழுகுகள் வட்டமிடும்
ஈழம் அருகே சிங்களவன்
இழுத்து வலைகளை அறுக்கின்றான்

எங்கள் கடலுக்கு ஏன்வந்தாய்?
எல்லை சிக்கலை எழுப்புகிறான்
திங்கள் ஒளியும் அங்கில்லை
தினம்தினம் மடக்கிப் பிடிக்கின்றான்

மீன்களை கொள்ளை அடிக்கின்றான்
மீனவர் கொன்று குவிக்கின்றான்
ஆண்மை இலாத ஆட்சியாளர்
'ஆ'வென விழித்து நிற்கின்றார்

கச்சத் தீவை கடன்கொடுத்தோம்
கைகள் குலுக்கி உறவுகொண்டோம்
அச்சம் சிறிதும் இல்லாமல்
அதிகார போதையில் ஆடுகிறான்

பரந்து விரிந்த தேசமக்கள்
பல்லாங் குழியிடம் அகப்பட்டு
இறந்தும் போகும்  நிலைகண்டும்
இந்தியத் தாயிடம் இரக்கமிலை

ஏனிந்த நிலையென புரிகிறதா?
எம்முயிர் இனமே தெரிகிறதா?
கூனை நிமிர்த்து நேராகு!
குவலயம் வெல்ல வீராகு!

கடலன்னை என்றும் ஓய்ந்ததில்லை-அலைக்
கைகள் மடக்கி சாய்ந்ததில்லை
உடலை வருத்தி தொண்டாற்று
உயர்வாய் விரைவாய் விண்போற்ற!
Tuesday, October 6, 2015

எல்லாம் உனக்கு வசமாகும்

வாழ்க்கை என்பது வாழத்தான் நண்பா
வாழ்வைத் தொலைத்திட நினைப்பது பண்பா?

ஆயிரம் துயரம் நேரட்டும் வாழ்வில்
நீயதை வெல்ல துணிவோடு நேர்நில்

தோல்விகள் சூழ்ந்தால் சுறுசுறுப்பாகு
ஆல்வினை யால்நீ வென்றிட ஏகு

வீட்டுக் குள்ளே ஒலிந்து கிடந்தால்
கீற்றுக் கூரையும் பாதாளம்
கூட்டைவிட்டு வெளியே வாநீ
வெளிச்சக் கீற்றாய் ஆகாயம்

செய்யும் தொழிலில் செம்மை இருந்தால்
செல்வம் உன்னைத் தாலாட்டும்
கையும் வாயும் மெய்யாய் இருந்தால்
கடவுளும் உன்னை தோளேற்றும்

காதலில் தோல்வி என்றால் எதற்கு
கழுத்தினில் தூக்குக் கயிறுனக்கு
சாதனைப் புரிந்திட வழிகள் இருக்க
சழக்குகள் வேண்டாம் சாதிப்பாய்

தோழமை தேர்ந்திட தெரியா உனக்கு
தோல்விகள் தானே பரிசாகும்
ஏழமை ஆயினும் நேர்மை இருந்தால்
எல்லாம் உனக்கு வசமாகும்

Tuesday, September 9, 2014

தமிழ்தான்வித்தடா!

அம்மா என்றிட ஆவும் மறந்ததா?
           ஆனைப் பிளிறிட அசிங்கப் பட்டதா
இம்மண் உயிர்கள் இயல்பாய் இருந்திட
           இன்னல் ஏனடா இன்தமிழ் பேசிட

வள்ளுவன் குறளுக்கு ஈடிணை உண்டா?
           நாலடியார் போல் நன்னூலும்  உண்டா?
அவ்வைப் பொன்மொழி அகிலத்தில் உண்டா?
          அட்டா! பொன்னை மண்ணாய் நினைத்தாய்

சங்கத் தமிழ்போல் வாழ்க்கை இலக்கியம்
        சல்லடை போட்டு துழவிணும் கிட்டுமோ?
தெங்கின் இனிமைப் பாக்களால் கம்பன்
        தேனாய் வடித்த காவியம் கிட்டுமோ?

அகமும் புறமும் அரிய சொத்தடா!
         அனைத்து மொழிக்கும் தமிழ்தான் வித்தடா!
சிகரம் தொட்டதுன் சீரிளமை மொழியடா!
         சிந்தித்துப் பாரடா! செயலினில் இறங்கடா!

அடிமைப்  புத்தியை அறவே ஒழியடா!
        அன்னைத் தமிழினில் அனைத்தும் செய்யடா!
மிடுக்குடன் தமிழை கைகளில் ஏந்தடா!
        மீண்டும் தமிழை அரியணை ஏற்றடா!

            

Monday, July 21, 2014

கடமை

என்ன  நடந்தாலும்  ஏனென்று கேட்காமல்
மண்ணை மொழியை மறந்து கிடக்கின்றார்
திண்ணை உறக்கத்தில் தீந்தமிழ் மாந்தர்கள்
என்னே கொடுமை இது

பாவலர்கள் பாட்டினிலே பாசாங்கு பம்மாத்து
நாவலர்கள் பேச்சினிலே நாளெல்லாம் மாய்மாலம்
காவலர்கள் காட்டாட்சி காடுமலை ஆறுகொள்ளை
ஈவிரக்கம் இல்லையே இங்கு

வீதியிலே வன்முறை வெறியாட்டம் நாட்டினிலே
நாதியில்லை கேட்பதற்குச் சேதிகளை ஏட்டினிலே
ஊதிப் பெருக்கிடவே ஊரிலுள்ள ஊடகங்கள்
நீதியின்றி நிற்கின்ற தேன்

நீதிநூல் தாம்கற்றும் நிம்மதியாய்  வாழவழி
ஏதிங்கே தோழா இளைஞர்கள் வன்முறையில்
மோதி கொலையுண்டு வன்புணர்வில் மங்கையரை
ஊதி எரிக்கின்றார் ஊர்

நாட்டில் நடக்கின்ற காட்சிகளைக் காணுங்கால்
ஏட்டில் எழுதவொண்ணா ஏக்கம் விரிகிறது
போட்டிக்குப் போட்டியாய்ப் பொதுமக்கள் பொய்யணிந்து
நாட்டில் நடக்கின்றார் நன்கு

அவரவர் தங்கடமை ஆற்றுதற்கு இந்நாட்டில்
தவறாதுசட்டங்கள் தாள்களில் இருக்க
எவரும் ஏற்றிடவே எப்போதும் கேளாத்
தவறும் தடியரைத் திருத்து

Sunday, July 6, 2014

இந்தி(யா)?ஆட்சி மாற்றம் நடந்த பின்னே
              அனைத்து விலையும் ஏறுது
ஆளும் கட்சி எதிரி கட்சி
              அடுக்காய் குற்றம் சாட்டுது
காட்சி மாறி கைகள் மாறி
               கவலைத் தீர வழியிலை
காட்டு தர்பார் ஆட்சி நாட்டில்
              கந்தல் மாந்தர் உய்விலை

மானியம் இல்லை என்று சொல்லி
                   மன்றில் பேசி திரியுது
மாந்தர் வாழ வழியே இல்லை
             மார்பை உயர்த்திக் காட்டுது
தானியம் விளைய தண்ணீர் இல்லை
             தாவா தீர்க்க முடியல
தான்தான் என்று தலையை தூக்கி
            ததிங்கி னத்தோம் பாடுது

மதப்பேய் பிடித்த காவிக் கூட்டம்
           மாநிலம் பிடிக்க அலையுது
மாயா ஜால வித்தை காட்டி
            மக்களை நெருங்கத் துடிக்குது
இதமாய்ப் பேசி இலவயம் நீக்கி
             ஏழைகள் வயிற்றில் அடிக்குது
இந்தியைத் திணிக்க இயன்ற வரையில்
             இறங்கி வேலைச் செய்குது

மாற்றம் வேண்டி ஓட்டு போட்டோர்
             மடியில் கையை வைக்குது
மன்னர் அம்பானி கைப்பா வையாய்
             மோடி அரசு கிடக்குது
ஏற்றம் வேண்டி ஏழை மக்கள்
          ஏற்றுக் கொண்டார் உங்களை
ஏழைக் கண்ணீர் எரிக்கும் நாளை
          எழுக  உணர்ந்து நடந்திட