Saturday, August 18, 2012

நாடா ? இது காடா

ஒற்றைக் குடியராசாய்

பல தேசிய இனங்களை
அடைத்து வைத்திருக்கிறது
இந்தியா

எல்லைகள் பிரித்து
பல மாநிலங்களாய்
எழுதி வைத்தும்
இருக்கிறது.

முள்வேலிகளை விட
மோசமான
மன வேலிகளால்

பிரிந்துகிடக்கின்றன
மாநிலங்கள்.

நதிகளை
நடக்கவிடாமல்
அணை விலங்கிட்டு
அடைத்து வைக்கின்றன
அரசுகள்.

ஊர்களில்
உள்ளூர் வெளியூர்
சண்டைகள்
உச்சகட்டத்தில்

காற்றை
அடைத்து வைக்க
நேற்று இன்று நாளையென
நித்தம் ஆராய்ச்சிகள்.

தன்னையே
வேற்றாளாய் நினைக்கிற
சுயநல விலங்கானான்
மனிதன்.

வடகிழக்கு மக்கள்
வன்முறை,எல்லையில் சண்டை
இடம் விட்டு பெயர்ந்தனர்
பிழைப்புக்கு.

கடுமையான உழைப்பால்
கண்ட ஊர்களில்
அடைந்து கிடந்தனர்
வயிற்றுக்காய்.

இமயமும் குமரியும்
எல்லைகளென
பள்ளியில் படித்தவரும்,
படிக்காதவரும்
நம் நாடெனவே
நம்பினார்கள்.

வந்தேறி என்று
வசைபாடி,அச்சமூட்டி
சொந்த ஊருக்கு ஓடிப்போக
நிர்ப்பந்தம்.

தம் கையை
நம்பி வந்தவர்கள்
தலைமேல்
மூட்டை முடிச்சுகளுடன்
இரயில் நிலையங்களில்.

செல்போன் தெருநாய்கள்
'வல்லென' குறுஞ்செய்தியில்
ஊதிப் பெரிதாக்கி
ஊரைவிட்டு விரட்டிட நாடகம்.

செய்வதறியாது
குடும்பம் குடும்பமாக
கூட்டம் கூட்டமாக
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு
வரிசையில் நிற்கிறார்கள்.

ஒன்றும் ஆகாது
உதவிட நாங்கள் உள்ளோம்
அறிக்கை விடுகிறார்கள்
ஆண்மையற்ற அரசுகள்.

குண்டு வைத்துவிட்டு
குழியைத் தோண்டிவிட்டு
வெடிக்காது,விழமாட்டீர்
விளம்பரம் செய்கிறார்கள்.

சொந்த மக்களை
காக்க வக்கில்லாதவர்கள்
சந்தைகள் முழுக்க
ஏலத்துக்கு நிற்கிறார்கள்.

ஐ.நா
பாதுகாப்பு அவையில்
அங்கம் வகிக்க
ஆதரவு திரட்டுகிறார்கள்.

ஆடு,மாடு,கோழி கூட
அதனதன் முதலாளி காப்பில்
வீடில்லை வேலையில்லை
நாடும் நமக்கில்லை
நாடா?இது காடா?