Tuesday, September 9, 2014

தமிழ்தான்வித்தடா!

அம்மா என்றிட ஆவும் மறந்ததா?
           ஆனைப் பிளிறிட அசிங்கப் பட்டதா
இம்மண் உயிர்கள் இயல்பாய் இருந்திட
           இன்னல் ஏனடா இன்தமிழ் பேசிட

வள்ளுவன் குறளுக்கு ஈடிணை உண்டா?
           நாலடியார் போல் நன்னூலும்  உண்டா?
அவ்வைப் பொன்மொழி அகிலத்தில் உண்டா?
          அட்டா! பொன்னை மண்ணாய் நினைத்தாய்

சங்கத் தமிழ்போல் வாழ்க்கை இலக்கியம்
        சல்லடை போட்டு துழவிணும் கிட்டுமோ?
தெங்கின் இனிமைப் பாக்களால் கம்பன்
        தேனாய் வடித்த காவியம் கிட்டுமோ?

அகமும் புறமும் அரிய சொத்தடா!
         அனைத்து மொழிக்கும் தமிழ்தான் வித்தடா!
சிகரம் தொட்டதுன் சீரிளமை மொழியடா!
         சிந்தித்துப் பாரடா! செயலினில் இறங்கடா!

அடிமைப்  புத்தியை அறவே ஒழியடா!
        அன்னைத் தமிழினில் அனைத்தும் செய்யடா!
மிடுக்குடன் தமிழை கைகளில் ஏந்தடா!
        மீண்டும் தமிழை அரியணை ஏற்றடா!

            

Monday, July 21, 2014

கடமை

என்ன  நடந்தாலும்  ஏனென்று கேட்காமல்
மண்ணை மொழியை மறந்து கிடக்கின்றார்
திண்ணை உறக்கத்தில் தீந்தமிழ் மாந்தர்கள்
என்னே கொடுமை இது

பாவலர்கள் பாட்டினிலே பாசாங்கு பம்மாத்து
நாவலர்கள் பேச்சினிலே நாளெல்லாம் மாய்மாலம்
காவலர்கள் காட்டாட்சி காடுமலை ஆறுகொள்ளை
ஈவிரக்கம் இல்லையே இங்கு

வீதியிலே வன்முறை வெறியாட்டம் நாட்டினிலே
நாதியில்லை கேட்பதற்குச் சேதிகளை ஏட்டினிலே
ஊதிப் பெருக்கிடவே ஊரிலுள்ள ஊடகங்கள்
நீதியின்றி நிற்கின்ற தேன்

நீதிநூல் தாம்கற்றும் நிம்மதியாய்  வாழவழி
ஏதிங்கே தோழா இளைஞர்கள் வன்முறையில்
மோதி கொலையுண்டு வன்புணர்வில் மங்கையரை
ஊதி எரிக்கின்றார் ஊர்

நாட்டில் நடக்கின்ற காட்சிகளைக் காணுங்கால்
ஏட்டில் எழுதவொண்ணா ஏக்கம் விரிகிறது
போட்டிக்குப் போட்டியாய்ப் பொதுமக்கள் பொய்யணிந்து
நாட்டில் நடக்கின்றார் நன்கு

அவரவர் தங்கடமை ஆற்றுதற்கு இந்நாட்டில்
தவறாதுசட்டங்கள் தாள்களில் இருக்க
எவரும் ஏற்றிடவே எப்போதும் கேளாத்
தவறும் தடியரைத் திருத்து

Sunday, July 6, 2014

இந்தி(யா)?



ஆட்சி மாற்றம் நடந்த பின்னே
              அனைத்து விலையும் ஏறுது
ஆளும் கட்சி எதிரி கட்சி
              அடுக்காய் குற்றம் சாட்டுது
காட்சி மாறி கைகள் மாறி
               கவலைத் தீர வழியிலை
காட்டு தர்பார் ஆட்சி நாட்டில்
              கந்தல் மாந்தர் உய்விலை

மானியம் இல்லை என்று சொல்லி
                   மன்றில் பேசி திரியுது
மாந்தர் வாழ வழியே இல்லை
             மார்பை உயர்த்திக் காட்டுது
தானியம் விளைய தண்ணீர் இல்லை
             தாவா தீர்க்க முடியல
தான்தான் என்று தலையை தூக்கி
            ததிங்கி னத்தோம் பாடுது

மதப்பேய் பிடித்த காவிக் கூட்டம்
           மாநிலம் பிடிக்க அலையுது
மாயா ஜால வித்தை காட்டி
            மக்களை நெருங்கத் துடிக்குது
இதமாய்ப் பேசி இலவயம் நீக்கி
             ஏழைகள் வயிற்றில் அடிக்குது
இந்தியைத் திணிக்க இயன்ற வரையில்
             இறங்கி வேலைச் செய்குது

மாற்றம் வேண்டி ஓட்டு போட்டோர்
             மடியில் கையை வைக்குது
மன்னர் அம்பானி கைப்பா வையாய்
             மோடி அரசு கிடக்குது
ஏற்றம் வேண்டி ஏழை மக்கள்
          ஏற்றுக் கொண்டார் உங்களை
ஏழைக் கண்ணீர் எரிக்கும் நாளை
          எழுக  உணர்ந்து நடந்திட

Thursday, May 1, 2014

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்

பூமித் தோன்றிய நாள்முதலாய்            
          பொய்யும் புரட்டும் உலவுது
சாமியின் பேரால் சாமானியர்கள்
          சதியில் மாட்டித் தொலையுது
உழைக்கும் மக்கள் வாழ்க்கையிலே
         ஒருஅடி ஏற்றமும் முடியலே
கொழுக்கும் கொள்ளையர் வீட்டிலே
      கோடி கோடியாய் புரளுது

ஓட்டுக் கேட்டு வந்தவனெல்லாம்
           கோட்டைக் கொத்தள வாழ்விலே
வேட்டியும் இல்லைத் தொழிலாளருக்கு
           வெட்கம் கெட்ட நாட்டிலே
அடிப்படைக் கல்வி எல்லோருக்கும்
           அவசியம் என்பது தெரியலே
மடிக்கணினி ஏமாற்று நாடகம்
           மானங் கெட்ட நாட்டிலே

மகளிர் பயமின்றி நடமாட முடியல
          மகாத்மா பிறந்த மண்ணிலே
தகனம் செய்யவும் தனி சுடுகாடு
         தமிழ்த் தேசிய மண்ணிலே
காதலைப் போற்றும் காவியம் நூறு
        கழக இலக்கியம் முதலாக
ஆதலால் அனைவரும் காதலித்திட
         அனுமதி உண்டா? இல்லையே

எல்லாம் போலி வேடம் தானே
       ஏன் இன்னும் தெரியலே?
உள்ளம் முழுதும் மனுவின் ஆட்சி
        உயர்ந்த சாதி திமிராலே
கள்ளம் இல்லா ஏழைகள் இன்னும்
        கண்ணை மூடி இருப்பதா
எல்லாம் துணிந்து எதிர்ப்பீர்
      எத்தனை காலம்தான் ஏமாறுவீர்

Tuesday, April 1, 2014



தேர்தல் திருவிழா

கடைக்கோடி மனிதனும்
கண்ணுக்குத் தெரிகின்றான்
காலம் தான் மாறியதா?

இடைப்பட்ட ஐந்தாண்டு
எங்கிருந்தார் இவரென்று
எவருக்கும் தெரிகிறதா?

படைசூழ தொண்டர்கள்
பல்லிளித்து வாக்குறுதி
பாரத தேர்தல் விழா

தடையில்லா மினசாரம்
தாராள நீர் வழங்கல்
 தயங்காமல் கத்தினார்கள்

விடையென்ன தோழர்களே
விடிவில்லை நாட்டுக்கு
குடிகெடுத்தார் ஆண்டவர்கள்

ஊடகங்கள் வழியாக
உண்மைகளை மறைத்துவிட்டு
நாடகங்கள் நடக்குதிங்ஙே

மதம்பிடித்த பேயொன்று
விதவிமாய் பொய்யவிழ்த்து
மோடி வித்தைக் காட்டுதிங்கே

தாயென்று சொல்லிக்கொண்டு
தறுதலை நாயொன்று
தப்பாட்டம் ஆடுதிங்கே

ஒட்டுமொத்த தமிழர்களின்
ஒரே தலைமையென்று
ஓநாயும் பாடுதிங்கே

நாக்கைக் கடித்துக் கொண்டு
நன்றாக்க் குடித்து ஒன்று
நாடகங்கள் ஆடுதிங்கே

தமிழ்த் தேசியம் பேசி
தமிழ்நாட்டில் திரிந்ததெல்லாம்
தடாலடியாய் விழுந்த்திங்கே

கப்பலிலே பணம் வருது
காருகளில் நகை வருது
அப்பப்பா தாங்கவில்லை

கூரையேறி கோழி பிடிக்கா
கூட்டமோ கோட்டையேற
கோலாட்டம் ஆடுதிங்கே

விடுதலை நாள்முதலாய்
வேட்டையிட்ட கூட்டமின்று
நாட்டைக் காப்போம் என்கிறது

விழாக்கால சலுகைக்கும்
விருந்துக்கும் மதுவுக்கும்
விற்காதீர் உங்கள் வாக்கை

அவமான சின்னங்களை
ஆதரித்து நிற்காதீர்
மண்மானம் காக்க வாரீர்

சிந்தித்து வாக்களிப்பீர்
குடியரசை நிலைக்க வைப்பீர்