Sunday, May 20, 2018

சுமைதாங்கி

சுமைதாங்கி
மசூதி இடிப்பதற்கு
காவிகளின் கரசேவை
தாஜ்மகலை காப்பாற்ற 
தளிரே உன் கரசேவையோ?
இடித்தாலும் இடிப்பான்
 இந்த இந்துத்வா கூட்டமென்றா
இளமொட்டே கல்சுமந்தாய்
வயிற்றுக்கு
 உணவில்லை
வலியோடு உழைக்கின்றாய் 
பயிற்றுவிக்க வக்கில்லை
பாரதத்தாய் நாணுகிறாள்
சும்மாடு தலைவைத்து
சுமைதாங்கி ஆனாயே?
அம்மாடி உன்னுழைப்பில்
அடுப்பெரித்து
உன் வயிறு பிழை்க்கிறது
ஊர்வயிறு எரித்துத்தான்
 பலர் தொப்பை பெருக்கிறது
நீபடித்து உயரும்நாள் தான் 
பாரதத்தின் விடுதலைநாள்
நீட்டென்னும் நீசனால் 
நிம்மதி போனதிங்கே
போட்டித் தேர்வுகளால்
போராட்ட வாழ்க்கையிங்கே
ஏட்டில் எழுதவொண்ணா
எத்தனையோ கொடுமையம்மா
அத்தனைக்கும் ஒரேவழி
அரும்பே கல்விதான்

(தலையில் கல் சுமந்திருக்கும் சிறுமி படத்துக்கு எழுதிய கவிதை)

வரியாட்சி

வரியாட்சி
பாலைவனக் கப்பல்போல 
பாவிமனம் போகுதடா
பாதையெல்லாம் மணற்குவியல்
பருகத்துளி நீருமின்றி
காலையில்  கண்விழிச்சா  
கட்டாயம் அறிவுப்பொன்று
கலக்குதடா வயிற்றில் புளி
கையிருக்கும் காசு காணாமல் போய்விடுமோ?
கட்டாயம் சுவாசிக்க வரி கவர்மெண்டு போட்டிடுமோ?
இணையர் பேசிடவும் இணையர் வரி வந்திடுமோ?
இன்றுமுதல் உந்தன் பேர் இதுதான் என்று கூறிடுமோ?
இரவெல்லாம் இதேநினைப்பில்
இயல்புநிலை இல்லையடா?
நீர்நிலைகள் அத்தனையும் 
நிரந்தரமாய் அழிந்ததடா
நீர்வானம் பொழிந்தாலும் 
நிந்தனையே மிஞ்சுதடா?
போர்க்கோல வாழ்க்கையிலே  
பொல்லாப்பு சேருதடா
நீர்க்கோலம் அத்தனையும்
பாலைவனம் ஆகுதடா
ஆர்வந்து  காப்பற்றயிந்த
அகிலமும் பிழைக்குமடா?

மழை

மழை
ஓய்வெடுத்து ஓய்வெடுத்து 
பெய்கிறது.
அடுத்து 
பெய்யாது என 
நினைக்கும்போது 
வெளுத்து வாங்குகிறது
இரவு பணிக்கு 
செல்லும் காவலாளி போல
பகலில கொஞ்சம் கொஞ்சம்
நேரம். தூங்கி
இரவு முழுதும் 
விழித்துக்கொண்டு 
கொட்டித்தீர்க்கிறது
எதையும் 
மழையை நம்பி திட்டமிடவும்
நம்பாமல். இருக்கவும் 
முடியவில்லை
மழை மழையாகவே இருக்கிறது
நாம் தான் நாமாக இல்லை


பெண்

பெண்

ஆற்றல் மறைந்திருக்கும் அழகு தேவதை
ஆயுள் முழுக்க உழைக்கும் பெண்
அதிசய தூரிகை
ஆடியும் அதிசயக்கும்
அழகு ஊர்வசி
ஆடித் தள்ளுபடி தள்ளு நீதான் 
படைப்பு பூமகள்
கூந்தலழகு என்று சொன்னால்
குளிர்ச்சி வேண்டாமே
குட்டையாக வெட்டிக்கொண்டு
குவலயம் வெல்லு!
குழந்தை பெற்று கொடுப்பதற்கா
குவலயம் வந்தாய்
குனிந்து புதைந்து அழுவதற்கா
குடித்தனம் கண்டாய்
சம உரிமை இல்லை என்றால்
சற்று சிந்தித்து பார்
சாதித்து பெறும் வரைக்கும்
முட்டி மோதி பார்
சக உயிராய் நடத்தும் வரை
சண்டை போட்டுப்பார்
யுகயுகமாய் அடிமைபட்டாய்
உரிமை பறித்து வாழ்!
ஆசை வார்த்தை பசப்புகளை
அடியோடு தள்ளு
மோசடியை எதிர்த்து வென்று
முன்னேறி நில்லு
நிலவு போல தோற்றம் இருந்தும்
நெருப்பாக எரிப்பாய்
களவு காமுகர் அழித்து
சரித்திரம் படைப்பாய்
அழகு பதுமை அல்ல நீயும்
ஆற்றல் திருமகள்
பழகி அறிந்து காட்டு உந்தன் 
படைப்பு தீவிரம்

மே நாள்

மே நாள்
உயிர்களைக் கொடுத்தோம் 
உரிமையைப் பெற்றோம் 
உழைப்பாளர் ஒன்று சேர்ந்திடுவோம்

மழையோ வெயிலோ
உழைத்து களைத்தோம்
மாபெரும் உலகை நாமே சமைத்தோம்
மதங்களைக் கடந்து சாதிகள் கடந்து
மனதால் தோழராய்
அணிவகுத்தோம்

வீதியில் இறங்கி் விடியலை இழுத்து
வியர்வை சிந்தியவர்
முழங்கிடுவோம்

வென்ற உரிமைக்கு எந்த குந்தகமும்
விளையாமால் நாமும்  காத்துநிற்போம்

எந்திர தந்திர சூழ்ச்சிகளால்
இருளே சூழுது நம்வாழ்வில் 

உணவை உயிரை கொடுக்கும் உழவர்
கனவாய்ப் போனது விவசாயம்

காவிரி மரித்து கடைமடை ஆனது சுடுகாடாய்

காலம் முழுதும் உழைப்பவர் கனவு
கானல்நீரா சொல்தோழா!

பெண்கள் உழைப்பை பெரிதாய் போற்றிட
ஆண்கள் உறுதி எடுத்திடுவோம்

கண்கள் தொழிலாளர் கவலை தொலைத்து
களிப்பில் திளைத்திட வழிசெய்வோம்

ஓய்வும் உறக்கமும் உரிமை என்பதை நினைந்திடுவோம்

உழைப்புக் கேற்ற  ஊதியம் தன்னை
உறுதி செய்வோம்

கைகள் உயர்த்தி 
காற்று கிழிபட
 உரிமை வென்றிட முழங்கிடுவோம்

காலம் நமது கையில் வரும்வரை 
கோலம் முழுதும் முழங்கிடுவோம்

மேநாள் எங்கள் உரிமை நாளென
மேதினி அதிர்ந்திட முழங்கிடுவோம்

மேநாள் எங்கள் மேன்மை நாளென
மீண்டும் மீண்டும் முழங்கிடுவோம்