Monday, July 8, 2013

காதலா? சாதியா?

காதலை எழுதும் கவிஞர்களே
கவிதை இனியும் எழுதாதீர்
கதையில் படத்தில் கூட
காதலை இனியும் வைக்காதீர்

தேடித்தேடிக் காதலை எடுத்தீர்
பாடிப் பாடிக் காதலைக் கெடுத்தீர்

இளவரசன் திவ்யா காதலுக்காக
இங்கே எவனும் சேர்ந்தீரா?

தருமபுரியில் வீடுகள் எல்லாம்
தரைமட் டமானதே அழுதீரா?

நாடகக் காதல் பரப்புரைக் கேட்டும்
நடிகர் நடிகை யார் வந்தீர்?

கோடிக் கோடியாய்ப் பணத்தைக் குவித்தீர்
கோடியில் ஒருவர் கேட்டீரா?

சாதிமறுப்பு திருமணம் நடத்தி
சாதனை என்று நடித்தோரே
ஆதிதிராவிடன் காதலுக்கு
ஆதரவுக் கரங் கொடுத்தீரா?

மேடையில் நன்றாய்  முழங்கினீரே
பாடையில் இளவரசன் பார்த்தீரா!

நேசம் வைத்து நெஞ்சம் கலந்த
பாசப் பறவைகள் பிரித்தீரே!
வேசம் போட்டு வெளியில் பேசி
வீணாய் உயிரைக் குடித்தீரே!

பாட்டாளி என்று கத்தும் நாய்கள்
பாவச் செயல்கள் பொறுத்தீரே
கூட்டாளியாகி இளவரசனை
குழியில் தோண்டிப் புதைத்தீரே

பாரதி பாவேந்தன் பெரியார் மண்ணில்
பாவிகள் சாதியில் தொங்குகின்றார்
யாரடா இந்த நாய்களென
எவனும் கேட்க துணிவில்லை

மலரும் மணமும் இணைந்திடல் போலே
மனமும் மனமும் கலந்தோரை
காடு வெட்டிகள் பிரித்துவிட்டான்
காதல் உயிரைப் பறித்துவிட்டான்

சாக்கடை தன்னில் உழன்றாலும்
சாதிப் பெருமைகள்  பேசுகின்றான்
சீக்கிரம் ஆட்சியைப் பிடித்திடவேண்டி
சீண்டி சாதிவெறித் தூண்டுகிறான்

மனதைக் கொடுத்தக் காரணத்துக்கு
மரணம் தானா பரிசாகும்?
அன்பைக் கொடுத்த காரணத்துக்கு
அழிவு தானா பரிசாகும்?

இளவரசனின் மரணம் ஒன்றும்
இளிச்ச வாயன் மரணமில்லை
இறுமாப்பு சாதிவெறி அழிக்கும்
இடியாய் இறங்கும் மரணமிது

வேடிக்கைப் பார்த்த தமிழினமே
வெட்கம் மானம் சொரனையெங்கே?
கோடிக்கால் பூதமென
குடிக்கும் சாதிவெறியர் உயிர்