Friday, June 17, 2011

ஏன் வேண்டும் கவிதை?

துள்ளிவரும் சொல்லாலே உணர்வைத் தூண்டி
தூங்காமல் எழுப்பவேண்டும் கவிஞர் பாட்டு
அள்ளியவர் தருகின்ற அமுத பாடல்
அடிமைகளை ஆர்ப்பரிக்க வைக்கும் வேட்டு
எள்ளிநகை யாடிவிடும் எத்தர் தம்மின்
எலும்புகளை ஒடித்துவிடும் ஏற்றப் பாட்டு
கொல்லியென குலத்துரோகம் புரிவோர் ஆவி
குடித்துவிடும் கூர்மதியார் கூறும் பாட்டு

பல்லிளித்து பாசாங்கு புரிவோர் வெட்டி
பாடையிலே ஏற்றிவிடும் பட்டாக் கத்தி
நல்லிளைஞர் நரம்புகளில் நாணை யேற்றி
நச்சுகளை நசுக்கிவிடும் நல்ல பாட்டு
வல்லவராய் நல்லவராய் வளர்வோர் வாழ
வழிவகைகள் வழங்குகின்ற வளமார் சீட்டு
தொல்லுலக மக்களெல்லாம் போற்றும் வண்ணம்
தூயவரே தொடர்ச்சியாக தருவீர் பாடல்