Sunday, June 15, 2008

விண்ணில் பறக்குது விலைவாசி

விண்ணில் பறக்குது விலைவாசி
வீனாய் எதற்கிந்த அரசாட்சி
கண்ணில் தெரியுது சுடுகாடு - ஆட்சிக்
கட்டிலை விட்டு நீயோடு

கச்சா எண்ணெயின் விலையேற்றம்
காரணமா மக்கள் கழுத்தறுக்க
பிச்சைக்காரராய் எங்களை மாற்றும்
பிணந்திண்ணிக் கழுகாய் ஆனதுமேன்

ஆயிரம் கோடி மானியங்கள்
அம்பானி சொத்தை அதிமாக்க
வாய்வீரம் பேசும் சிதம்பரங்கள்
வட்டி முதலாளிகள் கைக்கூலி

அட்டையென உறிஞ்சும் கடனட்டை-நாட்டை
அடிமையாக்கும் உலக வங்கி
பெட்டையெனப் புலம்பும் ஆட்சியாளர்
பெருத்த ஜனத்திரள் தேசமிது

உள்நாட்டு எண்ணெய்வளம் தனியாருக்கு
உலகச் சந்தையில் கையேந்தல் பன்னாட்டு வணிகருக்கு கால்பிடிக்கும்
பச்சோந்தி அரசியல் வாணர்கள்

நச்சுக் கொள்கைகள் பின்னோட்டம்
நாட்டை அடிமையாக்கும் முன்னோட்டம்
மெச்சும் அமெரிக்க நாயெனவே
மேனிக் குனிந்து தப்பாட்டம்

அப்பாவிகள் அல்ல எம்மக்கள்
அடுத்த தேர்தல் அவர்கையில்
தப்பைத் திருத்திக் கொள்ளுங்கள்
தானே விலையைக் குறையுங்கள்

தவறினால் தண்டனை நிச்சயம்
தலைகீழ் மாற்றங்கள் நிச்சயம்
பவரினை மறந்து துரிதமாய்
பொருட்களின் விலைகளைக் குறைத்திடுக