Saturday, December 25, 2010

சேவகர்

திடீரென்று தெருக்களில்
சமூக சேவகர்கள்
படையெடுக்கின்றார்கள்.

குப்பைகளை அள்ளுகிறார்கள்
குழந்தைகளைக் குளிக்கவைக்கிறார்கள்
தொப்பைகளைத் தூக்கிக்கொண்டும்
தெருத்தெருவாக நடக்கிறார்கள்

மகளிர் குழுக்களுக்கு
மாமன்கள் போல
புடவைகள் கொடுத்து
போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்.

ஒரு கிலோ
சர்க்கரைக் கொடுத்து
ஒரே நாளில்
ச.ம.உ ஆகிடத் துடிக்கிறார்கள்.

பொதுநல விரும்பிகளாக
பொழுதெலாம் காட்டிக்கொண்டு
அறுவடை செய்திட
அடுத்த தேர்தலை எதிர்நோக்குகிறார்கள்.

மரண வீடுகளில்
மாலைகளோடு வந்து
அழுபவர்களிடத்திலும்
ஆதரவு திரட்டுகிறார்கள்.

தேர்தல் முடிந்துவிட்டல்
திரும்பிப் பார்க்காமல்
நான்காண்டு காலம்
காணாமல் போவார்கள்.

சமூக சேவகர்கள்
நடிப்பையே மூலதனமாக்கி
நாட்டு மக்களை
மொட்டையடிப்பார்கள்.

முடி வளரும்
என்ற நம்பிக்கையிலேயே
நன்றாக மறுபடி மறுபடி
தலையை நீட்டும் பொதுமக்கள்

Wednesday, November 24, 2010

பெருவலி

எழுதிட நாளும் நினைக்கிறேன்
எதையோ எழுதிக் குவிக்கிறேன்
முழுவதும் கவிதை என்றிட
முடியாமல் நானும் தவிக்கிறேன்
பழுதிலாப் பாடல் படைத்திட
பலமுறைக் காகிதம் கிழிக்கிறேன்
வழுவிலா வாழ்க்கை அமைந்திட
வரிகளில் கருத்தை படைக்கிறேன்

படித்திடப் புத்தகம் திறக்கிறேன்
பார்த்து வேர்த்து மலைக்கிறேன்
வடித்திடக் கவிதை நினைக்கிறேன்
வாய்க்கும் நெஞ்சுக்கும் நடிக்கிறேன்
துடித்திடும் நெஞ்சின் வலிகளை
தும்பைப் பூதாள் இறக்கிட
படித்திடும் வாசகர் அடைந்திட
பக்குவம் தெரியாமல் விழிக்கிறேன்

புவியுடை பொறுமை இல்லாமல்
புதுப்புது முயற்சிகள் செய்கிறேன்
எதுவென கவிதைப் புரிபட
இதுநாள் வரையினில் முயல்கிறேன்
புவியினைப் புரட்டிய புலவரே
புதுமைப் பூக்கும் முத்தமிழே
கவிதை எழுதிடக் கைகொடு
காலம் நிலைத்திட மடிகொடு

Monday, November 8, 2010

புதுவையில் பாரதி

எட்டய புரத்தினில் எழுந்த நெருப்பவன்
எங்கள் கவிபாரதி
கிட்டிய வரமென கீர்த்திப் பெரிதென
கிடைத்த நவபாரதி
தொட்டில் குழவியும் தூயப் பெரியோரும்
தோழமைக் கொண்டிடுவார்
கட்டிய வேட்டியும் காலில் சப்பாத்தும்
கண்டவர் மெய்சிலிர்ப்பார்

புதுவையில் தங்கியப் புரட்சி நெருப்பவன்
புதுமை பலபடைத்தான்
இதுவரை எழுதாத இறவாத இலக்கியம்
இங்கேதான் படைத்தான்
வதுவையர் உரிமைக்கு பாஞ்சாலி சபதம்
வார்த்து எழுதிவைத்தான்
புதுமையாய்க் குயில்பாட்டு புரட்சியை இங்குதான்
புடம்போட்டு பாடிவைத்தான்

மணக்குள விநாயகர் மாண்புகள் போற்றியே
மகத்தான பாடல் படைத்தான்
கணக்கின்றி கவிதைகள் கண்ணன் மேல்பாடி
காதலை எடுத்துரைத்தான்
உணர்வோடு குயில்தோப்பில் உலாவந்தவன்
உட்பொருள் புரியவைத்தான்
உணவுக்கு வைத்தரிசி உற்சாகப் படையலிட்டு
உறவாக காக்கை நினைத்தான்

அதிகாலைப் பொழுதினில் அலைகடல் மணலில்
ஆனந்தமாய் நடப்பான்
உதிக்கின்ற சீரியன் மறைகின்ற காட்சியும்
உணர்வோடு கண்டுகளிப்பான்
நிதியில்லை என்றாலும் நெஞ்சினை நிமிர்த்தியே
நித்தமும் நடைபயில்வான்
நதிபோலே எப்போதும் தடைதாண்டி தம்பயணம்
நன்றாக தொடர்ந்துசெல்வான்

பாரதி வந்ததால் பழையன கழிந்துமே
புதுச்சேரி யானதிங்கே
பாரதி வாழ்ந்ததால் பாரத தேசமே
பார்வையைத் திருப்பியது
பாரதி காட்டிய புதுநெறிப் பாவலர்
பாட்டையை மாற்றியது
பாரதி ஓட்டிய 'பா'ரதம் புதுமைக்குப்
பாடமாய் ஆனதிங்கே

பாரதிக் கழற்றி கனகலிங்கம் ஏற்றிப்
பூணூலைப் புனிதமாக்கினான்
பாரதி பூனைப் பாட்டாலே ஒற்றுமை
பாரினில் வழிகாட்டினான்
பாரதி புதுமைக்கு புதுவையே முதற்களம்
பாடுவோம் தோழர்களே
பாரதிக் காப்பென்று பல்லாண்டு பாடுவோம்
பாடுவோம் வாருங்களேன்

Sunday, August 22, 2010

மாற்றிக் காட்டுவோம்

மாற்றம் என்பதே மாறாத் தத்துவம்
மார்க்சிய அறிஞரின் மந்திர வாசகம்
ஏற்றம் பெற்றிட ஏழைகள் வாழ்வில்
ஏற்றுவோம் உரிமை விளக்கினை நாளும்
கூற்றுவன் நினைத்து குலைந்துப் போகாமல்
வேற்றுமைகள் போற்றி பிரிந்து நிற்காமல்
மாற்றிக் காட்டிட மானுட சமுத்திரம்
போற்றிக் காத்திட புறப்படுத் தோழனே

கேடுகள் சூழ்ந்தக் கீழ்மை உலகினைக்
கிளர்ச்சி செய்தே கீழ்மேல் புறட்டி
மேடுகள் பள்ளம் ஓர்மை யாக்கி
மேதினி எங்கும் பொதுமைப் புகுத்திக்
கோடுகள் அற்றக் கோளப் படத்தினைப்
கொண்டே உலகில் குடிகள் வாழ்ந்திட
பீடுடை பொதுமை உலகினை நாமும்
படைப்போம் வாரீர் பாரை நன்றாய்

Tuesday, August 17, 2010

உடல் தானம்

குருதிக் கொடையளிக்க
கூவி அழைத்தாலும்
கூப்பிட்டால் வருவோர் யார்
குமுகாய வீதிகளில்

உறுப்பு கொடையளிக்க
உற்றாரும் உறவுகளும்
விருப்போடு வருவதில்லை
வீணாச்சு பல உயிர்கள்

கண்ணப்பன் விழிக்கொடை
கர்ணனவன் குருதிக்கொடை
கர்மவீரன் ஜிதேந்திரன்
காட்டிய உடல்கொடை

வாழும் தலைமுறைக்கு
வழிகாட்டி சென்றபின்னும்
பாழும் மடமைகளால்
பார்த்திருத்தல் சரிதானா?

மூளை இறந்தபின்னே
முழு நிலமை புரிந்தபின்னே
ஆளை இழந்தபின்னே
அழுது புலம்புவதேன்?

மரங்கூட கிளைகொடுத்து
மண்ணில் பலமரங்கள்
வரமாக அளிக்கிறதே
வாழக் கற்றுக் கொள்வோம்

செயலிழந்த உடலுக்குள்
சாகாத உறுப்புகளை
இயலாத மாந்தருக்கு
எடுத்து வைத்தல் நலந்தானே?

செத்தபின்னே சிவலோகம்
செல்லுவதை யாரரிவார்
புத்தியுடன் உடல்கொடை
பூமிக்கே பெருங்கொடை

Thursday, July 29, 2010

செம்மொழி

பிறந்த பெருமையினை
மறந்த தமிழர்களும்
சிறந்து வளர்ந்த தமிழ்
செம்மொழியாய் ஆனதென்று
செம்மார்ந்து நிற்க்கின்றார்.

வழக்கொழிந்த வரிசையிலே
வண்டமிழை நிறுத்துதற்கு
கழைக் கூத்தாடி போல
காட்சிகளை நடத்துகின்றார்.

பிள்ளைமொழி தமிழில்லை
பேச்சுமொழி தமிழில்லை
பள்ளியிலே தமிழில்லை
பல்லிளித்தே புகழுகின்றார்

இருப்பதைக் காப்பதற்கே
இயலாத ஈனர்கள்
பெருக்குவதாய் புளுகுமூட்டை
பேணர்கள் வைக்கின்றார்.

நெருக்கடிகள் வந்தால்தான்
நினைக்கின்றார் தாய்மொழியை
செருப்படிகள் பட்டபின்பே
செந்தமிழை சீண்டுகின்றார்

வருவோன் போவோன் எல்லாம்
வாய்கிழியப் பேசுகின்றான்
வருவாயை சுருட்டிடவே
வாழ்க தமிழ் என்கின்றான்

யாரென்ன செய்தாலும்
எந்நாளும் இளமையுடன்
எந்தமிழும் விளங்கிடுமே
எதிரிகளை இனங்காண்போம்

Friday, April 30, 2010

மே நாள்

இத்தரை மீதினில் எத்தனைத் தோழர்கள்
நித்தமும் உழைத்து நிலத்தினைத் திருத்தினர்
கொத்தடி மையாக கூலியா ளாக
அத்தனை வலியும் தாங்கிக் கிடந்தனர்

சிகாகோ நகரில் சேர்ந்த தொழிலாளர்
சிந்தித்து பேசி சீரிய முடிவினை
சிகரமாய் எடுத்தனர்;சிவப்புக் கொடியினை
சேர்ந்து பிடித்தனர்; ஓங்கி முழங்கினர்

கூழுக்கும் கூலிக்கும் கூவி அழுவதா?
கூனராய் எப்போதும் குனிந்தே கிடப்பதா?
வேலிக்குள் அடைபட்ட விலங்கெனக் கிடப்பதா?
வேழமே எழுந்துவா விலங்கை ஒடித்துவா

ஆலைக்குள் அகப்பட்டு ஆவியை விடுவதா?
ஆளுக்கு ஆள்மிரட்ட அடிபணிந்து வீழ்வதா?
சோலைக்குள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க
வேலைக்குள் வருவாய் விழிப்பாக இருப்பாய்

எட்டுமணி நேரவேலை எம்தோழர் வென்றநாளை
கொட்டிக் கொட்டி எல்லோரும் கூட்டமாய்
பட்டி தொட்டி எல்லாமும் பாடிக் களிப்போமே
தட்டித் தட்டிக் கைசேர்த்து தாளமிடுவோமே

ஆண்களும் பெண்களும் அணிதி ரள்வோமே
ஆனந்தக் கும்மி யடித்து மகிழ்வோமே
ஆனவ முதலாளிக் கொட்டத்தை யடக்க
பூணுவோம் உறுதி பாடிவா தோழனே

சேர்ந்துவா தோழனே செகத்தினை மாற்றுவோம்
செம்மார்ந்து தொழிலாளர் செருக்கினைப் போற்றுவோம்
ஆர்த்துவா தோழனே அணிவகுத்து செல்லுவோம்
ஆயிரம் தடைதகர்த்து மேநாள் போற்றுவோம்

Thursday, April 29, 2010

புரட்சிக்கவி

பாவேந்தன் பாட்டென்றால் அனல்பறக்கும்
பழமூட வழக்கங்கள் அழிந்தொழியும்
கூவுகின்ற குயில்பாட்டும் புரட்சியாகும்
குத்தீட்டிக் கவிதைகள் குவிந்திருக்கும்

ஆரியத்தை அழித்தொழிக்க அடியெடுத்தார்
ஆட்சிமொழி தமிழாகத் தடியெடுத்தார்
ஓரிடத்தில் குட்டையெனத் தேங்காமல்
ஊருலகம் பாட்டாலே சென்றடைந்தார்
யாரிடத்தில் உரைத்தாலும் அவர்பாட்டை
ஊறிவரும் உணர்வுவீச்சு கண்டிருப்பீர்
சூரியனாய் சுட்டெரிப்பார் கொடுவழக்கம்
சுத்ததமிழ் வீரர்பா வேந்தர்தான்

தமிழுக்கு எதிராக எவரேனும்
தம்கருத்தை வெளியிட்டால் கொதித்தெழுந்து
துமிக்கியென வெடித்திடுவார்; பாவேந்தர்
தூள்தூளாய் ஆக்கிடுவார் தமிழ்பகையை
இமியளவும் ஈரமிலா நெஞ்சத்தாரை
இழுத்துவந்து தெருவினிலேப் போட்டுதைப்பார்
தமிழ்த்தெருவில் தமிழ்க்கடையில் பெயர்ப்பலகை
தமிழிலேயே வைத்துவிட ஆனையிட்டார்

பொதுவுடைமை பகுத்தறிவுப் போர்வாளாய்
புதுவுலகம் படைக்கின்றப் புரட்சியாளன்
வதுவையர் உயர்த்துகின்ற காவியங்கள்
வழங்கியவன் வணங்காத பாட்டுவேந்தன்
முதுதமிழை மூச்சாகப் போற்றியவன்
மூடராக இருந்தவரை மாற்றியவன்
எதுவரினும் தன்கருத்தை நிறுவியவன்
ஏற்றமிகு கவிச்சித்தன் பாவேந்தன்

Saturday, April 10, 2010

மகளிர் இட ஒதுக்கீடு

உன்னில் பாதி பெண்மையடா
ஒதுக்கல் என்ன நீதியடா
எண்ணம் முழுதும் ஆதிக்கம்
ஏய்த்தாய் பெண்ணைப் போதுமடா
என்னக் கொடுமை ஆடவரே
இன்னும் மசோதாக் கலந்தாய்வு -ஒருக்
கண்ணில் வெண்ணெய் சுண்ணாம்பு
கதையாய் இன்னும் தொடருவதா?

சரிபாதி உரிமை உடையவளை
சனாதனம் பேசி ஒடுக்குவதா?
மரியாதை தானா மகளிரையே
மட்டம் தட்டிப் பேசுவது
உரிய இடத்தை மகளிருக்கு
உடனே வழங்கல் கடமையடா
சரியாய் சொல்வீர் பெண்ணுரிமை
இனாமா? இல்லை வாழ்வுரிமை

அச்சம் நாணம் தூக்கியெறி
அடிமைத் தளையை உடைத்தெறி
மிச்சம் மீதி உண்ணல் ஒழி
மீட்டு உரிமை நாட்டிவிடு
அச்சன் கணவன் வல்லாண்மை
அடங்க மறுத்து அத்துமீறு
பிச்சைய யல்ல ஒதுக்கீடு
பெண்ணே எதற்கு கூப்பாடு?

கொடையாய் மென்மை பெற்றவளே
கொடுமை எதிர்க்க வா வெளியே
நடையில் அன்னம் ஆனாலும்
நாட்டு உனது பிறப்புரிமை

Tuesday, April 6, 2010

செம்மண் குட்டை

வடக்கே ஆறுகளில் வெள்ளம்
வறட்சியில் வாடும் தெற்கு வாழ்ந்திட
மறுத்திடும் வடவர் உள்ளம்

Friday, February 26, 2010

தலையும் கொடுப்பேன்

வயிறே எனக்கு வாழ்க்கையில்லை
வாழும் தமிழே என்விருப்பம்
உயிரும் தருவேன் தாய்தமிழ்க்காய்
உலகும் எதிர்ப்பேன் தமிழ்மொழிக்காய்
கயிறே என்னைக் கவ்விடினும்
கலங்க மாட்டேன் தலைகொடுப்பேன்
துயரை மறந்து தூயதமிழ்
துலங்கிட நானும் தொண்டுசெய்வேன்

தாயும் தந்தையும் தவழ்ந்தமண்ணில்
வேறி னத்தான் வேறூண்ற
நாயாய் காலை நக்கியவன்
நம்பிக்கைப் பெற்று இருப்பேனா?
பாயும் புலியாய் பகைமுடிப்பேன்
பைந்தமிழ் வீரம் காத்துநிற்பேன்
நோயாம் அயல்மொழி மோகத்தை
நொடியில் விரைந்து அழித்தொழிப்பேன்

வாழும் வரைக்கும் வளர்தமிழின்
வளர்ச்சிக் காகக் கைகொடுப்பேன்
சூழும் பகையைச் சுட்டெரித்து
சுடர்விட தமிழ்மொழிக் காத்திடுவேன்
வீழ்ந்த தமிழர் வீரமண்ணை
விரைவில் மீட்டு விடுதலைப்பண்
ஈழ மண்ணில் இசைத்திடுவேன்
இயலும் வரையில் ஓயமாட்டேன்

Monday, February 22, 2010

எழுந்து வாடா

தன்னினத்தை எல்லோரும் உணருகின்றான்
மண்மொழியைக் காத்திடவே ஓடுகின்றான்
தன்மானம் இல்லாத தமிழா நீதான்
அன்னை நாடெனவே புலம்புகின்றாய்
அண்மையிலே ஐதராபாத் நகரத்திலே
அன்புதமிழ் இளைஞரும் யுவதிகளும்
நன்மதிப்பெண் பெற்றார்கள் பொதுத்துறையின்
பொன்னான வேலைக்கு ஆளெடுப்பில்

தெலுங்கானா கோருகின்ற தெலுங்கரெலாம்
வலுக்கட்டா யமாக ஒன்றிணைந்து
இளைஞர்கள் அனைவரையும் ஓடோட
கொலைவெறியால் அடித்துதைத்து விரட்டினார்கள்
வலுவாக தம்மெதிர்ப்பை யாருமிங்கே
சிலர்கூடக் காட்டவில்லை தமிழர்களே
குலமானம் காத்திடவே துணியவில்லை
சிலைபோலே இருக்கின்றார் அவமானம்

தமிழ்வீரன் மாண்டாலும் கலங்கமாட்டாய்
தமிழ்நதிகள் காய்ந்தாலும் கலங்கமாட்டாய்
உமிழ்நீரின் சுவைகண்டு உறங்குகின்றாய்-சாதி
சிமிழுக்குள் சந்ததியைப் புதைக்கின்றாய்
தமிழ்நாட்டை திரைநாய்க்கே விற்றுவிட்டாய்
தமிழ்வீட்டை தொடர்களிலே தொலைத்துவிட்டாய்
இமியளவும் இனமானம் இல்லையாடா
உமியாக வாழ்வதிலோர் பொருளுமுண்டா

இனத்துக்கோ மொழிக்கோ இன்னலென்றால்
கணத்துக்குள் களமிறங்கி ஆடவாடா
பணத்துக்கும் புகழுக்கும் பல்லிளித்தால்
உனக்கேது உடலுக்குள் தமிழ்குருதி
அனலாக அடங்காது தமிழ்பகையை
சினங்கொண்டு சீறியுடன் எரிக்கவாடா
பிணமாகக் கிடக்காமல் பீடுகொண்டு
இனமானத் தமிழனாக எழுந்துவாடா

Friday, February 19, 2010

வன்பகடி

வன்பகடி செய்கின்ற வன்முறை மாணாக்கர்

தம்தவற்றை தாமறியப் பெற்றோரே -நன்முறையில்

கண்ணியமாய் நல்லொழுக்கம் கற்பித்து காலமெல்லாம்

மண்ணில் வளர்ப்பீர் அறம்

Sunday, January 3, 2010

மெழுகு

அழகுக்காப் பெண்களின் தேகம்

அன்றாடம் விளம்பரத்தில் மோகம்

ஆடவரின் உள்ளாடை

அனைத்தபடி நிற்கின்றார்

மெழுகாக விளம்பரத்தில் சோகம்

Friday, January 1, 2010

தமிழா தமிழா

உலகம் முழுமையும் 2010 புத்தாண்டைக் கொண்டாடுகின்ற இந்த வேளையில் உலகத்தோடு ஒழுகும் தமிழர்களும் கொண்டாடுவது நல்லது.ஆனால் தொண்மையான ஒரு இனம் ,பழங்காலந்தொட்டே இலக்கிய வளமும் இலக்கண செழுமையும் கொண்ட ஒரு ஒப்பற்ற தாய்மொழியை உடைய ஒரு இனம்,தன் இனத்தின் -மொழியின் மேன்மையை அறியாமல் அந்நிய மொழியின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் மோகம் கொண்டு அலைவது தேவையா?நம்முடைய குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர் இடுவதை மறந்துவிட்டோம்.பண்டைய பழக்க வழக்கங்களைத் தொலைத்துவிட்டோம்.இப்படி நமக்காண அடையாளங்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம்.எதனால் என்று யாராவது சிந்தித்தோமா?.பழம்பெருமைப் பேசுவதாக பலர் நினைக்கலாம்.ஆனால் பழமையை மறந்தவர்கள் வரலாற்றை மறந்தவர்களாகிறோம் என்பதை எத்தனை பேர் நினைக்கிறோம்.
சரித்திரத் தேர்ச்சி கொள் என்ற பாரதியின் வாக்கை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.சரித்திரம் பாடமாகப் படித்தால் மட்டும் ஆகாது.அதில் தேர்ச்சி இருந்தால் தான் ஒரு இனம் தன் விழுமியங்களை பாதுகாக்க முடியும் என்பது பாரதியின் வாக்கு.உலகலாவியப் பார்வை வேண்டும் அதே சமயத்தில் தன் மொழி ,இனம் ,மண் குறித்த அக்கறை ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும் .அப்படி நினைக்கிற இனம் தான் தன் அடையாளங்களை இழக்காது அடுத்து வருகிற தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்க முடியும் .
ஆங்கிலப் புத்தாண்டை அமர்க்கலமாக்க் கொண்டாடிய உலகத் தமிழர்களே! அடுத்து தைத்திங்கள் முதல்நாள் நம் தமிழ்ப் புத்தாண்டு வருகிறது.இதைவிடவும் அதிக உற்சாகத்தோடு கிராமச் சமுதாயமாக்க் கொண்டாடியதுபோல் ஊரோடும் உறவோடும் கொண்டாடி மகிழ ஆயத்தமாகுங்கள்.தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு எனபதை நிரூபிக்கும் வண்ணம் ,கொண்டாடி மகிழ கூடி வாருங்கள்.
தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்லுங்கள்.
தமிழ், தமிழர் பகைகளை வெல்லுங்கள்