Tuesday, August 27, 2013

தபோல்கர்

புனே நகரத்து மேம்பாலத்தில்
புல்லர்களை விரட்ட சிந்தித்து
நடைப் பயிற்சி செய்தபோது

மூட நம்பிக்கை இருளை
ஓட விரட்ட வந்த பகலவன்
சுட்டு வீழ்த்தப் பட்டான்

மருத்துவம் பயின்றாலும்
சமூகத்தை அறிவியல்  மனப்பான்மையோடு
வளர்ப்பதில் அரும்பாடுப் பட்டவர்

இந்துத்துவ வெறியர்கள் இரத்தவெறியோடு
எழுந்த காலத்தில் எதிர்ப் பிரச்சாரம் செய்து
எழுந்தது நிர்மூலன் சமிதி

பாமர மக்கள் ,படித்தவர்களையும்
சடங்கு ,பில்லி சூனிய இருளில்
சிக்க வைத்துக் கொழுத்த
போலிச் சாமியார்களின்
முகத்திரையைக் கிழித்தார்

அறிவாசான் அம்பேத்கர் மண்ணில்
அய்யா பெரியாரின் கொள்ளைகளை
பரப்புரை செய்தார் தபோல்கர்

மந்திரமென்ற பெயரில் தந்திரமாய்
மக்களை ஏமாற்றிய மந்திரவாதிகளை
மக்கள் மன்றத்தில் அம்பலப் படுத்தினார்

மகாத்மா பூலேவின் பேருழைப்பின் பூமியில்
சாமியார்களின் மோசடிகளை
சந்தி சிரிக்க வைத்தார்

காணிக்கை என்ற பெயரில்
காசை கரியாக்கும் கண்மூடிப் பழக்கத்தை
வேரறுக்கப் பாடுபட்டார்

அருந்தும் குடிநீர் ஆண்டவன் கரைசலால்
நஞ்சாகிப் போவதை
நடக்காமல் தடுத்தார்

கட்டப் பஞ்சாயத்து கௌரவக்கொலைகள்
திட்டமிட்டுப் போராடி
தீவிரமாய் எதிர்த்தார்

போதை அடிமைகளை
'பரிவர்த்தன்' மூலம்
போராடி மீட்டெடுத்தார்

காந்தியைக் கொன்றவர்கள்
கருத்துவாதம் செய்யாமல்
ஏந்தலைக் கொன்றுவிட்டார்

சூரியனை இருளால்
சுட்டுவிட முடியுமா?

மாரியினை எவனால்
மடக்கிவிட முடியும்?

ஆழியலை எவரால்
அடக்கிவிட முடியும்?


அறிஞர் தபோல்கரின்
அயராத உழைப்பிற்கு -மராட்டிய
அரசின்று,மூடநம்பிக்கை
பரப்புவோர்க்கு எதிராய் சட்டமியற்றி
அஞ்சலி செலுத்தியுள்ளது

அறிஞர் வழியில்
அடிப்படை வாதிகளுக்கு எதிராய்
அணிதிரள்வோம்

பகுத்தறிவுக் கொள்கை
திசையெட்டும் சேர்ப்போம்
பாமரமக்களை மீட்டெடுப்போம்

நரேந்திர தபோல்கருக்கு
நம்மின் வீரவணக்கம்






Wednesday, August 21, 2013

அவதாரப் புருஷன்

வயோதிகத்திலும்
வாலிபமாய்
உன்
வசன கவிதை

திருவரங்கமிருந்து
தமிழை
திரையிசையில்
தெருவெங்கும் முழங்கியவன்1

கருவறையிலேயேக்
கவிதைகளைத்
திருவாகப் பெற்றவன்!

நக்மாவைப் பாடினாலும்
நமீதாவைப் பாடினாலும்
அக்மார்க் கவிதைகளால்
அட்டகாசம் செய்தவன் !

கம்பன் தமிழைக்
கடனாகப் பெற்றதனால்
நம்பிக்கை விதைகளை
நடவு செய்தவன்!

வெற்றிலைச் சாற்றோடு
வெல்லத் தமிழை
மெல்ல மென்று மென்று
மேனி சிவந்தவன்!

புதுக் கவிதைப் பூக்களால்
அவதாரப் புருஷனை
அரங்கேற்றம் செய்தவன்

பாரதக் கதையை
பாண்டவர் பூமியாய்
வேண்டியேப் படைத்தவன்

உன்
அம்மா பாட்டென்றால்
கல்லும் கரையும்                                                                                                                               காயும் கனியும்

நடிகன் இராமச்சந்திரன்
நாட்டை ஆள்வதற்கு
'பாட்டை' போட்டவன்

அரிதாரம் பூசிய
அவதாரங்களையெல்லாம்
அழகாகக் காட்டியவன்

அன்றாடம் குழிதோண்டும்
அபாயத் திரைத் துறையில்
வென்று ஐம்பது ஆண்டு
வெற்றிக்கொடி நாட்டியவன்

தாடியைத் தடவி நீ
பாடும் தமிழ்ப் பாட்டு
நாடி தளர்ந்தவருக்கும்
நம்பிக்கைத் தெம்பூட்டும்

இசங்களுக்கு வசமாகா
நிசமானக் கவிஞன்

உதட்டைப் பிரித்து நீ
உச்சரிக்கும் வேளையிலே
இதமாகத் தமிழ்த் தாய்
எப்படி நடம்புரிவாள்!

எதிரே அமர்ந்து
எத்தனை முறைநான்
குதியாய்க் குதித்து
குயில் தமிழ்க் கேட்டிருப்பேன்!

மருத்துவ மனையில்
கருத்துகளைச் சிந்தித்து
காவியங்கள் படைப்பாயென
காத்திருந்த வேளையிலே

அதிர்ச்சி செய்தியோடு
அலைவரிசை கத்தியதே
முதிர்ந்த தமிழ்ப் பழமே!
மூச்சை ஏன்விட்டாய்?

பேச்சே வரவில்லை
பேதை சிறுவனென்
ஆழ்ந்த அஞ்சலிகள்
ஆசிர்வதிப்பாயாக!

Monday, July 8, 2013

காதலா? சாதியா?

காதலை எழுதும் கவிஞர்களே
கவிதை இனியும் எழுதாதீர்
கதையில் படத்தில் கூட
காதலை இனியும் வைக்காதீர்

தேடித்தேடிக் காதலை எடுத்தீர்
பாடிப் பாடிக் காதலைக் கெடுத்தீர்

இளவரசன் திவ்யா காதலுக்காக
இங்கே எவனும் சேர்ந்தீரா?

தருமபுரியில் வீடுகள் எல்லாம்
தரைமட் டமானதே அழுதீரா?

நாடகக் காதல் பரப்புரைக் கேட்டும்
நடிகர் நடிகை யார் வந்தீர்?

கோடிக் கோடியாய்ப் பணத்தைக் குவித்தீர்
கோடியில் ஒருவர் கேட்டீரா?

சாதிமறுப்பு திருமணம் நடத்தி
சாதனை என்று நடித்தோரே
ஆதிதிராவிடன் காதலுக்கு
ஆதரவுக் கரங் கொடுத்தீரா?

மேடையில் நன்றாய்  முழங்கினீரே
பாடையில் இளவரசன் பார்த்தீரா!

நேசம் வைத்து நெஞ்சம் கலந்த
பாசப் பறவைகள் பிரித்தீரே!
வேசம் போட்டு வெளியில் பேசி
வீணாய் உயிரைக் குடித்தீரே!

பாட்டாளி என்று கத்தும் நாய்கள்
பாவச் செயல்கள் பொறுத்தீரே
கூட்டாளியாகி இளவரசனை
குழியில் தோண்டிப் புதைத்தீரே

பாரதி பாவேந்தன் பெரியார் மண்ணில்
பாவிகள் சாதியில் தொங்குகின்றார்
யாரடா இந்த நாய்களென
எவனும் கேட்க துணிவில்லை

மலரும் மணமும் இணைந்திடல் போலே
மனமும் மனமும் கலந்தோரை
காடு வெட்டிகள் பிரித்துவிட்டான்
காதல் உயிரைப் பறித்துவிட்டான்

சாக்கடை தன்னில் உழன்றாலும்
சாதிப் பெருமைகள்  பேசுகின்றான்
சீக்கிரம் ஆட்சியைப் பிடித்திடவேண்டி
சீண்டி சாதிவெறித் தூண்டுகிறான்

மனதைக் கொடுத்தக் காரணத்துக்கு
மரணம் தானா பரிசாகும்?
அன்பைக் கொடுத்த காரணத்துக்கு
அழிவு தானா பரிசாகும்?

இளவரசனின் மரணம் ஒன்றும்
இளிச்ச வாயன் மரணமில்லை
இறுமாப்பு சாதிவெறி அழிக்கும்
இடியாய் இறங்கும் மரணமிது

வேடிக்கைப் பார்த்த தமிழினமே
வெட்கம் மானம் சொரனையெங்கே?
கோடிக்கால் பூதமென
குடிக்கும் சாதிவெறியர் உயிர்





Wednesday, April 10, 2013

வெயில்

வாட்டி வதைத்திடும் வெயில்
வனாந்திரமான தெருக்கள்
ஆட்டம் போட்ட காலங்கள்
அத்தனையும் இன்று கனவுதான்.

ஊட்டி குளிராய் குளிரூட்டி
உறங்கி எழுந்து வெளிவந்தால்
மாற்றம் உடலில் மறுநொடி
மக்கள் அடைந்திடுவார் அவதி

காலத்துக் கேற்ற பருவநிலை
காய்ந்து குளிர்ந்த உடலன்று
ஆளுக்கேற்ற வசதியில்
தோலுக்கில்லை தாங்கும் சக்தி

இயற்கையோடு இயைந்த வாழ்வில்
இல்லை இந்த தொல்லையே
செயற்கை செய்த வசதியினால்
செல்லறித்த உடலமைப்பு ஆனதே

                                                                                                                     


ஆடும் வெயிலை அள்ளிப் பருகி
ஆயிரம் கனவுகள் அதனோடு பகிர்ந்து
வீடும் மறந்து விளையாடிய காலம்
வெயில் தோழமை விரும்பிய நேரம்

எல்லாம் இப்போது நிழலாகி
எளிமை உடலுக்கு பகையாகி
குல்லா குடை குளிரூட்டி
இல்லாமல் இல்லை ஆனதே


Saturday, March 9, 2013

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?

தலைப்பைக் கண்டதுமே தடுமாறிப் போனேன்யான்
நிலையின்றை அறியாமல் கலாவிசுக் கொடுப்பாரா?
அலையலையாய் எண்ணங்கள் ஆடிநின்ற போதினிலும்
தலைநகரில் நடந்தகதை தமிழ்நாட்டின் இற்றைநிலை

எண்ணுகின்ற வேளையிலே எள்ளலவும் மாற்றமில்லை
மண்ணுலகில் மகளிரையே உயிராக மதிக்கவில்லை
பண்ணுகின்றார் பணமவரைப் பகடைக் காயாக்கி
திண்ணுகின்றார் அவருழைப்பில் தினமும் அடிமையாக்கி

அத்தனைத் துறைகளிலும் அதிரடியாய் மாற்றங்கள்
இத்தரையில் பெண்ணின்றி ஏதினிமேல் ஏற்றங்கள்
முத்திரைப் பதித்தப்பெண்  முகவரிகள் ஏராளம்
நித்தரை இழந்தவர்கள் உழைப்போ தாராளம்

கத்துங் குயிலாக களப்போர் மங்கையாக
எத்திக்கும் சென்றுழைக்கும் எழுச்சி மகளிராக
வித்தக அரசியலில் வீறுநடை தலைவியாக
நித்தமும் காணுகின்றோம் நிதர்சனம் மறக்கின்றோம்

களர்நிலமாய் குடும்பங்கள் மலடாகிப் போகாமல்
தளர்நடையில் குமுகாயம் தடைபட்டு நிற்காமல்
வளர்பாதை செல்வதற்கு வேண்டுமே பெண்கல்வி
களக்கவி பாவேந்தன் கலகக் குரலறிவோம்

பணமீட்டும் பெண்பார்த்தே மணமுடிக்கத் துடிக்கின்றாய்
மணப்பொருத்தம் பார்க்காமல் பணம்பங்களா கேட்கின்றாய்
இனம்வேறு என்றாலும் இருக்கும் சொத்தை எண்ணுகிறாய்
கணமேணும் காசொழிய கருத்தினில் ஏதுமுண்டா?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?
ஆணவத்தின் வினாவிடுத்து அறிவுபெறு!
துடுப்பாக வாழ்க்கையினைக் கடப்பதற்கு
துணையாகும் பெண்கல்வி தூய்மையாகு!



Friday, March 8, 2013

மலரல்ல நாங்கள் இனி

வன்புணர்ச்சி வெறியாட்டம்
வழக்காகிப் போனதிங்கே
பெண்ணுரிமை முழக்கமெல்லாம்
போலியாகிப் போனதிங்கே

கண்ணில்லாப் பெண்டிரையும்
கைத்தவழும் குழவியையும்
தன்னந்தனியாய் வாழும்
தளர்ந்த முதியவளையும்

எண்ணிப் பார்க்க முடியாதபடி
எத்தனையோக் கொடுமை செய்து
வன்புணர்ச்சி செய்கின்ற
வல்லூறு கூட்டமிங்கே

பெண்களுக்கு வேண்டும் உடை
பேடிகளும் முன் மொழிந்து
ஆண்களின் வக்கிரத்தை
ஆதரிக்கும் அசிங்கமிங்கே

வசதியுள்ள பெண்ணென்றால்
வலுக்கின்ற போராட்டம்
வசதியற்ற உயிரென்றால்
வாய் மூடி மௌனிவேடம்

மன நோயாளிகளின்
மந்தையாகிப் போன நாட்டில்
இனப்பற்றும் மொழிப்பற்றும்
இல்லாத தேசத்தில்

மடிசுமந்த தாயென்றும்
மனம் கவர்ந்த மங்கையென்றும்
அடிதொடரும் தங்கையென்றும்
அரக்கர்கள் நினைப்பதில்லை

உரிமைகளைப் பெறுவதற்கு
உரத்த குரல் கொடுக்கும் நாளில்
எரியீட்டி ஏந்தி மகளிர்
எல்லோரும் சேர்ந்திடுவோம்

உறுதிகொண்ட நெஞ்சோடும்
உண்மை அன்பு வீரத்தோடும்
சிறிதளவும் அச்சமின்றி
சினம் சுமந்து எழுந்திடுவீர்

மகளிர் நாள் செய்தியாக
மக்களுக்கு சொல்லி வைப்போம்
மலரல்ல நாங்கள் இனி
மருந்துவெடி குண்டென்று

வறியராய் இருந்தாலும்
வரலாற்றைப் படைத்திடுவோம்
அறியாமைத் தீயிலிட்டு
அடைந்திடுவோம் பிறப்புரிமை

வன்மம் கொண்ட விழிகளையே
வாருங்கள் பிய்த்தெறிவோம்
நன்மனத்தால் நமைநோக்கும்
நடப்பினையே நாம் படைப்போம்