Wednesday, December 2, 2015

புறப்படு புறப்படு பேய்மழையே!

வா வா மழையே என்றழைத்தோம்
வந்து கொட்டித் தீர்க்கின்றாய்
சாவா வாழ்வா நிலை எமக்கு
சற்றே பொறுக்க மாட்டாயா?
போய்வா என்றே சொல்கின்றோம்
புறப்படு புறப்படு பேய்மழையே!
தாய்பிள்ளை முதியவர் தவிக்கின்றார்
தாமதம் இனியும் ஏன் மழையே
ஊடகம் முழுதும் உன்னாட்சி
உயிருக்கு போராடும் நிலையாச்சு
நாடகம் ஏனோ பேய்மழையே
நலங்கெட பெய்தல் முறையாமோ?
எங்கே பேரிடர் என்றாலும்
எங்கள் மக்கள் உதவிடுவார்
இங்கே வெள்ளம் சூழ்கையிலே
எங்கே போவார் எம்மக்கள்?
இயற்கையே சீற்றம் குறைத்துவிடு
இனியும் வேண்டாம் விளையாட்டு
செயல்பட முடியல வழியைவிடு
சினத்தை குறைத்து வாழவிடு
நல்மனம் படைத்த நண்பரெலாம்
நன்றாய் உதவிகள் செய்கின்றார்
வல்லமை உண்டு மீண்டுவர
வருணா கருணை காட்டிவிடு

Wednesday, November 11, 2015

நெய்தல் குரல்

அலைகடல்  மேலே வலைவிரிப்போம்
ஆயிரம் மைல்கள் பயணிப்போம்
நிலையிலா வாழ்க்கை வாழுகிறோம்
நீர்இலை எறும்பாய் வாடுகிறோம்

மனைவி மக்கள் கரையினிலே
மன்னவன் மட்டும் அலையினிலே
மனையும் உயிரும் நிலையில்லை
மாக்கடல் தாயே  துணையெமக்கு

தெக்குத் தெரியாமல் போயிடுவோம்
தினம்தினம் செத்தே பிழைத்திடுவோம்
எக்குத் தப்பாய் திசைமாற
எல்லை சிக்கலில் உயிரிழப்போம்

அடிக்கும் அலையினில் சிக்காமல்
ஆபத்து மீனிடம் மாட்டாமல்
இடித்து பாறையில் மோதாமல்
இன்னுயிர் பிழைத்தல் மறுபிறவி

உப்பு நீரினில் உயிர் வளர்த்து
உறவுகள் மறந்து  உழைப்பெடுத்து
தப்பித் தவறி மீன்பிடித்தால்
தரகனேப் பெருந்தொகை  விழுங்கிடுவான்

உள்ளூர் வலைக்குத் தடையிங்கே
உலக வர்த்தகம் தாராளம்
கொள்ளை கடல்வளம் ஏராளம்
கொள்கை வகுத்தாள் தாயிங்கே

கடலைப் படைத்தது கவர்ன்மென்டா?
கயலை விதைத்ததும் கவர்ன்மென்டா?
அடடா இவனுக்கு அதிகாரம்
அடக்கிட எங்களை எவனளித்தான்?

கடலோடு தானேயாம் பிறந்தோம்
கடலன்னை பாலைதான் குடித்தோம்
கடலன்னை தாலாட்டில் உறங்குகிறோம்
கவர்ன்மென்டு உயிரைப் பறிப்பதற்கா?

ஆழி நீரினில் கோடெதற்கு?
அலைகடல் ஆண்டிட ஆளெதற்கு?
தாழி உடைத்திட தாயெதற்கு?
தரணியில் வன்முறை வளர்ப்பதற்கா?

உலக வர்த்தக உடன்பாடு
உரிமை பறிக்கும் ஏற்பாடு
கலகம் அதனால் தானிங்கே
கழுத்தை அறுக்கும் சமன்பாடு

குப்பம் முழுதாய் அழித்துவிட்டு
கும்மாள மடிக்க விடுதிகளை
செப்பமாய் கட்டிக் குவிக்கின்றான்
செம்படவர் வாழ்க்கை அழிக்கின்றான்

ஆழ்கடல் மீன்பிடி படகுகளை
அமெரிக்க கழுகுகள் வட்டமிடும்
ஈழம் அருகே சிங்களவன்
இழுத்து வலைகளை அறுக்கின்றான்

எங்கள் கடலுக்கு ஏன்வந்தாய்?
எல்லை சிக்கலை எழுப்புகிறான்
திங்கள் ஒளியும் அங்கில்லை
தினம்தினம் மடக்கிப் பிடிக்கின்றான்

மீன்களை கொள்ளை அடிக்கின்றான்
மீனவர் கொன்று குவிக்கின்றான்
ஆண்மை இலாத ஆட்சியாளர்
'ஆ'வென விழித்து நிற்கின்றார்

கச்சத் தீவை கடன்கொடுத்தோம்
கைகள் குலுக்கி உறவுகொண்டோம்
அச்சம் சிறிதும் இல்லாமல்
அதிகார போதையில் ஆடுகிறான்

பரந்து விரிந்த தேசமக்கள்
பல்லாங் குழியிடம் அகப்பட்டு
இறந்தும் போகும்  நிலைகண்டும்
இந்தியத் தாயிடம் இரக்கமிலை

ஏனிந்த நிலையென புரிகிறதா?
எம்முயிர் இனமே தெரிகிறதா?
கூனை நிமிர்த்து நேராகு!
குவலயம் வெல்ல வீராகு!

கடலன்னை என்றும் ஓய்ந்ததில்லை-அலைக்
கைகள் மடக்கி சாய்ந்ததில்லை
உடலை வருத்தி தொண்டாற்று
உயர்வாய் விரைவாய் விண்போற்ற!




Tuesday, October 6, 2015

எல்லாம் உனக்கு வசமாகும்

வாழ்க்கை என்பது வாழத்தான் நண்பா
வாழ்வைத் தொலைத்திட நினைப்பது பண்பா?

ஆயிரம் துயரம் நேரட்டும் வாழ்வில்
நீயதை வெல்ல துணிவோடு நேர்நில்

தோல்விகள் சூழ்ந்தால் சுறுசுறுப்பாகு
ஆல்வினை யால்நீ வென்றிட ஏகு

வீட்டுக் குள்ளே ஒலிந்து கிடந்தால்
கீற்றுக் கூரையும் பாதாளம்
கூட்டைவிட்டு வெளியே வாநீ
வெளிச்சக் கீற்றாய் ஆகாயம்

செய்யும் தொழிலில் செம்மை இருந்தால்
செல்வம் உன்னைத் தாலாட்டும்
கையும் வாயும் மெய்யாய் இருந்தால்
கடவுளும் உன்னை தோளேற்றும்

காதலில் தோல்வி என்றால் எதற்கு
கழுத்தினில் தூக்குக் கயிறுனக்கு
சாதனைப் புரிந்திட வழிகள் இருக்க
சழக்குகள் வேண்டாம் சாதிப்பாய்

தோழமை தேர்ந்திட தெரியா உனக்கு
தோல்விகள் தானே பரிசாகும்
ஏழமை ஆயினும் நேர்மை இருந்தால்
எல்லாம் உனக்கு வசமாகும்