Saturday, December 22, 2012

கூட்டுக் குடும்பம்


ஆயிரம் ஆண்டு அனுபவப் பகிர்வு
அடைந்திடும்  கூட்டுக் குடும்பம்
தாயும் தந்தையும் அண்ணன் தம்பியும்
தவழ்ந்திடும் கூட்டுக் குடும்பம்

தானுண்டு தன்பிள்ளை பெண்டென்றால்
தழைக்குமா சமுதாயம் நண்பா
ஆண்பெண் தனியாய் இருந்தால்
அடுக்குமா சொல்வாய் நண்பா

சிறுசிறு பிணக்கால் சீக்கிரம் பிரியும்
சிக்கல் நிறைந்தது தனிக்குடும்பம்
பெரிய சண்டையும் பேசித் தீர்த்திடும்
பெரியோர் கூட்டுக் குடும்பம்

தனியாய் இருந்து தறிகெட்டு நடக்க
தாராளம் தனிக் குடும்பம்
அணியாய் இருக்கும் அத்து மீறாது
அழகிய கூட்டுக் குடும்பம்

மனச் சிதைவாலே மணவிலக்காகும்
மண்ணில் தனிக் குடும்பம்
மனத்தை மாற்றி மாண்புகள் போற்றும்
மகத்தானக் கூட்டுக் குடும்பம்

கானல் நீராய் தோன்றும் மகிழ்ச்சி
காண்பீர் தனிக் குடும்பம்
வானை மிஞ்சும் வாஞ்சை தேக்கும்
வளமார் கூட்டுக் குடும்பம்

 

Monday, October 1, 2012

விடுதலை வேட்கை

ஆடுகளைப் போல
அடைந்துவிடவோ
அடிமைகளைப் போல
மண்டியிடவோ
முடிவதில்லை

கூடுகளுக்குள்
முடங்கிவிடவோ
குளிருக்குப் பயந்து
ஒடுங்கிவிடவோ
முடிவதில்லை

வானம் கிழித்து
வலம் வரவும்
ஞாலம் சுற்றி
ஞானம் பெறவும்

ஆழியின் அடியை
அளவிடவும்
அதல பாதாளம்
அடி தொடவும்

நாடிடும் எண்ணம்
தேடலில் திண்ணம்
வீடது உலகம்
விருந்தது தேடல்





Sunday, September 30, 2012

மழை

வானமுதம் அதிகமானால்
வயிறு காயும் ஏழைகள்

அடாது பெய்து
அன்றாடங் காய்ச்சிகளின்
அரைவயிற்றையும் காயவிடும்

நடைபாதை வாசிகள்
வானமே கூரையான
ஏழை எளிய விவசாயிகள்
பாடு, பெரும்பாடு.

உடலுழைக்கும் தொழிலாளர்கள்
உயிர் வாழ ,
ஆண்டைகளிடம்
அவர்களை அடகு வைக்கும்
அவல காலம்
மழைக்காலம்.

செல்வந்தர்களுக்கு
மழையில்
நனையப் பிடிக்கும்
ஏழைகளுக்கு
வயிற்றுக்குப் பிறகு தான்
அழகும் ரசனையும்.

உயிர் வாழவே
உத்திரவாதமில்லாத வேளையில்
உற்சாகத்தோடு
அடைமழையை
ஆராதிக்க முடியுமா?

காலத்தோடு
அளவாகப் பெய்யும் மழையை
ஞாலம் உள்ளவரை
கொண்டாடுவர் ஏழைகள்.










Saturday, August 18, 2012

நாடா ? இது காடா

ஒற்றைக் குடியராசாய்

பல தேசிய இனங்களை
அடைத்து வைத்திருக்கிறது
இந்தியா

எல்லைகள் பிரித்து
பல மாநிலங்களாய்
எழுதி வைத்தும்
இருக்கிறது.

முள்வேலிகளை விட
மோசமான
மன வேலிகளால்

பிரிந்துகிடக்கின்றன
மாநிலங்கள்.

நதிகளை
நடக்கவிடாமல்
அணை விலங்கிட்டு
அடைத்து வைக்கின்றன
அரசுகள்.

ஊர்களில்
உள்ளூர் வெளியூர்
சண்டைகள்
உச்சகட்டத்தில்

காற்றை
அடைத்து வைக்க
நேற்று இன்று நாளையென
நித்தம் ஆராய்ச்சிகள்.

தன்னையே
வேற்றாளாய் நினைக்கிற
சுயநல விலங்கானான்
மனிதன்.

வடகிழக்கு மக்கள்
வன்முறை,எல்லையில் சண்டை
இடம் விட்டு பெயர்ந்தனர்
பிழைப்புக்கு.

கடுமையான உழைப்பால்
கண்ட ஊர்களில்
அடைந்து கிடந்தனர்
வயிற்றுக்காய்.

இமயமும் குமரியும்
எல்லைகளென
பள்ளியில் படித்தவரும்,
படிக்காதவரும்
நம் நாடெனவே
நம்பினார்கள்.

வந்தேறி என்று
வசைபாடி,அச்சமூட்டி
சொந்த ஊருக்கு ஓடிப்போக
நிர்ப்பந்தம்.

தம் கையை
நம்பி வந்தவர்கள்
தலைமேல்
மூட்டை முடிச்சுகளுடன்
இரயில் நிலையங்களில்.

செல்போன் தெருநாய்கள்
'வல்லென' குறுஞ்செய்தியில்
ஊதிப் பெரிதாக்கி
ஊரைவிட்டு விரட்டிட நாடகம்.

செய்வதறியாது
குடும்பம் குடும்பமாக
கூட்டம் கூட்டமாக
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு
வரிசையில் நிற்கிறார்கள்.

ஒன்றும் ஆகாது
உதவிட நாங்கள் உள்ளோம்
அறிக்கை விடுகிறார்கள்
ஆண்மையற்ற அரசுகள்.

குண்டு வைத்துவிட்டு
குழியைத் தோண்டிவிட்டு
வெடிக்காது,விழமாட்டீர்
விளம்பரம் செய்கிறார்கள்.

சொந்த மக்களை
காக்க வக்கில்லாதவர்கள்
சந்தைகள் முழுக்க
ஏலத்துக்கு நிற்கிறார்கள்.

ஐ.நா
பாதுகாப்பு அவையில்
அங்கம் வகிக்க
ஆதரவு திரட்டுகிறார்கள்.

ஆடு,மாடு,கோழி கூட
அதனதன் முதலாளி காப்பில்
வீடில்லை வேலையில்லை
நாடும் நமக்கில்லை
நாடா?இது காடா?








Sunday, March 11, 2012

பரம்பரைப் பாத்திரம்

நான்கு பிள்ளைகளோடு
நலம் பாராட்ட முடியாதவன்
நான் தான் தலைவனென்று
நன்றாக நடிக்கிறான்.

வீண் புரளி செய்து
விழாக்களைக் கெடுக்கிறான்

பாட்டிமார் கதைகளைப்
பதிவுகளும் செய்கிறான்

'தான்' தான்
கோயில்கள் கட்டியதாகவும்
குளங்கள் வெட்டியதாகவும்
கூசாமல் சொல்கிறான்

அப்பாவின் புகழினில்
அவன் பிழைத்த போதிலும்
தப்பாமல் பிள்ளையும்
தாத்தாவின் வாரிசென்று
தண்டோரா போடுறான்

எங்களைக் கலக்காமல்
எவனும் கூடக் கூடாதென்று
தங்களின் வீட்டருகே
தட்டிகள் வைக்கிறான்

அரங்கத்தில் வந்ததும்
அனைவரும் எழுந்துநிற்க
ஆள்வைத்துச் சொல்கிறான்


மேடையில் தலைமையேற்க
மேல்துண்டை சரிசெய்து
பாடையிலும் பிணமாக
பாவணைகள் செய்கிறான்

பின்பாட்டைக் கூடப்
பிதற்றத் தெரியாதவன்
ராஜபார்ட் கட்டிட
ரகளைகள் செய்கிறான்

எந்த விழா எடுத்தால்
எவ்வளவுத் தேறுமென்ற
விந்தை அறிந்ததால்
சொந்த செலவின்றி
சொற்பந்தல் மூலதனத்த்தில்
சுருட்டியும் கொள்கிறான்.

பரம்பரைப் பேரும்
பந்தாவும் இருப்பதால்
வரும்படி பார்த்தலே
வாடிக்கையானது.

அத்தனை அசிங்கமும்
அறிந்தே பலரிங்கே
புத்தனாய் அவனைப் போற்றி
புலால் சோறு படைக்கின்றார்

நின்று
நிழற்படம் எடுத்துக் கொண்டு
மென்று விழுங்குகின்றார்
மிருகமாய் மலத்தினை

பொய்முகம் கிழிக்க
புறப்படும் இளம்படை
மெய்யிது மெய்யிது
மெல்ல அழியும் கறை.

Saturday, March 10, 2012

மகளிரைப் போற்று

படைப்பினில் பலவகைப் பிரிவுகள் நன்றாய்
அட 'நீ' மட்டுமே பகுத்தறிவுப் பெற்றாய்
ஆறாம் அறிவை அடகும் வைத்தாய்
வேறாய் மகளிரை விலக்கியே வைத்தாய்
படைப்பு என்ன வெளியேறும் கழிவா?
இடை சிறுத்தவர் இழிந்த பிறவியா?
நடைப் பிணமா பெண்டிர்? நன்றா உனக்கு?
தடையேன் உனக்குள் தயக்கம் விலக்கு!

மட்டம் தட்டியே மார்தட்டும் மனிதா!
சட்டம் வகுத்தும் சறுக்குதல் சரியா?
மாடாய் அவளும் வேலைகள் செய்வாள்
ஓடாய் தேய்ந்தும் உனக்கே உழைப்பாள்
உனக்குக் கீழ்தான் அவளென்ற போக்கு
நனவிலி மனத்திடை நண்பா நீக்கு!
தாய்வழிச் சமூகம் தான்நம் மரபு
தாய்மைப் பழித்து ஏனடா கரவு?

அரிதாய்க் கிடைத்த அற்புதப் பிறவியில்
பரிசாய் மகளிர் பாதிநம் வாழ்வில்
உரிமைகள் கேட்டு உண்ணா நிலையெனில்
சிரிக்காதா இயற்கை சிந்தனைச் செய்வாய்
அவரின் பங்கை அவர்கள் அடைந்திட
தவணை ஏனடா?தரித்திரம் சுமந்திட
மகளிர் உரிமை மகளிர் அடைய தடையாய்
மகனே இனிநீ இருந்தால் உடைவாய் மண்டை

Tuesday, January 24, 2012

இருட்டைக் கிழித்தெறி

ஆயிரமாயிரம் கோடியில் ஊழல்கள் அரங்கேறும் தேசமடா
அன்றாடங்காச்சிகள் அநியாயமாய் சாகும் அற்புத தேசமாடா
கோயிலும் கோபுரமும் கோடிக்கோடியாக வான்தொட்டு நிற்குமடா
பாயின்றி படுக்க இடமின்றி குறட்டிலே பறிதவிக்கும் மக்களடா

மட்டை விளையாட்டு மடையர்கள் ஆட்டத்தில் மயங்கிடும் இளைஞரடா
மானத்தை மண்ணை மதிக்காத நிலையிலே வாழ்ந்திடும் யுவதியடா
பட்டை பட்டையாக சாம்பலைப் பூசியே ஏச்சிடும் (போலி) சாமியடா
பண்பாட்டை மொழியை பாதுகாக்காத பச்சைத் துரோகமடா

அயல்நாட்டு வங்கியில் அன்னைதேசப் பணம் அடைக்கல மானதடா
அம்பானி டாட்டாக்கள் ஆட்டும் விரல்திசை அரசாங்கம் ஆடுதடா
கயல்தேடும் மீனவர் கட்டுமரங்களும் கடற்கொள்ளை ஆகுதடா
கன்னித் தமிழீழம் வல்லரசுக் கயமையால் கடல்நீரில் மூழ்குதடா

பன்னாட்டு நிறுவனப் படையெடுப்பால் தேசம் பாழ்பட்டு போகுமடா
பச்சத் தண்ணீருமவர் வைச்ச விலையென்னும் பயங்கரம் நிகழுமடா
தென்னாடு வடநாடு தீராத பகையாலே இந்நாடு உடையுமடா
தெளிவில்லா கொளகையால் தெருவினில் நம்மன்னை பாருமடா

காசுக்குக் கல்வியைக் கடைச்சரக்காக்கிய கணவான்கள் தேசமடா
காமராசுக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கல்விக்கண் மூடுதடா
ஆசியாக் கண்டத்தை அபகரித்திடவே அன்றாடம் எண்ணுதடா
அசிங்கமில்லாமலே வறுமையை தேசிய அவமானம் என்குதடா

நூறுகோடி மக்கள் வீறு இருந்தாலும் நூல்பண்டம் ஆனதடா
நுகத்தடிப் பூட்டிய மாடாக உலகவங்கி சாட்டைக்கு ஓடுதடா
ஆறு அணையெல்லாம் அவரவர் உரிமையென அடங்கிக் கிடக்குதடா
ஆனாலும் ஒருகுடை அரசாட்சி கனவிலே அன்றாடம் விழிக்குதடா

அறுவடை செய்திட்ட தானியமெல்லாம் அறைக்குள்ளே முடங்குதடா
அன்றாடம் கஞ்சிக்கு அன்னையின் பிள்ளைகள் அலைந்து திரியுதடா
தெருவெல்லாம் ஒளிவெள்ளம் இரவைப் பகலாக்கி நகரங்கள் வாழுதடா
தெளிவில்லா மடமையில் பகலும் இருட்டாகி கிராமங்கள் சாகுதடா

அணிசேரு தோழரே அனைவரும் கைகோர்த்து அன்னை தேசம் காப்போம்
அநியாய பேர்வழி அதிகார கூட்டத்தை அடியோடு தான் சாய்ப்போம்
இனிவேண்டாம் தாமதம் இப்போதே சேருவீர் இருட்டைக் கிழித்தெறிவோம்
இனமான உணர்வோடு எழுச்சியாய் யாவரும் இம்மண்ணைக் காத்திடுவோம்

Friday, January 20, 2012

பெயர்ப் பலகைத் தமிழாக்கு

விழியை உறுப்பென்று விளம்புகின்ற வீணரென
மொழியைக் கருவியென்று மொழிந்திடுவார் அறிஞர்சிலர்

கருவியென்றால் செயல்முடிக்கும் திடப்பொருளா தாய்மொழியும்
திருநிலைக்கத் திகழுகின்ற தீந்தமிழும் உயிரன்றோ?

பெயரிலென்ன இருக்குதென்பார் பேதையரும் வெட்கமின்றி
அயல்மொழியை அடிமையென தொழுதிடுவார் மானமின்றி

தான்பிறந்த இனக்குழுவின் தண்மைகளைச் சுவடுகளை
தான்சுமக்கும் பேரன்றோ தனித்துவமாய் தான்நிற்கும்

தாய்மொழியை மறந்தயினம் தன்னிருப்பை இழந்துவிடும்
தாய்க்கலைகள் பண்பாட்டை தானிழந்து தனிமைப்படும்
வாய்ச்சொல்லில் வீரரென வாழுகின்ற தமிழர்களே
நோய்நீங்கி நொடிப்பொழுதும் சோராது களமிறங்கி
தாய்தமிழில் பெயர்ப்பலகைத் தானெழுத உறுதியேற்பீர்
காய்நகர்த்தும் அரசியலார் கயமைகளை முறியடிப்பீர்
பேய்போலே பணம்தேடி ஓடுகின்ற வணிகர்களே
போய்ப்பாரும் உலகிலெங்கும் உம்மைப்போல் மடையருண்டோ?



அவரவரின் தாய்மொழியில் அழகாகப் பெயர்ப்பலகை
அலங்கரிக்கும் வீதியெங்கும் அதுவன்றோ தனிப்பெருமை
தவறாகப் பிறமொழியில் எழுதிவைத்தல் இழுக்கன்றோ?
தமிழர்களே தாய்தமிழில் எழுதிடுவீர் பெயர்ப்பலகை
எவருக்கும் தாள்பிடிக்கா எழுச்சிமிகு ஆற்றலுடன்
எழுதிடுவீர் பெயர்ப்பலகை நம்மொழியாம் செம்மொழியில்
சுவருக்கும் வாயிருந்தால் சூழுகின்ற அயல்மொழிகள்
தவறாமல் துப்பிவிடும் தூயதமிழ் மொழிப்பற்றால்

இனத்தின் இருப்பை இனமான நெருப்பை
இருத்திட தமிழில் எழுதுகப் பலகை

மொழியின் மான்பை விழியாய்ப் போற்ற
முதலில் எழுதுக தமிழ்ப் பெயர்ப் பலகை

வளரும் தலைமுறை வருங்கால வழித்தோன்றல்
வசையற எழுதுக வண்டமிழ்ப் பலகை

வரலாற்றுப் பிழைஞர் வரிசையில் நீங்க
திடமாக எழுதுக தெளிதமிழ்ப் பலகை

{தனித்தமிழ் இயக்க விழாவில்20-01-2012 அன்று படிக்கப்பட்ட பாடல்}

Saturday, January 7, 2012

தானே............

2011 ஆம் ஆண்டின்
கடைசி நாட்களை நினைத்தால்
கண்ணீர் தான் காட்சியாகிறது.

பிறக்கும் புத்தாண்டை
வரவேற்க காத்திருந்தவர்களுக்கு
வருடும் தென்றலிடமிருந்து
வந்தது பேரிரைச்சல்

ஓலமிட்டு
ஓங்கி வளர்ந்த மரங்களையெல்லாம்
ஒரு கைப் பார்த்து
கூளமென கூட்டிச் சுருட்டி
குதறித் தள்ளியது.

இடுப்பொடிந்த
மின்கம்பங்கள்

இலை,கிளை மட்டுமா?
தலை அடியென
தங்களை இழந்த தாவரங்கள்

ஆள்வைத்து வெட்டினாலும்
அப்படித் துண்டாட முடியுமாவென
அதிர்ச்சிக் குள்ளாக்கும்
அழிந்த தென்னந்தோப்பு

நூற்றாண்டு கண்ட மரங்களும்
நொடியினில் அழிந்தன
கூற்றென தானே வந்த
தானே புயலால்

அடர்ந்த மரங்களில்
தொடர்ந்து உறங்கிய
அனைத்து பறவைகளும்
அடியோடு மாண்டன

புதுவைக் கடற்கரைச் சாலை
கல்வீசித் தாக்கப்பட்டு
கோமாவில் கிடந்தது

வீதிகள் தோரும்
நாதியற்ற பிணம் போல
நடுத்தெருவில் கிடந்தன
ஊதி எறியப்பட்ட
உயிரற்ற பொருளனைத்தும்.

ஊடகங்கள் செயலிழந்து
உறவுகளும் தொடர்பிழந்து
ஆடு மாடு கோழியெல்லாம்
ஆவியடித்தது போல்
அகால மரணத்தில்.

காற்றுக்கேன் இந்தப் பகை?
கூற்றுக்கேன் இந்த வேடம்?