Thursday, May 20, 2021

கொரோணா

 பூமிக்கோளம் முழுவதுமே 

புதிய வைரஸ் தொற்றுகள் 

சாமியில்லை காப்பாற்ற 

சரிந்து சாகும் மனிதர்கள் 

கோடி கோடி பணமிருந்தும் 

கோலம் அளக்கும் அறிவிருந்தும் 

கோரைப்புள்ளை போன்ற வைரஸ் 

கொடுக்கும் தொல்லை தாங்கல 

தனிமை சிறையில் அனைவரும் 

தவிக்கும் மக்கள் சாலையில். 

இனிமை இல்லை வாழ்க்கையென்ற

உண்மை புரியும் நாளிது 

முககவசம் அணிவதற்கும் 

முகம் சுளிக்கும் மனிதர்கள் 

கைகழுவச் சொல்லியும் 

காற்றில் விட்ட கழுதைகள் 

இடைவெளியே விடாமல் 

இடத்தில  கூடும் மந்தைகள் 

கொத்துக் கொத்தாய் நோய்த்தொற்றில்

கூடி சாகும் அவலங்கள் 

ஆஸ்பிட்டலில் இடமில்லை 

ஆம்புலன்சும் கிடைக்கல 

ஆக்சிஜனுக்கும் வழியில்லை 

அந்தோ மக்கள் வீதியில் 

அரசு என்ன செய்திடும் 

அறிவு வேண்டாமா மக்களே 

அவரவர் உயிரைக் காத்தல் 

அவரவரே பொறுப்படா

அலட்சியங்கள் இல்லாமல் 

அடங்கிக் கிடப்பீர் வீட்டிலே 

முககவசம் அணிந்து நீங்கள் 

முழு உயிரைக் காப்பீரே

இடைவெளியை விட்டு நின்று 

எட்ட ஓட்டுவீர் கொரோணாவை 

கைகளையே கழுவி கழுவி 

கருவறுப்பீர் கொரோணாவை 

கிருமி நாசனி பயன்படுத்தி 

கிழித்தெரிவீர் கொரோணாவை 

விளையாட்டாய் இல்லாமல் 

விழிப்போடு இருந்திடுவோம் 






சனாதனம்

மூடி வைத்து
கழுத்தறுத்தான்
ஒரு
முழு சனாதனி
அரைநிர்வாண
பக்கிரி

பரங்கியரிடம் பெற்ற
உரிமையை
ஒரு பனியா உயிருக்காக
பலகோடி
ஆதிக்குடிகளின் உயிர்களை
அடகு வைத்தோம்

அரும்பாடுபட்டு
செதுக்கி வைத்த
சாசனமும்
கேள்விக்குறியாகும்
பாசிசத்தின் பிடியில்

மீட்டெடுக்க
ஒரு மீட்பர் இருக்க
கைகளை சேர்த்து
களமாடுவோம்
அதிகாரம் அவசியம்
விடுதலை நிச்சயம்

அதிரும் பறை
நாரவாயண்களை
அச்சமூட்டுகிறது
நீதிமனுவை
மொழிபெயர்த்து
கொடுத்தால்
குட்டு
வெளியாகிவிடுமென்று
ட்வீட்டுகிறார்கள்

அசலை
தடைசெய்யாமல்
பெயர்ப்பை
வெளியிடக்கூடாதென
பொதுவெளியில்
கோஷமிடுகிறார்கள்

அம்பேத்கர் திடலும்
பெரியார் திடலும்
அசோகர் தூணும்
அவர்களுக்கு
வயிற்றில்
முச்சூடும்
புளியை கரைக்கின்றன .




அப்பா

எழுதப்படிக்க தெரியாத ஏழைதானே அப்பா
எத்தனை அக்கறை எங்களுக்கு எழுத்தறிவித்த அப்பா
தொழுது கிடந்த தொல்குடியின் துயரம் சுமந்த அப்பா
தோளுயர்த்தி நான்நடக்க தொண்டுசெய்த அப்பா
வீதியெலாம் சுத்தம் செய்து விருந்து படைத்த அப்பா
விளையாட்டாய் உன்னருமை மறந்திருந்தேன் அப்பா
ஒதி ஓதி படிக்க வைத்த உயர்ந்த மனது அப்பா
உன்னால்தான் இப்போதுநான் உயர்ந்த மனிதன் அப்பா
அரசுப் பணி முடித்தநொடி அடுத்து நீயும் உழைப்பாய்
ஆறுபிள்ளைகள் காப்பாற்ற அடிமைபோல உழைப்பாய்
கடுகளவும் பாசம் குறையா காவல்தெய்வம் அப்பா
கள்ளு சாராயம் பழக்கத்தினால்
கவலை சுமந்தேன் அப்பா
நெடுமரம் போல் உயர்ந்த உருவம்
நெசத்தில் குழந்தை அப்பா
நேர்மையிலே மாறாத நேசக்கார அப்பா
பாலுவென அழைக்கையிலே பயந்து நடுங்கி வருவேன்
பாசத்தோடு நீசிரிக்க பனிபோல குழைவேன்
ஆளுமட்டும் முரட்டு ஆளுநீதான் அப்பா
அன்பு துளியும் குறையாத அறிவன் நீதான் அப்பா
நான்வாழும் ஒவ்வொரு நொடியும் உன்னுழைப்பின் மிச்சம்
நானிந்த பூமியிலே உன்னுடைய எச்சம்
ஓடும் வரை ஓடி ஓடி உழைத்த தியாகி அப்பா
ஓய்ந்த பின்னே உனக்கொன்றும் செய்தறியேன் அப்பா
கூடுவிட்டு பறந்த குஞ்சுபறவை ஆனேன்
குழந்தைகளை வளர்த்தெடுத்தேன் உன்னைப்போல நானே
சார்ந்திருக்க கூடாதென சத்தியமாய் சொன்னாய்
சாகும் வரை அப்படித்தான் சரித்திரமாய் ஆனாய்
ஒருநொடியும் உனைமறந்து நானிருந்ததில்லை
உன்னுழைப்பை அசைபோட நான் மறந்ததில்லை
மறுபிறவி நம்பிக்கை எனக்கிருந்ததில்லை
மகனாக மீண்டும் பிறக்க மறுதலிக்கவில்லை
என் பிறந்த நாளுக்கு முதல்நாளில் மறைந்தாய்
விண் கலந்து வளிகலந்து காவல்தெய்வம் ஆனாய்
ஊணும் உயிரும் இருக்கும்வரை உனைமறக்க மாட்டேன்
உழைப்பின் தெய்வம் உன்னருளால்
உலகம் போற்ற வாழ்வேன்
நினைவி்ல் வாழும் அப்பா உன்னை வணங்குகின்றேன்
மனைவி மக்கள் சுற்றம் நட்பு
காக்க வேண்டுகின்றேன்





அம்மா

 பத்தியங்கள் நீயிருந்து 

பத்திரமா என்னைப் பெத்த அம்மா

வைத்தியரும் நீதானே அம்மா -என்னை
வளர்த்தெடுத்த தெய்வம் நீயே அம்மா!

கந்தசேலை உடுத்திடுவ
கஞ்சித்தண்ணி குடிச்சிடுவ
கறிசோறு எங்களுக்கு அம்மா நீ
கடன்பட்டும் போட்டுடுவ அம்மா

மூஞ்ச கழுவிவிட்டு
முகத்துக்கு பவுடரிட்டு
சாஞ்சி பாத்து சிரிச்சிடுவ அம்மா -எம்புள்ள
சாமிவரம் இன்னுசொல்வ அம்மா

அழக்கு சட்டை போட்டா
அடிக்க நீவருவ
அன்றாடம் துணிதுவைச்சு அம்மா -என்னை
அனுப்பி வைப்ப பள்ளிக்கூடம் அம்மா!

சத்தம் போட்டு நான் படிச்சா
சந்தோசம் பொங்கிவரும்
மொத்தமாக உன் முகத்தில் அம்மா -ஒரு
முழுநிலவு ஒளிபரவும் அம்மா !


சித்திரையில் நான் தூங்க சீலையால விசிறிடுவ!
மார்கழியின் குளிருக்கு மடிகொடுத்து தாங்கிடுவ !
கதகதப்பில் நான் வாழ்ந்தேன்! கைருசியில் நான் வளர்ந்தேன் !

அம்மா போல ஒரு தெய்வம் அகிலத்திலே இல்லை -அவர்
அன்பு பாசம் ஈடு செய்ய ஆண்டவனும் இல்லை

ஆயிரம் பிறைகண்டு ஆயுள்நீண்டு வாழ்ந்திடுக அம்மா!- உன்
அடிபோற்றி வணங்குகிறேன் அம்மா !















உழைக்கும் மகளிர்

விழிப்பு வந்து 

கால்போன போக்கில்
பயணம்
தொடர்கிறேன்
தன்வீட்டின்
வாயிலில் கூட தண்ணீர்
தெளிக்க முடியாமல்
ஏ. சியில் தூங்குபவர்களுக்காக
ஒரு வாளியும்
துடைப்பமுமாக
செல்கிறாள்
வெத்தலையை மென்ற படி
ஆண்டாளு அத்தை .
அவள் சென்றாள்தான்
பல வீடுகளுக்கு
குளிர்ச்சியும் சுத்தமும்
வரவேண்டும்
இரவெல்லாம்
காவல் காத்த நாய்கள்
அசந்து தூங்குகின்றன
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
ஆட்கள் நடமாட
மெயின் ரோடு வந்துவிடுகிறது
அங்கே
நாயர் கடையில்
இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுகிறது .
சைக்கிள் ரிக்‌ஷா நாயகர்கள்
பஸ் டிரைவர் கண்டக்டர்
என
களைகட்டுகிறது டீக்கடை






சமூக (அ)நீதி

கொன்று குவிக்கிறது 
கொரோணா
கூடாதே என்றாலும்
கட்டுப்படாமல் அலைகிறார்கள்
சாலைகளில் கறிக்கும் ,மீனுக்கும்

டாஸ்மாக் கடைகளில்
முண்டியடித்துக்கொண்டு்
காசில்லாமல்
கொரோணாவை வாங்கி
வருகிறார்கள்

இந்த நிமிடம் மட்டுமே நிஜம்
நாளைக்கு உத்திரவாதமில்லையென
நன்றாக
உலகுக்கு உணர்த்தியிருக்கிறது கொரோணா

ஆனால்
பேண்ட சாதிகள்
சேரியில்
திருவிழா நடத்தியதை எதிர்த்து
கட்டப்பஞ்சாயத்து பேசி
காலில்விழ வைத்து
தங்கள் சாதித்திமிரை
நிலைநாட்டத் துடிக்கிறார்கள்

காலில் விழவைத்தவர்களை
கைதுசெய்யாமல்
பாதிக்கப்பட்டவர்களின் மீது
வழக்குப் பதிகிறது
சனாதன காவல்துறை
சமூகநீதி பேசும்
பெரியார் மண்ணில்

கேட்பதற்கு நாதியில்லாமல்
கேவலங்கள் தொடர்கிறது
சுயமரியாதை இல்லாதவர்களால்
இந்த அவலங்கள்
வேடிக்கைப் பார்க்கப்படுகிறது

உலகமே ஒன்று சேர அழைத்தாலும்
மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகு என்றாலும்
சகமனிதரை இழிவு செய்யும்
சாத்தன்களை கண்டும்
காணாமல் போவதுதான்
சமூகநீதியா ?

ஆட்சிகள் மாறினாலும்
காட்சிகள் மாறவில்லை