Wednesday, March 13, 2019

பொள்ளாச்சி இனி
பொல்லாட்சி
ஆணுக்கு ஒழுக்கத்தை அளிக்காத பெற்றோர்கள்
ஆயுளுக்கும் வருந்த வேண்டும்
தான்தோன்றித் தனமாக தப்புசெய்யும் இளைஞர்தம்
ஆணுறுப்பை அறுக்க வேண்டும்
ஊணுக்கும் உயிருக்கும் உத்திரவாதமில்லாத
ஊரையே கொளுத்த வேண்டும்
உன்னதப் பிறவியாம் பெண்களை மதிக்காத
உலகத்தை எரிக்க வேண்டும்
பார்வையால் கற்பழிக்கும் படுபாவி பேர்களை
ஏர்பூட்டி உழவும் வேண்டும்
நேர்பட பேசிடும் எதிர்த்திடும் நெஞ்சுரம்
நேரிழை பெறவும் வேண்டும்
வளம்சூழ் பொள்ளாச்சி மகாலிங்கம் சிற்பியால்
வரலாற்றில் பெருமை சூழ
வன்புணர்வு நாய்களால் வந்ததே கலங்கமும்
பொள்ளாச்சி பொல்லாட்சியாச்சே !
பொறிவைக்கும் காமுகர் புரிந்திடும் பக்குவம்
பெறவேண்டும் தங்கைமாரே!
பெரியோர் போர்வையில் பேடிகள் வருவார்கள்
அறிந்திடுக எந்தன் மகளே !
அன்பென்று விஷம் கக்கும் ஆண்களை
இனங்கண்டு
அகற்றிடு நட்பைவிட்டு
ஆருக்கும் அஞ்சாது அடங்கிநீ துஞ்சாது
அறுத்தெரி அவனின் உறுப்பை
போருக்கும் சலைக்காத வீரமகள் நீஏன்
வீணருக்கு இரையாகிறாய் ?
நாருறிக்கும் விதமாக நங்கையே உரித்தெறி
நாட்டிலே அச்சம் தோன்றும்!
தாய்வழி சமூகத்தின் மரபணு தொடர்ச்சியே
நாய்களை வெட்டி வீழ்த்து!
வாயிலே பல்லும் வலிய நகங்களும் தற்காப்பு கருவிதானே !
கோயிலாய் இருந்தாலும் கோரமாய் வன்புனரும்
கோழைகளை எதிர்த்து தாக்கு !
பெண்ணென்றால் மட்டமாய் தின்றிடும்
பண்டமாய்
பார்த்திடும் ஆண்கள் வீழ்த்து !
மண்ணிலே காதலை புதைத்திட துடிப்பவர்
கண்ணிலே ஈயம் பாய்ச்சு
நம்பி பழகிடும் நங்கையர் சீரழிக்கும்
நாய்களை கொல்ல வேண்டும்
தம்பியாய் அண்ணனாய் தகப்பனாய்
இல்லாத
தறுதலைகள் அழிக்க வேண்டும்
இனியொரு பெண்ணுக்கு இப்படி நேராமல்
இறுதி தீர்ப்பு எழுதவேண்டும் !








பொம்பளையின்னா மட்டமா?
ஆசைமகளாக பொறந்த வீட்டில் வளர்ந்தவ
நேசமகளாக நேற்றுவரை சிறந்தவ
பட்டப்படிப்பு படிச்சு நல்ல பதவியிலே இருப்பவ
பட்டிக்காட்டு பொன்னானாலும் பாடுபட்டு் உழைப்பவ
ஒரேசம்பளம் வாங்கினாலும் ஒசத்தியில்ல பொம்பள
ஊரே அசரும் அறிவின்னாலும் பின்புத்தியாம் பொம்பள
காலையில் எழுந்து
காபி வைக்கனும்
கணவன் காலையும்
தொட்டு வணங்கனும்
பிள்ளையை குளிப்பாட்டி பள்ளிக்கனுப்பனும்
எல்லோருக்கும் வக்கனையா
சமைச்சு வைக்கனும்
வீடு பெருக்கனும்
விளக்கனைக்கணும்
ஆடுமாடு போல
அமைதியா இருக்கனும்
கோடு போட்டாக்கா
அடங்கி இருக்கனும்
ரோட்டுக்கு போனாலும்
கேட்டுட்டு போகனும்
துணி வெளுக்கனும்
தூக்கம் துறக்கனும்
பணிக்கு போனாலும்
பத்தும் செய்யனும்
முட்டி வலிச்சாலும்
முனகி நடக்கனும்
மொட்டை மாடியேறி
மொளகா எடுக்கனும்
மாதவிடாயிலும்
மாடா உழைக்கனும்
தோதாயில்லேனா
திட்டுகள் வாங்கனும்
குடும்ப செலவெல்லாம்
சிக்கனம் பிடிக்கனும்
அடுப்புக்குள்ளேயேயும்
அன்றாடம் வேகனும்
படிபடின்னு
பசங்கள சொல்லனும்
பட்சனம் சீடையும்
பண்ணி கொடுக்கனும்
அவசரம் அவசரமா
அலுவலகம் போகனும்
ஆக்கிய சோத்தையும்
டப்பாவில் அடைக் கனும்
நேரம் கிடைச்சாதான்
தின்னு தொலைக்கனும்
ஆளுக்கொரு அயிட்டம்
அன்றாடம் செய்யனும்
கால் அமுக்கனும்
கட்டிலில் படுக்கனும்
கழுதைக்கு மேலதான்
கஷ்டங்கள் சுமக்கனும்
மாமனார் முறைப்புக்கு
மரியாதை காட்டனும்
மாமியார் வீம்புக்கு
மடங்கி நடக்கனும்
நாத்தனார் வரவுக்கு
நாடகமாடனும்
நாளொரு மேனியும்
நர்த்தனம் ஆடனும்
ஊடால ஊடால
சீரியல் பார்க்கனும்
ஊரார் கதைக்கும்
ஒப்பாரி வைக்கனும்
நாடாள வந்தவன்
நரித்தனம் பொறுக்கனும்
நாளைக்கும் எவனுக்கோ
ஓட்டுந்தான் போடனும்
பெண்ணை பெத்துட்டா
நெருப்பை சுமக்கனும்
கண்ணாய் ஒருவனுக்கு கட்டிக்கொடுக்கனும்
குடிச்சிட்டு வந்தாலும்
கும்பிட்டுத் தாங்கனும்
கூப்பிட்டுத் தொலைச்சிட்டா
கொலநாத்தம் பொறுக்கனும்
புகைநாத்தம் பொறுக்கனும் பொண்டாட்டியா நடக்கனும்
பொம்பளையின்னா மட்டமா?
பொழுதும் உழைக்கும் கூலியா?
ஆம்பளையின்னா ஒசத்தியா?
அட சீ....சீ...சீ.... போங்கடா
நீங்களும் உங்க ஆண்மையும்
சக உயிரை மதிப்பவனே
சரியான ஆம்பள !
சத்தியமா பெண்ணை விஞ்ச
எவனுமில்ல ஊருல !










வெண்மணி
நெல்மணி விளைந்த வெண்மணி மண்ணில்
நெருப்பில் எரிந்தார் எம்தோழர்-நெஞ்சம்
பொறுக்கவில்லையே இப்போதும் -நீதி
மறுக்கப்பட்டதே அநியாயம்!
ஓடாய் உழைத்த உழவர் கேட்டார்
ஓர் அரைப்படி உயர்வாக -கூலி
உரிய வேலைக்கு ஈடாக -அவரை
உயிரோடெரித்தான் சண்டாளன்-சாதி
உணர்வை சுமந்த சதிகாரன்
காடுமேடலாம் கழனியாக்கியவர்
கதறிக் கதறி அழுதாரே -தீயில்
கரிக்கட்டையாய் எரிந்தாரே -அவரைக்
காப்பாற்ற எவனுக்கும் துப்பில்லை-தண்டிக்க
காவல் துறைக்கும் வக்கில்லை
பிஞ்சுக் குழந்தையும் பேரிளம் பெண்ணும் மடிந்தாரே!
வஞ்சகர்  சூழ்ச்சியில்  எரிந்தாரே! -நெஞ்சம்
வதைபட எரிந்து  தீய்ந்தாரே!-பிறந்த
சாதியால் கொடுமை அடைந்தாரே!
வெண்மணி துயரம் வேடிக்கையல்ல பெரும்பாடம்
வேள்வியாய் கொடுமை எதிர்த்திட நமக்கு தரும்பாடம்
கண்களை மூடி கொடுமைகள் பார்த்தல் மூடத்தனம் _இனி
களத்தினில் இறங்கி அழித்திட வேண்டும் அவமானம்
வெண்மணி எரிந்த மலர்களுக் கெல்லாம் வீர வணக்கம் -விதை
நெல்மணி போல சேமித்து வைப்போம் நம்கோபம்
வேண்டும் நேரத்தில் வெடித்து எழுவோம் விதையுறக்கம்
(தஞ்சை கீழ்வெண்மணியில் எரித்துக் கொள்ளப்பட்ட தலித் தோழர்களுக்கு அஞ்சலி)




அப்பா
அப்பா வரும் நேரமென்றால் வாயில் எச்சி ஊறும் -அவர்
வாங்கிவரும் தின்பண்டத்துக்கு வயிறு கிடந்து ஏங்கும்
கோபமாக பார்த்தால் கண்ணில் கோடி சூரியன் எரியும்
குழந்தையாகி சிரிக்கும் போது குளிரா நிலவு காயும்
கைபிடிச்சி நடந்து வந்தா காற்றும் தீண்ட அஞ்சும்
கால்வலிக்கு அவர் முத்தம்தான் களிம்பாகி மிஞ்சும்
அக்கம் பக்கம் சுத்தபோனா அடிக்க கைகள் ஓங்கும்
அடிச்சி நானும் அழும் போது அவரின் கண்கள் கலங்கும்
பத்துமாதம் சுமக்காத பாவி இல்லை அப்பா
பரம்பரையை சுமக்க வந்த சுமைதாங்கி அப்பா
வேட்டி கட்டி நின்னாருன்னா வெள்ளைத்துரை அப்பா
வேடம்போட தெரியாத வெகுளி குழந்தை அப்பா
பஞ்சாயத்தில் தீர்ப்பு சொன்னா பயந்து நடுங்கும் ஊரு
பள்ளிக்கூடம் போனதில்ல பட்டறிவு தேரு
கத்தியெடுத்து சீவினாக்கா கண்திறக்கும் பனங்காய்
கட்டுத்தழைக்கு ஆடு மயங்கி காலடியில் கிடக்கும்
அவரழைத்தால் ஆகாயம் அடிபணிந்து குனியும்
அலைகள் கூட சிலநொடிகள் பிரிய மறந்து தழுவும்
அப்பா போல ஓருறவு அகிலத்திலே இல்லை
அவர்தானே எங்களுக்கு பாதுகாப்பு எல்லை