Wednesday, March 13, 2019

அப்பா
அப்பா வரும் நேரமென்றால் வாயில் எச்சி ஊறும் -அவர்
வாங்கிவரும் தின்பண்டத்துக்கு வயிறு கிடந்து ஏங்கும்
கோபமாக பார்த்தால் கண்ணில் கோடி சூரியன் எரியும்
குழந்தையாகி சிரிக்கும் போது குளிரா நிலவு காயும்
கைபிடிச்சி நடந்து வந்தா காற்றும் தீண்ட அஞ்சும்
கால்வலிக்கு அவர் முத்தம்தான் களிம்பாகி மிஞ்சும்
அக்கம் பக்கம் சுத்தபோனா அடிக்க கைகள் ஓங்கும்
அடிச்சி நானும் அழும் போது அவரின் கண்கள் கலங்கும்
பத்துமாதம் சுமக்காத பாவி இல்லை அப்பா
பரம்பரையை சுமக்க வந்த சுமைதாங்கி அப்பா
வேட்டி கட்டி நின்னாருன்னா வெள்ளைத்துரை அப்பா
வேடம்போட தெரியாத வெகுளி குழந்தை அப்பா
பஞ்சாயத்தில் தீர்ப்பு சொன்னா பயந்து நடுங்கும் ஊரு
பள்ளிக்கூடம் போனதில்ல பட்டறிவு தேரு
கத்தியெடுத்து சீவினாக்கா கண்திறக்கும் பனங்காய்
கட்டுத்தழைக்கு ஆடு மயங்கி காலடியில் கிடக்கும்
அவரழைத்தால் ஆகாயம் அடிபணிந்து குனியும்
அலைகள் கூட சிலநொடிகள் பிரிய மறந்து தழுவும்
அப்பா போல ஓருறவு அகிலத்திலே இல்லை
அவர்தானே எங்களுக்கு பாதுகாப்பு எல்லை









No comments: