Wednesday, March 13, 2019

பொம்பளையின்னா மட்டமா?
ஆசைமகளாக பொறந்த வீட்டில் வளர்ந்தவ
நேசமகளாக நேற்றுவரை சிறந்தவ
பட்டப்படிப்பு படிச்சு நல்ல பதவியிலே இருப்பவ
பட்டிக்காட்டு பொன்னானாலும் பாடுபட்டு் உழைப்பவ
ஒரேசம்பளம் வாங்கினாலும் ஒசத்தியில்ல பொம்பள
ஊரே அசரும் அறிவின்னாலும் பின்புத்தியாம் பொம்பள
காலையில் எழுந்து
காபி வைக்கனும்
கணவன் காலையும்
தொட்டு வணங்கனும்
பிள்ளையை குளிப்பாட்டி பள்ளிக்கனுப்பனும்
எல்லோருக்கும் வக்கனையா
சமைச்சு வைக்கனும்
வீடு பெருக்கனும்
விளக்கனைக்கணும்
ஆடுமாடு போல
அமைதியா இருக்கனும்
கோடு போட்டாக்கா
அடங்கி இருக்கனும்
ரோட்டுக்கு போனாலும்
கேட்டுட்டு போகனும்
துணி வெளுக்கனும்
தூக்கம் துறக்கனும்
பணிக்கு போனாலும்
பத்தும் செய்யனும்
முட்டி வலிச்சாலும்
முனகி நடக்கனும்
மொட்டை மாடியேறி
மொளகா எடுக்கனும்
மாதவிடாயிலும்
மாடா உழைக்கனும்
தோதாயில்லேனா
திட்டுகள் வாங்கனும்
குடும்ப செலவெல்லாம்
சிக்கனம் பிடிக்கனும்
அடுப்புக்குள்ளேயேயும்
அன்றாடம் வேகனும்
படிபடின்னு
பசங்கள சொல்லனும்
பட்சனம் சீடையும்
பண்ணி கொடுக்கனும்
அவசரம் அவசரமா
அலுவலகம் போகனும்
ஆக்கிய சோத்தையும்
டப்பாவில் அடைக் கனும்
நேரம் கிடைச்சாதான்
தின்னு தொலைக்கனும்
ஆளுக்கொரு அயிட்டம்
அன்றாடம் செய்யனும்
கால் அமுக்கனும்
கட்டிலில் படுக்கனும்
கழுதைக்கு மேலதான்
கஷ்டங்கள் சுமக்கனும்
மாமனார் முறைப்புக்கு
மரியாதை காட்டனும்
மாமியார் வீம்புக்கு
மடங்கி நடக்கனும்
நாத்தனார் வரவுக்கு
நாடகமாடனும்
நாளொரு மேனியும்
நர்த்தனம் ஆடனும்
ஊடால ஊடால
சீரியல் பார்க்கனும்
ஊரார் கதைக்கும்
ஒப்பாரி வைக்கனும்
நாடாள வந்தவன்
நரித்தனம் பொறுக்கனும்
நாளைக்கும் எவனுக்கோ
ஓட்டுந்தான் போடனும்
பெண்ணை பெத்துட்டா
நெருப்பை சுமக்கனும்
கண்ணாய் ஒருவனுக்கு கட்டிக்கொடுக்கனும்
குடிச்சிட்டு வந்தாலும்
கும்பிட்டுத் தாங்கனும்
கூப்பிட்டுத் தொலைச்சிட்டா
கொலநாத்தம் பொறுக்கனும்
புகைநாத்தம் பொறுக்கனும் பொண்டாட்டியா நடக்கனும்
பொம்பளையின்னா மட்டமா?
பொழுதும் உழைக்கும் கூலியா?
ஆம்பளையின்னா ஒசத்தியா?
அட சீ....சீ...சீ.... போங்கடா
நீங்களும் உங்க ஆண்மையும்
சக உயிரை மதிப்பவனே
சரியான ஆம்பள !
சத்தியமா பெண்ணை விஞ்ச
எவனுமில்ல ஊருல !









No comments: