Wednesday, March 13, 2019


வெண்மணி
நெல்மணி விளைந்த வெண்மணி மண்ணில்
நெருப்பில் எரிந்தார் எம்தோழர்-நெஞ்சம்
பொறுக்கவில்லையே இப்போதும் -நீதி
மறுக்கப்பட்டதே அநியாயம்!
ஓடாய் உழைத்த உழவர் கேட்டார்
ஓர் அரைப்படி உயர்வாக -கூலி
உரிய வேலைக்கு ஈடாக -அவரை
உயிரோடெரித்தான் சண்டாளன்-சாதி
உணர்வை சுமந்த சதிகாரன்
காடுமேடலாம் கழனியாக்கியவர்
கதறிக் கதறி அழுதாரே -தீயில்
கரிக்கட்டையாய் எரிந்தாரே -அவரைக்
காப்பாற்ற எவனுக்கும் துப்பில்லை-தண்டிக்க
காவல் துறைக்கும் வக்கில்லை
பிஞ்சுக் குழந்தையும் பேரிளம் பெண்ணும் மடிந்தாரே!
வஞ்சகர்  சூழ்ச்சியில்  எரிந்தாரே! -நெஞ்சம்
வதைபட எரிந்து  தீய்ந்தாரே!-பிறந்த
சாதியால் கொடுமை அடைந்தாரே!
வெண்மணி துயரம் வேடிக்கையல்ல பெரும்பாடம்
வேள்வியாய் கொடுமை எதிர்த்திட நமக்கு தரும்பாடம்
கண்களை மூடி கொடுமைகள் பார்த்தல் மூடத்தனம் _இனி
களத்தினில் இறங்கி அழித்திட வேண்டும் அவமானம்
வெண்மணி எரிந்த மலர்களுக் கெல்லாம் வீர வணக்கம் -விதை
நெல்மணி போல சேமித்து வைப்போம் நம்கோபம்
வேண்டும் நேரத்தில் வெடித்து எழுவோம் விதையுறக்கம்
(தஞ்சை கீழ்வெண்மணியில் எரித்துக் கொள்ளப்பட்ட தலித் தோழர்களுக்கு அஞ்சலி)




No comments: