Tuesday, October 21, 2008

பாரதியே புறப்பட்டு வா புதுவைக்கு

புதுமைகளைப் பாடிய
பாரதிப் புலவா
புறப்பட்டு வா நீ
புதுவைக்கு உடனே

ருஷ்யப் புரட்சியை
வரவேற்ற பாவலா
ஈழப் புரட்சிக்கு
எழுதிட நீ வா

இமயம் குமரியை
இணைத்திட நினைத்தவா
எங்கள் காவிரிக்கு
இழுத்து வா கங்கையை

காக்கைக்கு அரிசியை
படைத்த கவிஞனே
கால்வயிறு நிரம்பாதவர்
கவலைகளைப் பாட வா

துலுக்கரைத் தோழராய்
தோள்பற்றிய பாவலா
துயருறும் குஜராத்
தோழரைக் காக்க வா

யேசுவை பாடலில்
ஏற்றிய கவிஞனே
எரிந்திடும் ஒரிசாவை
எழுந்து அணைக்க வா

அதிரும் பறையொலியில்
ஆடிக் களித்திட
ஆச்சாரம் மறுத்தவா
அடியெதுத்து நடந்துவா

தனிப்பாதை தேவாலயம்
தரை மட்டமாக்க
தமிழர் மறமே
தயங்காமல் நீ வா