Tuesday, December 7, 2021

வ.உ.சிதம்பரனார்




விழுப்புரம் 05-09-2021 மாலை 4.00 மணி


மேலோர்கள் வெஞ்சிறையில் 
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ 


படித்த படிப்பும் பட்டமும் பதவியும்
துச்சமாய் நினைத்த தூயவன் வ.உ.சி்
நடித்து நடித்து நாடாளும் பேர்வழிகள்
அறிவாரா அவரின் ஈகம் ?
எடுத்த காரியம் வெற்றியடைந்திட
எல்லா சொத்தையும் இழந்தவர் வ.உ.சி்
மடித்த சட்டையும் கலையாத அரசியலார்
மார்தட்டிக் கொள்கிறார் இது நியாயமா ?

சின்ன சின்ன உதவிகள் செய்தவர்
சீக்கிரம் ஆகிறார் அமைச்சராக
பொன்னை இழந்து தன்னை இழந்தவர்
பொய்வழக்கில் கைதியாய் இது நியாயமா ?
மண்ணைக் காத்திட மக்களைக் காத்திட
மார்பை உயரத்தியவர் சிறையிலே
தன்பெண்டு தன்பிள்ளை தம்மை  உயர்த்திடும்
தடியர்கள் அரசுப் பதவியிலே

வயலை ஏரியை ஆற்றை குளத்தை  விற்றவர் எல்லாம்  அமைச்சரிங்கே
அயலானை எதிர்த்து அத்தனையும் இழந்தவர்
அருமை தெரியலே நாட்டினிலே
துயிலாமல் வழக்காடி துயர்தாங்கி வாதாடி
துணிவாய் எதிர்த்தவர் தெரியலே
வயிற்றுப் பிழைப்புக் காய்
வாயாடி வென்றவர்
வளமாக வாழ்கிறார் காட்சியிங்கே
வரலாற்று நாயகன்
வள்ளுவத்தை வளர்த்தவன்
வான்புகழ் வ.வ.சி மாட்சியெங்கே ?


பட்டம் உதறினான் பதவி உதறினான்
சட்டம் உதறினான் நாட்டுக்கு
பாவிப் பயல்களின்
பழியாலே தன்வாழ்வில்
பஞ்சப் பனாதியானான்  நடுரோட்டிலே

நட்டம் இலாபம்
கணக்குப் பார்த்தவர்
சேர்த்தனர் சொத்தை
வாரிசுக்கே
சட்டம் படித்தும்
பரங்கியர் எதிர்த்ததால்
நட்டம் வ.உ.சி குடும்பத்துக்கே

அந்நியனுக்கு அடிபணிந்து
அரசி ஆலை
அவரெல்லாம் இன்றிங்கே பெரிய ஆளே
கண்ணியமாய் உழைத்தவரை தெரியவில்லை
கடலை ஆண்ட தலைவனுக்கோ
மதிப்பே இல்லை
நாட்டுக் கோட்டை
செட்டிமார்கள் வட்டிக்காக
நாட்டை விட்டு
அயலகங்கள் நாடிச் சென்றார்
போட்டி போட்டு இரங்கூன்,
மலேசியா  சொத்தை சேர்த்தார்
நாட்டை விட்டு
வெள்ளையரை ஓட்டுதற்கு
நம்தமிழர் மீண்டும்
கடலை ஆள்வதுதான்
நல்லவழி என்று
வ.உ.சி சபதமேற்றார்
காட்டை விற்று
வீட்டஐவிற்றுத்தானே
கப்பல் விட்டார்

கண்டதுமே பரங்கியர்கள் கலகலத்தார்
கண்படி கேசைபோட்டு சிறையில் வைத்தார்
பிணையெடுக்க முடியாத பிரிவில் போட்டார்
முனைமழுங்கா வீரத்தை உரசிப் பார்த்தார்
தனையிழந்தும் தளராத உறுதியோடு
தன்மான சிங்கமாய் எதிர்த்து நின்றார்


                       (வேறு )
சணல் பிரிக்கும் எந்திரத்தை சுற்றி சுற்றி
சதைப்பிய்ந்து கையெலாம் இரத்தக் காயம்
மணல் திருடும் கூட்டத்தார் மாபியாக்கள்
மாளிகைகள் கார்பவனி ஊர்வலங்கள்
அனல்தெறிக்கும் பேச்சுக் காரன் கால்களிளே
அடடா பிணைத்திருந்த சங்கிலிகள்
பணமிருந்தும் பதவியிருந்தும் உதறிவிட்டு
பாழ்சிறையில் செக்கிழுத்தார் சிதம்பரமும்

வெள்ளையரின் ஆட்சியிலே
வெங்கொடுமை சாக்காடு
கொள்ளையரின் ஆட்சியிலே கொடுமையென்னே வெட்கக்கேடு
தள்ளாத வயதினிலும்
தன்வயிற்றுப் பிழைப்புக்காய்
சில்லரையில் மண்ணெண்ணெய்
விற்றாரே
அல்லல்பட்டு வ.உ.சி செத்தாரே


வேறு எந்த நாட்டினிலும்
இப்படியோர் சோகம் உண்டா ?
விடுதலைக்கு உழைத்தவர்கள்
இப்படித்தான் செத்ததுண்டா?
ஏறுபோல் நடையழகன்
வ.உசி ஈகம்போல் கண்டதுண்டா?
எழுச்சிமிகு வீரனுக்கு
இப்படியோர் மரணம் நன்றா?

நம்பிவந்த மனைவி
மக்கள் நடுத்தெருவில்
கையேந்த பொறுத்துக் கொள்வேன்
நான்பிறந்த நாட்டுக்கந்த
நிலமையென்றால்  ஏற்கமாட்டேன்
கம்பீரமாய் கர்ஜித்த அரிமா தானே கடைசியிலே தவித்தது கஞ்சிக்காக
காடையர்கள் விடுதலையால் பதவிபெற்று
கர்மவீரன் ஈகத்தை மதிக்கவில்லை

அடிமையென இருந்த நாட்டில்  அதிகம் தொல்லை
அன்றாடச்  சித்ரவதைக் கோர் எல்லையில்லை
குடிகளுக் காய் குடும்பம் இழந்த தலைவனுக்கு
குடிப்பதற்கும் நீரில்லா அவல மிங்கே
கொடிகாக்க கொதித் தெழுந்த தலைவனுக்கு
கொள்ளையர்கள் கொடுத்த தெல்லாம் வறுமைதானே
தடியெடுத்த தடியனெல்லாம் தலைவ னிங்கே
தன்மான சிங்கத்துக்கோ மதிப்பே இல்லை

வ.உ.சி
இரட்டை ஆயுள் சிறையைப் பெற்றவர்
இளமை முழுதும் நாட்டுக்கே இழந்தவர்
பரங்கியர் கண்களில் பயத்தை விதைத்தவர்
பாற்கடல் குலுங்கிட கப்பல் விட்டவர்
மார்தட்டி பரங்கியரை மல்லுக்கு இழுத்தவர்
மானம் இழக்காத மாவீரம் படைத்தவர்
ஓர்நாளில் உலகையே உலுக்கிப் பார்த்தவர்
ஓயாது அடிமைத் தளை உடைத்திட உழைத்தவர்

தமிழை உயிராய் தலைமேல் வைத்தவர்
தன்னெழுத்தால் தமிழுக்கு அணிகலன் சேர்த்தவர்
வள்ளுவத்துக்கு உரையை அளித்தவர்
வான்புகழ் இலக்கியம் வார்த்துக் கொடுத்தவர்
கப்பல் விட்டிடும் ஆளுமை நிறைந்தவர்
கடைநடத்த தெரியாத வியாபாரி ஆனவர்
சொந்தக் கட்சியின் சூட்சியில் மடிந்தவர்
சுதந்திரம் பெற்றும் சுண்ணாம்பாய் வெந்தவர்

படை நடத்திடும் பக்குவம் தெரிந்தவர்
பாசாங்கு அறியாத பாரத புதல்வரவர்
காந்தியை எதிர்த்து திலகர்வழி சென்றவர்
காங்கிரஸ் சூட்சியில் காணாமல் போனவர்
சிராவயல் இளைஞர்கள் நூல்நூற்கும் காட்சியை
சிரித்துக் கண்டித்து சீர்திருத்தம் சொன்னவர்
இராட்டை பிடிக்கும் கைகளில் எல்லாம்
துமுக்கியை பிடிக்க தூண்டுகோள் ஆனவர்



கோவை சிறைமதிலும் உன் கீர்த்தி சொல்லும்
கொட்டடிகள் எல்லாம் உன் மாட்சி சொல்லும்
சாவை எதிர் கொண்ட வீரம் சொல்லும்
சரித்திரமே சாட்சியாகி உன் ஈகம சொல்லும்
                                (வேறு )
விடுதலை அடைந்ததும் விளைத்திட எத்தனை நினைத்திருப்பாய்
வீரமாய் முழங்கிய போதென்ன நினைத்திருப்பாய்
அந்நியர் விரட்டிட எப்படி உழைத்திருப்பாய்
-எத்தனை
ஆயிரம் இரவுகள் உறக்கத்தை தொலைத்திருப்பாய் 
பெற்ற விடுதலை நாட்டினில் உனக்கு நேர்ந்ததென்ன
பேடிகள் உந்தன் ஈகம் மறந்து செய்ததென்ன
கோடிகள் சேர்த்திட ஆட்சியாளர் கூத்தடித்ததென்ன
-உன்
கொடுமை கண்டும் அயர்ந்தவர்கள் படுத்ததென்ன
வீதியில் உன்னை அலைந்திட விட்டனரே
நாதியற்றவர் போலுன்னை நடத்தினரே

இந்திய தேசமே மனசாட்சி உனக்கிருந்தால்
இப்படியோர் ஈகத்தை புழுதியில் விடுவாயா ?
காந்திய தேசமே உனக்கு கருணை இருந்தால்
கப்பல் ஓட்டிய களப்போர் வீரன்  -மளிகை
கடைநடத்திடும் அவலத்துக்கு தள்ளுவாயா?

மண்ணைக் காத்திட 
பொன்னை பொருளை 
இழந்தவனை
மண்ணெண்ணய்க் 
கடைவைத்து 
பிழைத்திடப் பார்ப்பாயா ?
எல்லோரும் சுதந்திரம் சுவாசிக்க
தான் சுவாசிக்க மறந்தவனை
சில்லறை வணிகத்தில்
சிக்குண்டு பிழைக்க விடுவாயா ?

கல்வியில் சிறந்தவனை
கப்பலோட்டிய தமிழனை
வல்வில்ஓரி போல் வள்ளலை
சல்லிக்காசுக்கும் மதிக்காத
சனநாயகம் ஒரு கேடா ?

பல்லக்குத் தூக்காமல்
பாடைக்கும் அஞ்சாமல்
பரங்கியரை எதிர்த்தவனை
பாராமுகமாய் மறந்தீரே
பாருக்குள்ளே நல்ல நாடா?
பகர்வீரே ?

கடற்கரையில் கழிமுகத்தில்
உப்புக் காய்ச்சியதே
வீரமிக்க போராட்டமென்றால்
ககனத்தை ஆண்டவனை
கடலாதிக்கம் புரிந்தவனை
கால்காசுக்கும் மதிக்காமல்
ஆழ்கடல் மீதிலே
ஆரவாரமாய் கப்பல் விட்டானே வ.உ.சி
இந்த வீரத்துக்கு இணையுண்டா?
























No comments: