Monday, May 16, 2022

கண்ணன் என் காதலி

 

முதல்முறை பார்த்தபோது முறுவலித்து என்னைப் பார்த்தாள் 
முகத்தினை திருப்பாது மும்மடங்கு அவள்  பொலிந்தாள்
எதனால் அவள்  என்னை இப்படி ஈர்த்தாளென இப்போதும் நானறியேன்
கலகலவென சிரிப்பாள்  கைகொடுத்து தூக்கிடுவாள்
கல்லூரி நாள்முழுதும் கற்பித்து காத்திருந்தாள்
உளமார எனை விரும்பி உறவாக பார்த்திருந்தாள் 
உடுக்கை இழந்தவன் கைபோல உயிராய் என்னை மதித்திருந்தாள்
மனதில் எனக்கு ஒரு வலி  வந்தால்
மருந்தாய் அவளது மொழியிருக்கும்
கனவிலும் எனக்கு ஒரு தீமையினை  கண்டிப்பாய் அவளும் நினைத்ததில்லை காதலால் என்னை வசியம் பண்ணி காலம் கடந்து நடத்துகிறாள்
கருப்பாய் இருந்தபோதினிலும் கட்டித் தங்கம் என்றிடுவாள்
வெறுப்பை உமிழ்ந்து பார்த்ததில்லை
வெள்ளை மனத்தில் கரவில்லை
முத்தம் அவளும் கொடுத்ததில்லை
முன்னும் பின்னும் அணைத்ததில்லை
சத்தம் இன்றி காதல் யுத்தம்
சரித்திரப் புகழாய் நடத்திவிட்டாள்
பாலினம் எதிர் எதிரில்லை
பாசாங்குகள் ஏதுமில்லை
வாலிப வயதின் நாள்முதலாய் -எனை வசியம் செய்த பேரழகி
ஆணுக்கு ஆணே ஆசைககொள்ளும்
அழகிய மாயக் கண்ணனிவன்
நாணத்தில் நானும் இருக்கின்றேன்
நாயகன் எண்ணி களிக்கின்றேன்
அம்பலத்தாடுவான் ஆணையினால்
அழகிய காதல் ஊர்வலமே !

No comments: