Tuesday, December 7, 2021

 மாடாகப் பாடுபட்டு

மழை ழை வெய்யில

தாங்கிக்கிட்டு
ஓடாக உழைச்சு
பிள்ளைங்க
ஒசர உசுரு கொடுத்து
உழைச்சு ஜனங்க தவிக்க
உசுர வாங்கும் நீட்டு
உதவாதினி ஓட்டு

கஞ்சியின்னும் கூழுயின்னும்
கண்டதையும் குடிச்சு
காளை மாட்டை மேச்சு
களையை வெட்டி பொழைச்சு
கல்வி கற்க புள்ளைங்களை
காத தூரம் அனுப்பி
கவலை அணிஞ்சு கிடக்க

ஒட்டுமொத்த நாட்டுக்குமே
ஒரே தேர்வை புகுத்தி -ஏழைங்கல
ஓரமாக நிறுத்தி
ஓரவஞ்சனை செய்யும்
ஈரமில்லா தாயே
எதுக்கு எங்களுக்கு நீயே !

பன்னெண்டு வருஷ படிப்பு
பத்தாதா என்ன வெறுப்பு
பாழாப்போன சட்டம் -பிள்ளைங்கள
பாடையில் ஏத்தும் சட்டம்-இனி
செல்லாது உங்க கொட்டம்

பள்ளியிலே படிக்கும் போதே
பார்த்து பாத்து  ஸ்டெத்தெடுத்து
பலவருஷம் டாக்டராவே
வாழ்ந்து வந்த பிள்ளைங்கள
படிக்க வேணாமின்னு தடுக்க
பார்த்து வச்சு ஆப்பு
நீட்டு  என்னும் வேட்டு

கனவெல்லாம் கலைஞ்சு போக
நெனவெல்லாம் நீர்த்து போக
கழுத்தில் கயித்த மாட்டி
கருகும் பிஞ்சு உசுரு -உங்களுக்கு
உசுறு இல்ல மசுறு ?

அனிதாவை பறிகொடுத்தோம்
அழுதழுது புலம்பி நின்னோம்
அடுத்தடுத்து மரணங்கள்
அரச படுகொலை ரணங்கள்
வாழப்பிறந்த புள்ளையெல்லாம்
வாரிக்கொடுத்து மாரடிக்க -நாங்க
வாங்கிவந்த வரமா -இந்தமண்ணு
வாய்க்கரிசி வயலா ?

யாருக்குமே நெஞ்சமில்ல
கொஞ்சங்கூட ஈரமில்லே
கூறுகெட்ட தேசத்தில
குழந்தைளகள பறிகொடுத்து
கூடிநின்னு அழுவுறோம்
குமைஞ்சு நின்னு நொறுங்குறோம்

ஏட்டுக்கல்வி எட்டாதின்னு
எழுதி வைச்ச சட்டமா
எங்களையே வதைக்குறான்
எவந்தான் இதக் கேக்குறான் ?

தலைகீழா மாற்றம் வரும்
காலம் வெகுதூரமில்ல
கொலைகார கும்பல் அழியும்
நாளும் வெகுதூரமில்ல
சேர்ந்து வாங்க நடப்போம்
செறுபகையை முடிப்போம் !

No comments: