Saturday, March 10, 2012

மகளிரைப் போற்று

படைப்பினில் பலவகைப் பிரிவுகள் நன்றாய்
அட 'நீ' மட்டுமே பகுத்தறிவுப் பெற்றாய்
ஆறாம் அறிவை அடகும் வைத்தாய்
வேறாய் மகளிரை விலக்கியே வைத்தாய்
படைப்பு என்ன வெளியேறும் கழிவா?
இடை சிறுத்தவர் இழிந்த பிறவியா?
நடைப் பிணமா பெண்டிர்? நன்றா உனக்கு?
தடையேன் உனக்குள் தயக்கம் விலக்கு!

மட்டம் தட்டியே மார்தட்டும் மனிதா!
சட்டம் வகுத்தும் சறுக்குதல் சரியா?
மாடாய் அவளும் வேலைகள் செய்வாள்
ஓடாய் தேய்ந்தும் உனக்கே உழைப்பாள்
உனக்குக் கீழ்தான் அவளென்ற போக்கு
நனவிலி மனத்திடை நண்பா நீக்கு!
தாய்வழிச் சமூகம் தான்நம் மரபு
தாய்மைப் பழித்து ஏனடா கரவு?

அரிதாய்க் கிடைத்த அற்புதப் பிறவியில்
பரிசாய் மகளிர் பாதிநம் வாழ்வில்
உரிமைகள் கேட்டு உண்ணா நிலையெனில்
சிரிக்காதா இயற்கை சிந்தனைச் செய்வாய்
அவரின் பங்கை அவர்கள் அடைந்திட
தவணை ஏனடா?தரித்திரம் சுமந்திட
மகளிர் உரிமை மகளிர் அடைய தடையாய்
மகனே இனிநீ இருந்தால் உடைவாய் மண்டை

No comments: