Tuesday, January 24, 2012

இருட்டைக் கிழித்தெறி

ஆயிரமாயிரம் கோடியில் ஊழல்கள் அரங்கேறும் தேசமடா
அன்றாடங்காச்சிகள் அநியாயமாய் சாகும் அற்புத தேசமாடா
கோயிலும் கோபுரமும் கோடிக்கோடியாக வான்தொட்டு நிற்குமடா
பாயின்றி படுக்க இடமின்றி குறட்டிலே பறிதவிக்கும் மக்களடா

மட்டை விளையாட்டு மடையர்கள் ஆட்டத்தில் மயங்கிடும் இளைஞரடா
மானத்தை மண்ணை மதிக்காத நிலையிலே வாழ்ந்திடும் யுவதியடா
பட்டை பட்டையாக சாம்பலைப் பூசியே ஏச்சிடும் (போலி) சாமியடா
பண்பாட்டை மொழியை பாதுகாக்காத பச்சைத் துரோகமடா

அயல்நாட்டு வங்கியில் அன்னைதேசப் பணம் அடைக்கல மானதடா
அம்பானி டாட்டாக்கள் ஆட்டும் விரல்திசை அரசாங்கம் ஆடுதடா
கயல்தேடும் மீனவர் கட்டுமரங்களும் கடற்கொள்ளை ஆகுதடா
கன்னித் தமிழீழம் வல்லரசுக் கயமையால் கடல்நீரில் மூழ்குதடா

பன்னாட்டு நிறுவனப் படையெடுப்பால் தேசம் பாழ்பட்டு போகுமடா
பச்சத் தண்ணீருமவர் வைச்ச விலையென்னும் பயங்கரம் நிகழுமடா
தென்னாடு வடநாடு தீராத பகையாலே இந்நாடு உடையுமடா
தெளிவில்லா கொளகையால் தெருவினில் நம்மன்னை பாருமடா

காசுக்குக் கல்வியைக் கடைச்சரக்காக்கிய கணவான்கள் தேசமடா
காமராசுக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கல்விக்கண் மூடுதடா
ஆசியாக் கண்டத்தை அபகரித்திடவே அன்றாடம் எண்ணுதடா
அசிங்கமில்லாமலே வறுமையை தேசிய அவமானம் என்குதடா

நூறுகோடி மக்கள் வீறு இருந்தாலும் நூல்பண்டம் ஆனதடா
நுகத்தடிப் பூட்டிய மாடாக உலகவங்கி சாட்டைக்கு ஓடுதடா
ஆறு அணையெல்லாம் அவரவர் உரிமையென அடங்கிக் கிடக்குதடா
ஆனாலும் ஒருகுடை அரசாட்சி கனவிலே அன்றாடம் விழிக்குதடா

அறுவடை செய்திட்ட தானியமெல்லாம் அறைக்குள்ளே முடங்குதடா
அன்றாடம் கஞ்சிக்கு அன்னையின் பிள்ளைகள் அலைந்து திரியுதடா
தெருவெல்லாம் ஒளிவெள்ளம் இரவைப் பகலாக்கி நகரங்கள் வாழுதடா
தெளிவில்லா மடமையில் பகலும் இருட்டாகி கிராமங்கள் சாகுதடா

அணிசேரு தோழரே அனைவரும் கைகோர்த்து அன்னை தேசம் காப்போம்
அநியாய பேர்வழி அதிகார கூட்டத்தை அடியோடு தான் சாய்ப்போம்
இனிவேண்டாம் தாமதம் இப்போதே சேருவீர் இருட்டைக் கிழித்தெறிவோம்
இனமான உணர்வோடு எழுச்சியாய் யாவரும் இம்மண்ணைக் காத்திடுவோம்

No comments: