Sunday, March 11, 2012

பரம்பரைப் பாத்திரம்

நான்கு பிள்ளைகளோடு
நலம் பாராட்ட முடியாதவன்
நான் தான் தலைவனென்று
நன்றாக நடிக்கிறான்.

வீண் புரளி செய்து
விழாக்களைக் கெடுக்கிறான்

பாட்டிமார் கதைகளைப்
பதிவுகளும் செய்கிறான்

'தான்' தான்
கோயில்கள் கட்டியதாகவும்
குளங்கள் வெட்டியதாகவும்
கூசாமல் சொல்கிறான்

அப்பாவின் புகழினில்
அவன் பிழைத்த போதிலும்
தப்பாமல் பிள்ளையும்
தாத்தாவின் வாரிசென்று
தண்டோரா போடுறான்

எங்களைக் கலக்காமல்
எவனும் கூடக் கூடாதென்று
தங்களின் வீட்டருகே
தட்டிகள் வைக்கிறான்

அரங்கத்தில் வந்ததும்
அனைவரும் எழுந்துநிற்க
ஆள்வைத்துச் சொல்கிறான்


மேடையில் தலைமையேற்க
மேல்துண்டை சரிசெய்து
பாடையிலும் பிணமாக
பாவணைகள் செய்கிறான்

பின்பாட்டைக் கூடப்
பிதற்றத் தெரியாதவன்
ராஜபார்ட் கட்டிட
ரகளைகள் செய்கிறான்

எந்த விழா எடுத்தால்
எவ்வளவுத் தேறுமென்ற
விந்தை அறிந்ததால்
சொந்த செலவின்றி
சொற்பந்தல் மூலதனத்த்தில்
சுருட்டியும் கொள்கிறான்.

பரம்பரைப் பேரும்
பந்தாவும் இருப்பதால்
வரும்படி பார்த்தலே
வாடிக்கையானது.

அத்தனை அசிங்கமும்
அறிந்தே பலரிங்கே
புத்தனாய் அவனைப் போற்றி
புலால் சோறு படைக்கின்றார்

நின்று
நிழற்படம் எடுத்துக் கொண்டு
மென்று விழுங்குகின்றார்
மிருகமாய் மலத்தினை

பொய்முகம் கிழிக்க
புறப்படும் இளம்படை
மெய்யிது மெய்யிது
மெல்ல அழியும் கறை.

No comments: