Saturday, March 9, 2013

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?

தலைப்பைக் கண்டதுமே தடுமாறிப் போனேன்யான்
நிலையின்றை அறியாமல் கலாவிசுக் கொடுப்பாரா?
அலையலையாய் எண்ணங்கள் ஆடிநின்ற போதினிலும்
தலைநகரில் நடந்தகதை தமிழ்நாட்டின் இற்றைநிலை

எண்ணுகின்ற வேளையிலே எள்ளலவும் மாற்றமில்லை
மண்ணுலகில் மகளிரையே உயிராக மதிக்கவில்லை
பண்ணுகின்றார் பணமவரைப் பகடைக் காயாக்கி
திண்ணுகின்றார் அவருழைப்பில் தினமும் அடிமையாக்கி

அத்தனைத் துறைகளிலும் அதிரடியாய் மாற்றங்கள்
இத்தரையில் பெண்ணின்றி ஏதினிமேல் ஏற்றங்கள்
முத்திரைப் பதித்தப்பெண்  முகவரிகள் ஏராளம்
நித்தரை இழந்தவர்கள் உழைப்போ தாராளம்

கத்துங் குயிலாக களப்போர் மங்கையாக
எத்திக்கும் சென்றுழைக்கும் எழுச்சி மகளிராக
வித்தக அரசியலில் வீறுநடை தலைவியாக
நித்தமும் காணுகின்றோம் நிதர்சனம் மறக்கின்றோம்

களர்நிலமாய் குடும்பங்கள் மலடாகிப் போகாமல்
தளர்நடையில் குமுகாயம் தடைபட்டு நிற்காமல்
வளர்பாதை செல்வதற்கு வேண்டுமே பெண்கல்வி
களக்கவி பாவேந்தன் கலகக் குரலறிவோம்

பணமீட்டும் பெண்பார்த்தே மணமுடிக்கத் துடிக்கின்றாய்
மணப்பொருத்தம் பார்க்காமல் பணம்பங்களா கேட்கின்றாய்
இனம்வேறு என்றாலும் இருக்கும் சொத்தை எண்ணுகிறாய்
கணமேணும் காசொழிய கருத்தினில் ஏதுமுண்டா?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?
ஆணவத்தின் வினாவிடுத்து அறிவுபெறு!
துடுப்பாக வாழ்க்கையினைக் கடப்பதற்கு
துணையாகும் பெண்கல்வி தூய்மையாகு!



No comments: