Wednesday, August 21, 2013

அவதாரப் புருஷன்

வயோதிகத்திலும்
வாலிபமாய்
உன்
வசன கவிதை

திருவரங்கமிருந்து
தமிழை
திரையிசையில்
தெருவெங்கும் முழங்கியவன்1

கருவறையிலேயேக்
கவிதைகளைத்
திருவாகப் பெற்றவன்!

நக்மாவைப் பாடினாலும்
நமீதாவைப் பாடினாலும்
அக்மார்க் கவிதைகளால்
அட்டகாசம் செய்தவன் !

கம்பன் தமிழைக்
கடனாகப் பெற்றதனால்
நம்பிக்கை விதைகளை
நடவு செய்தவன்!

வெற்றிலைச் சாற்றோடு
வெல்லத் தமிழை
மெல்ல மென்று மென்று
மேனி சிவந்தவன்!

புதுக் கவிதைப் பூக்களால்
அவதாரப் புருஷனை
அரங்கேற்றம் செய்தவன்

பாரதக் கதையை
பாண்டவர் பூமியாய்
வேண்டியேப் படைத்தவன்

உன்
அம்மா பாட்டென்றால்
கல்லும் கரையும்                                                                                                                               காயும் கனியும்

நடிகன் இராமச்சந்திரன்
நாட்டை ஆள்வதற்கு
'பாட்டை' போட்டவன்

அரிதாரம் பூசிய
அவதாரங்களையெல்லாம்
அழகாகக் காட்டியவன்

அன்றாடம் குழிதோண்டும்
அபாயத் திரைத் துறையில்
வென்று ஐம்பது ஆண்டு
வெற்றிக்கொடி நாட்டியவன்

தாடியைத் தடவி நீ
பாடும் தமிழ்ப் பாட்டு
நாடி தளர்ந்தவருக்கும்
நம்பிக்கைத் தெம்பூட்டும்

இசங்களுக்கு வசமாகா
நிசமானக் கவிஞன்

உதட்டைப் பிரித்து நீ
உச்சரிக்கும் வேளையிலே
இதமாகத் தமிழ்த் தாய்
எப்படி நடம்புரிவாள்!

எதிரே அமர்ந்து
எத்தனை முறைநான்
குதியாய்க் குதித்து
குயில் தமிழ்க் கேட்டிருப்பேன்!

மருத்துவ மனையில்
கருத்துகளைச் சிந்தித்து
காவியங்கள் படைப்பாயென
காத்திருந்த வேளையிலே

அதிர்ச்சி செய்தியோடு
அலைவரிசை கத்தியதே
முதிர்ந்த தமிழ்ப் பழமே!
மூச்சை ஏன்விட்டாய்?

பேச்சே வரவில்லை
பேதை சிறுவனென்
ஆழ்ந்த அஞ்சலிகள்
ஆசிர்வதிப்பாயாக!

No comments: