Saturday, July 9, 2011

மாபெரும் சபைதனில் நீ நடந்தால்....

ஆயிரங் கோடிப் பணமிருந்தாலும்
ஆறுதல் அடைவதில்லை-மனிதன்
ஆலய மாயிரம் சென்று வந்தாலும்
ஆசைகள் விடுவதில்லை

நோயினில் நொந்துப் படுத்திருந்தாலும்
நாயாய் அலைகின்றான்-பணத்தை
ஆயிர மாயிரம் தவறுகள் செய்தும்
குவித்திடத் துடிக்கின்றான்

ஊருக்கு உழைத்திடும் எண்ணமில்லாமல்
உறவுக்குச் சேர்க்கின்றான்-என்றும்
பாருக்குள் பெரியப் பணக்காரனாகவே
பாவங்கள் செய்கின்றான்

காரும் பணமும் பங்களா சுகமும்
கண்டிடத் துடிக்கின்றான்-மேலும்
ஆறும் காடும் மலையும் சுருட்டிட
ஆலாய்ப் பறக்கின்றான்

யாரும் பார்க்க வில்லையென்றே
எதுவும் செய்கின்றான்-நல்ல
சீரும் சிறப்பும் நிறையும் வாழ்வை
சீக்காய் மாற்றுகின்றான்

உலக நடப்பை உணர்ந்தே வாநீ
உருப்பட என் தோழா -நாட்டில்
கலகம் செய்தேனும் காரிருள் விரட்ட
கைகோர்த்து வா தோழா

நிலவும் சாதி சமயவெறி எரித்திட
நீ வா என் தோழா-மண்ணில்
உலவும் கயவர் உயிரைக் குடித்திட
உணர்வோடு வா தோழா

செய்யும் செயல்களால் சீரிய மன்றம்
சிறப்புகள் செய வேண்டும்-உந்தன்
உய்யும் உழைப்பால் உலகமே உன்னை
உயர்வுகள் செய வேண்டும்

மெய்யன்பு நிறைந்த மேன்மை பணியால்
மேடைகள் உனைப் பாடும்-உன்
கையும் கருத்தும் கறைபடாதிருந்தால்
காலம் உனைப் போற்றும்

சொந்தம் மறந்து சுயநலம் துறந்தால்
சூழல் உனைப் புகழும்-உலகின்
எந்தச் சபைதனில் நீ நடந்தாலும்
ஏற்றம் உனைப் பணியும்

No comments: