இத்தரை மீதினில் எத்தனைத் தோழர்கள்
நித்தமும் உழைத்து நிலத்தினைத் திருத்தினர்
கொத்தடி மையாக கூலியா ளாக
அத்தனை வலியும் தாங்கிக் கிடந்தனர்
சிகாகோ நகரில் சேர்ந்த தொழிலாளர்
சிந்தித்து பேசி சீரிய முடிவினை
சிகரமாய் எடுத்தனர்;சிவப்புக் கொடியினை
சேர்ந்து பிடித்தனர்; ஓங்கி முழங்கினர்
கூழுக்கும் கூலிக்கும் கூவி அழுவதா?
கூனராய் எப்போதும் குனிந்தே கிடப்பதா?
வேலிக்குள் அடைபட்ட விலங்கெனக் கிடப்பதா?
வேழமே எழுந்துவா விலங்கை ஒடித்துவா
ஆலைக்குள் அகப்பட்டு ஆவியை விடுவதா?
ஆளுக்கு ஆள்மிரட்ட அடிபணிந்து வீழ்வதா?
சோலைக்குள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க
வேலைக்குள் வருவாய் விழிப்பாக இருப்பாய்
எட்டுமணி நேரவேலை எம்தோழர் வென்றநாளை
கொட்டிக் கொட்டி எல்லோரும் கூட்டமாய்
பட்டி தொட்டி எல்லாமும் பாடிக் களிப்போமே
தட்டித் தட்டிக் கைசேர்த்து தாளமிடுவோமே
ஆண்களும் பெண்களும் அணிதி ரள்வோமே
ஆனந்தக் கும்மி யடித்து மகிழ்வோமே
ஆனவ முதலாளிக் கொட்டத்தை யடக்க
பூணுவோம் உறுதி பாடிவா தோழனே
சேர்ந்துவா தோழனே செகத்தினை மாற்றுவோம்
செம்மார்ந்து தொழிலாளர் செருக்கினைப் போற்றுவோம்
ஆர்த்துவா தோழனே அணிவகுத்து செல்லுவோம்
ஆயிரம் தடைதகர்த்து மேநாள் போற்றுவோம்
2 comments:
பாவலர் பாலசுப்ரமணியம் வணக்கம்.
உங்கள் கவிதை மிக நன்று. இணையத்தில் உங்கள் வரிகளைக் காண்கையில் இன்பம்.
அன்பன்
இராஜ.தியாகராஜன்
www.pudhucherry.com
www.tyagas.wordpress.com
www.thamizhmozhi.blogspot.com
இனிய தோழர் தியாகராஜன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் என் வலைப்பக்கத்தை படித்து பாராட்டியமைக்கு நன்றி .உங்களைப் பார்க்காதது தான் குறை.எங்களோடு சில நாட்கள் வரலாமே?
Post a Comment