Friday, October 24, 2008

மழை

காலம் காலமாகவே

கேட்டபோது பெய்ததில்லை

மழை

பருவகாலத்தில் மக்கள்

பூசை செய்து பயத்தோடும்

பக்தியோடும் வழிபட்டாலும்

பெய்வதில்லை


மாரியம்மன் வழிபாடும்

மழையை வேண்டிதான்

வழக்கமானது போலும்


பெய்ய ஆரம்பித்த்தால்

அடைமழையாய்

அடித்து கொட்டும்


குடிசைகள் மூழ்கி

குடியிருப்புகள் அபாய

பகுதிகளாகும்




ஒலிப்பான்

வாகன ஓட்டிகள்
காதுகளற்ற ஜீவன்கள்
எப்போதும்

ஒலிப்பான்களில்
கை வைத்துக்கொண்டே
பயணம்

இயந்திரங்களின்
இரைச்சலோடு
ஒலிப்பான்களும்

காதுகளைக் கிழிக்கும்
ஒலியோடு கண்மூடி
ஓட்டம்

அலரும் சத்தத்தில்
ஆடிப்போகும் உடல்
அசுரத் தழுவல்

காதுகளைத் துளைத்து
மூலையை கசக்கி
நரம்புகளை அழுத்தும்

எரிச்சலில் எல்லாம்
இழந்த வெருப்பு
ஏறும் குருதி அழுத்தம்

வண்டிகளைப் பார்த்தாலே
வருவது எமனோ என
நெஞ்சம் குமுரும்

பேரிரைச்சல் புத்தியை
பேதலிக்க வைத்து
பேச்சை நிறுத்தும்

கழத்து வலிக்க
காதுகள் கிழிய
கண்களை மறைக்கும்

ஒலிப்பான்கள்
உயிர் குடிக்கும்
கருவிகளாய்

Tuesday, October 21, 2008

பாரதியே புறப்பட்டு வா புதுவைக்கு

புதுமைகளைப் பாடிய
பாரதிப் புலவா
புறப்பட்டு வா நீ
புதுவைக்கு உடனே

ருஷ்யப் புரட்சியை
வரவேற்ற பாவலா
ஈழப் புரட்சிக்கு
எழுதிட நீ வா

இமயம் குமரியை
இணைத்திட நினைத்தவா
எங்கள் காவிரிக்கு
இழுத்து வா கங்கையை

காக்கைக்கு அரிசியை
படைத்த கவிஞனே
கால்வயிறு நிரம்பாதவர்
கவலைகளைப் பாட வா

துலுக்கரைத் தோழராய்
தோள்பற்றிய பாவலா
துயருறும் குஜராத்
தோழரைக் காக்க வா

யேசுவை பாடலில்
ஏற்றிய கவிஞனே
எரிந்திடும் ஒரிசாவை
எழுந்து அணைக்க வா

அதிரும் பறையொலியில்
ஆடிக் களித்திட
ஆச்சாரம் மறுத்தவா
அடியெதுத்து நடந்துவா

தனிப்பாதை தேவாலயம்
தரை மட்டமாக்க
தமிழர் மறமே
தயங்காமல் நீ வா

Sunday, October 19, 2008

பேச்சு

பார்க்கும் இடமெல்லாம்
பரபரப்பாய் பலவிதப்
பேச்சுக்கள்.
யார்க்கும் புரியாமல்
எதையோ நீட்டி முழக்கி
எறியப்படும் சொற்கள்.
வேர்க்க விருவிருக்க
கேட்பவர் வேதனையில்
துடிக்க பேருரைகள்.
மேடை விட்டிறங்கியதும்
மேல் துண்டாய் தூக்கி
எறியப்படும் கொள்கைகள்.
காற்றில்
காணாமல் போன
வாக்குறுதிகள்.
நாக்கு வங்கியின்
வாக்கு மட்டுமே
மூலதனம்.
சீக்கு சொற்களால்
சீழ் பிடித்துப் போன
செவ்வாய்.
நீக்கு போக்குகள்
நித்தமும் தேடும்
நிதர்சணம்
மேலும் கீழும்
மேனி அசைந்து
வாழும் கலை.


மனிதம்

இடம் பிடிக்கும் ஆசையில்
இரத்த வெள்ளத்தில்
யாருமற்று.
உலகத்தின்
எல்லா பக்கங்களிலும்
கலகத்தின் சுவடுகள்.
ஈராக்கில்
இனப்படுகொலை
ஈவு இரக்கமின்றி.
தன் குடிமகன்
கொல்லப்பட்டால்
தவிக்கும் மேலைநாட்டவர்.
சொந்த மக்களை
அகதிகளாக்கும்
இலங்கை பேரினவாதம்.
தன் நாட்டு
மீனவர்களையே
தமிழர்களாய் பார்க்கும் இந்தியா.
இந்தியப் பெருங்கடலை
வல்லாண்மை செய்ய ஆயுதம்
வழங்கும் இந்தியா
உலக அமைதியை
உரக்க பேசியே
உயிரைக் குடிக்கும் அமெரிக்கா.
தமிழர் கறி கேட்கும்
தென்னிலங்கை
பௌத்தம்.
சதை பிய்த்து
குருதி குடித்து
சந்தியில் மனிதம்.
ஆளுக்காள் அரசியல்
பண்ண இடந்தரும்
அட்சயபாத்திரம் மனிதம்.

Sunday, June 15, 2008

விண்ணில் பறக்குது விலைவாசி

விண்ணில் பறக்குது விலைவாசி
வீனாய் எதற்கிந்த அரசாட்சி
கண்ணில் தெரியுது சுடுகாடு - ஆட்சிக்
கட்டிலை விட்டு நீயோடு

கச்சா எண்ணெயின் விலையேற்றம்
காரணமா மக்கள் கழுத்தறுக்க
பிச்சைக்காரராய் எங்களை மாற்றும்
பிணந்திண்ணிக் கழுகாய் ஆனதுமேன்

ஆயிரம் கோடி மானியங்கள்
அம்பானி சொத்தை அதிமாக்க
வாய்வீரம் பேசும் சிதம்பரங்கள்
வட்டி முதலாளிகள் கைக்கூலி

அட்டையென உறிஞ்சும் கடனட்டை-நாட்டை
அடிமையாக்கும் உலக வங்கி
பெட்டையெனப் புலம்பும் ஆட்சியாளர்
பெருத்த ஜனத்திரள் தேசமிது

உள்நாட்டு எண்ணெய்வளம் தனியாருக்கு
உலகச் சந்தையில் கையேந்தல் பன்னாட்டு வணிகருக்கு கால்பிடிக்கும்
பச்சோந்தி அரசியல் வாணர்கள்

நச்சுக் கொள்கைகள் பின்னோட்டம்
நாட்டை அடிமையாக்கும் முன்னோட்டம்
மெச்சும் அமெரிக்க நாயெனவே
மேனிக் குனிந்து தப்பாட்டம்

அப்பாவிகள் அல்ல எம்மக்கள்
அடுத்த தேர்தல் அவர்கையில்
தப்பைத் திருத்திக் கொள்ளுங்கள்
தானே விலையைக் குறையுங்கள்

தவறினால் தண்டனை நிச்சயம்
தலைகீழ் மாற்றங்கள் நிச்சயம்
பவரினை மறந்து துரிதமாய்
பொருட்களின் விலைகளைக் குறைத்திடுக

Tuesday, March 25, 2008

கட்டாந்தரை

இந்த பூமியில்
ஆகப் பெருமளவில்
வாழும் உயிர்கள்.

ஒன்றைச் சார்ந்தே
மற்றதின் இயக்கம்,
வாழ்க்கை.

கோள வடிவத்தின்
மூலம்
சுழற்சி

சுழற்சி முடிவில்
முழுமையடையும்
படைப்பு

படைப்பு
இயற்கையின்
பரிசு

பச்சைத் தாவர
உயிர்த்துடிப்பில்
பசி விரட்டு

தாவரம் விலங்கு
மனிதன் தொடரும்
உணவு உறவு

விளைந்த நிலம்
வெடித்து இருகி
கட்டாந் தரையாய்

Wednesday, January 23, 2008

காதல் துளிப்பா

மல்லிகை மணம்
அறையெங்கும்
மாற்றலானப் பெண் ஊழியர்

வருகையின் விளம்பரம்
வருடும் இசையொலி
கொலுசு

வளைவுகளில்முந்தாதீர்
எச்சரித்தும் முந்தியது
முந்தானை

வேகத் தடை
விழுந்து எழுந்து விரல்கள்
இடுப்பு மடிப்புகள்

நிலவு முகத்தில்
மின்னிய விண்மீன்
மூக்குத்தி

காதுகளில்
முழுநிலவு
வளையம்

காமராசர்

விருது நகரில் பிறந்தவராம்
விடுதலைக்காக உழைத்தவராம்
உருவில் கருமை நிறத்தவராம்
உண்மையில் வெள்ளை மனத்தவராம்

நெடியத் தோற்றம் கொண்டவராம்
நேர்படப் பேசும் குணத்தவராம்
கொடிய அறியாமை இருளகற்ற
கொள்கை வகுத்து உழைத்தவராம்

மதிய உணவு அளித்தவராம்
மாணவர் கற்றிட அழைத்தவராம்
புதிய அறிவு வெளிச்சத்தை
புகுத்தி தமிழகம் காத்தவராம்

ஐந்தாண்டுத் திட்டங்கள் கண்டவராம்
அணைகள் கட்டி முடித்தவராம்
பைந்தமிழ் நாட்டை பசுமையாக்க
பாடுகள் பட்டே உழைத்தவராம்

பகுத்தறிவுப் பகலவன் பெரியாரால்
பச்சைத் தமிழரெனப் பட்டவராம்
வகுத்தப் பாதையில் வழுவாமல்
வாழ்ந்து காட்டிய காமராசர்