Monday, May 16, 2022

தொழிலாளர் நாள்

 கைகளை  வீசி நடப்போம்

காற்றைக் கிழித்து நடப்போம்
பொய்யை புரட்டை புதைப்போம்
புரட்சியை வியர்வையில் விதைப்போம்
ஆயுதம் உழைப்பென்று முழங்கு
ஆதிக்கம் ஒழித்திட கிளம்பு
காகிதம் இல்லையெம் எலும்பு
காடுமலை பிளந்த இரும்பு

தொழிலாளர் உரிமைகள் காப்போம்
தொலைநோக்கு பார்வையில் நடப்போம்
உழைப்பாளி ஏய்ப்பவர் மாய்ப்போம்
உரிமைகள்  கைவர உழைப்போம்
அடலேறாய் அணிவகுத்து செல்வோம்
ஆண்பெண்  வேற்றுமைகள் கொல்வோம்
கடலெனவே ஆர்ப்பரித்து எழுவோம்
கார்ப்பரேட் சுரண்டலை ஒழிப்போம்

எட்டுமணி நேர வேலை
எல்லோர்க்கும் ஆகிடும் நாளை
சட்டென நடைமுறைப் படுத்த
சளைக்காமல் நீகொடு தோளை
கூலியே இல்லாத ஆளாய்
குடுப்பப் பெண்களை நடத்திடலாமா ?
வேலியே பயிர்மேயும் விந்தை
வெட்கம்தான் நினைத்திடு சிந்தை 

உலகத்து உழைப்பாளர் எல்லாம்
ஓர்குடைக்குள் திரண்டு நிற்போம்
கலகக் குரலெடுத்து ஒன்றாய்
கள்ளமார்க்கெட் ஒழி இன்றே
எத்தனை தோழரின் உழைப்பு
எழுந்தது உலகமே நிமிர்ந்து
அத்தனை ஈகமும் நினைப.பாய்
மேநாளை உயிராக மதிப்பாய்



No comments: