மே நாள்
உயிர்களைக் கொடுத்தோம்
உரிமையைப் பெற்றோம்
உழைப்பாளர் ஒன்று சேர்ந்திடுவோம்
மழையோ வெயிலோ
உழைத்து களைத்தோம்
மாபெரும் உலகை நாமே சமைத்தோம்
மதங்களைக் கடந்து சாதிகள் கடந்து
மனதால் தோழராய்
அணிவகுத்தோம்
வீதியில் இறங்கி் விடியலை இழுத்து
வியர்வை சிந்தியவர்
முழங்கிடுவோம்
வென்ற உரிமைக்கு எந்த குந்தகமும்
விளையாமால் நாமும் காத்துநிற்போம்
எந்திர தந்திர சூழ்ச்சிகளால்
இருளே சூழுது நம்வாழ்வில்
உணவை உயிரை கொடுக்கும் உழவர்
கனவாய்ப் போனது விவசாயம்
காவிரி மரித்து கடைமடை ஆனது சுடுகாடாய்
காலம் முழுதும் உழைப்பவர் கனவு
கானல்நீரா சொல்தோழா!
பெண்கள் உழைப்பை பெரிதாய் போற்றிட
ஆண்கள் உறுதி எடுத்திடுவோம்
கண்கள் தொழிலாளர் கவலை தொலைத்து
களிப்பில் திளைத்திட வழிசெய்வோம்
ஓய்வும் உறக்கமும் உரிமை என்பதை நினைந்திடுவோம்
உழைப்புக் கேற்ற ஊதியம் தன்னை
உறுதி செய்வோம்
கைகள் உயர்த்தி
காற்று கிழிபட
உரிமை வென்றிட முழங்கிடுவோம்
காலம் நமது கையில் வரும்வரை
கோலம் முழுதும் முழங்கிடுவோம்
மேநாள் எங்கள் உரிமை நாளென
மேதினி அதிர்ந்திட முழங்கிடுவோம்
மேநாள் எங்கள் மேன்மை நாளென
மீண்டும் மீண்டும் முழங்கிடுவோம்
No comments:
Post a Comment