Friday, January 20, 2012

பெயர்ப் பலகைத் தமிழாக்கு

விழியை உறுப்பென்று விளம்புகின்ற வீணரென
மொழியைக் கருவியென்று மொழிந்திடுவார் அறிஞர்சிலர்

கருவியென்றால் செயல்முடிக்கும் திடப்பொருளா தாய்மொழியும்
திருநிலைக்கத் திகழுகின்ற தீந்தமிழும் உயிரன்றோ?

பெயரிலென்ன இருக்குதென்பார் பேதையரும் வெட்கமின்றி
அயல்மொழியை அடிமையென தொழுதிடுவார் மானமின்றி

தான்பிறந்த இனக்குழுவின் தண்மைகளைச் சுவடுகளை
தான்சுமக்கும் பேரன்றோ தனித்துவமாய் தான்நிற்கும்

தாய்மொழியை மறந்தயினம் தன்னிருப்பை இழந்துவிடும்
தாய்க்கலைகள் பண்பாட்டை தானிழந்து தனிமைப்படும்
வாய்ச்சொல்லில் வீரரென வாழுகின்ற தமிழர்களே
நோய்நீங்கி நொடிப்பொழுதும் சோராது களமிறங்கி
தாய்தமிழில் பெயர்ப்பலகைத் தானெழுத உறுதியேற்பீர்
காய்நகர்த்தும் அரசியலார் கயமைகளை முறியடிப்பீர்
பேய்போலே பணம்தேடி ஓடுகின்ற வணிகர்களே
போய்ப்பாரும் உலகிலெங்கும் உம்மைப்போல் மடையருண்டோ?



அவரவரின் தாய்மொழியில் அழகாகப் பெயர்ப்பலகை
அலங்கரிக்கும் வீதியெங்கும் அதுவன்றோ தனிப்பெருமை
தவறாகப் பிறமொழியில் எழுதிவைத்தல் இழுக்கன்றோ?
தமிழர்களே தாய்தமிழில் எழுதிடுவீர் பெயர்ப்பலகை
எவருக்கும் தாள்பிடிக்கா எழுச்சிமிகு ஆற்றலுடன்
எழுதிடுவீர் பெயர்ப்பலகை நம்மொழியாம் செம்மொழியில்
சுவருக்கும் வாயிருந்தால் சூழுகின்ற அயல்மொழிகள்
தவறாமல் துப்பிவிடும் தூயதமிழ் மொழிப்பற்றால்

இனத்தின் இருப்பை இனமான நெருப்பை
இருத்திட தமிழில் எழுதுகப் பலகை

மொழியின் மான்பை விழியாய்ப் போற்ற
முதலில் எழுதுக தமிழ்ப் பெயர்ப் பலகை

வளரும் தலைமுறை வருங்கால வழித்தோன்றல்
வசையற எழுதுக வண்டமிழ்ப் பலகை

வரலாற்றுப் பிழைஞர் வரிசையில் நீங்க
திடமாக எழுதுக தெளிதமிழ்ப் பலகை

{தனித்தமிழ் இயக்க விழாவில்20-01-2012 அன்று படிக்கப்பட்ட பாடல்}

No comments: