Tuesday, January 24, 2012

இருட்டைக் கிழித்தெறி

ஆயிரமாயிரம் கோடியில் ஊழல்கள் அரங்கேறும் தேசமடா
அன்றாடங்காச்சிகள் அநியாயமாய் சாகும் அற்புத தேசமாடா
கோயிலும் கோபுரமும் கோடிக்கோடியாக வான்தொட்டு நிற்குமடா
பாயின்றி படுக்க இடமின்றி குறட்டிலே பறிதவிக்கும் மக்களடா

மட்டை விளையாட்டு மடையர்கள் ஆட்டத்தில் மயங்கிடும் இளைஞரடா
மானத்தை மண்ணை மதிக்காத நிலையிலே வாழ்ந்திடும் யுவதியடா
பட்டை பட்டையாக சாம்பலைப் பூசியே ஏச்சிடும் (போலி) சாமியடா
பண்பாட்டை மொழியை பாதுகாக்காத பச்சைத் துரோகமடா

அயல்நாட்டு வங்கியில் அன்னைதேசப் பணம் அடைக்கல மானதடா
அம்பானி டாட்டாக்கள் ஆட்டும் விரல்திசை அரசாங்கம் ஆடுதடா
கயல்தேடும் மீனவர் கட்டுமரங்களும் கடற்கொள்ளை ஆகுதடா
கன்னித் தமிழீழம் வல்லரசுக் கயமையால் கடல்நீரில் மூழ்குதடா

பன்னாட்டு நிறுவனப் படையெடுப்பால் தேசம் பாழ்பட்டு போகுமடா
பச்சத் தண்ணீருமவர் வைச்ச விலையென்னும் பயங்கரம் நிகழுமடா
தென்னாடு வடநாடு தீராத பகையாலே இந்நாடு உடையுமடா
தெளிவில்லா கொளகையால் தெருவினில் நம்மன்னை பாருமடா

காசுக்குக் கல்வியைக் கடைச்சரக்காக்கிய கணவான்கள் தேசமடா
காமராசுக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கல்விக்கண் மூடுதடா
ஆசியாக் கண்டத்தை அபகரித்திடவே அன்றாடம் எண்ணுதடா
அசிங்கமில்லாமலே வறுமையை தேசிய அவமானம் என்குதடா

நூறுகோடி மக்கள் வீறு இருந்தாலும் நூல்பண்டம் ஆனதடா
நுகத்தடிப் பூட்டிய மாடாக உலகவங்கி சாட்டைக்கு ஓடுதடா
ஆறு அணையெல்லாம் அவரவர் உரிமையென அடங்கிக் கிடக்குதடா
ஆனாலும் ஒருகுடை அரசாட்சி கனவிலே அன்றாடம் விழிக்குதடா

அறுவடை செய்திட்ட தானியமெல்லாம் அறைக்குள்ளே முடங்குதடா
அன்றாடம் கஞ்சிக்கு அன்னையின் பிள்ளைகள் அலைந்து திரியுதடா
தெருவெல்லாம் ஒளிவெள்ளம் இரவைப் பகலாக்கி நகரங்கள் வாழுதடா
தெளிவில்லா மடமையில் பகலும் இருட்டாகி கிராமங்கள் சாகுதடா

அணிசேரு தோழரே அனைவரும் கைகோர்த்து அன்னை தேசம் காப்போம்
அநியாய பேர்வழி அதிகார கூட்டத்தை அடியோடு தான் சாய்ப்போம்
இனிவேண்டாம் தாமதம் இப்போதே சேருவீர் இருட்டைக் கிழித்தெறிவோம்
இனமான உணர்வோடு எழுச்சியாய் யாவரும் இம்மண்ணைக் காத்திடுவோம்

Friday, January 20, 2012

பெயர்ப் பலகைத் தமிழாக்கு

விழியை உறுப்பென்று விளம்புகின்ற வீணரென
மொழியைக் கருவியென்று மொழிந்திடுவார் அறிஞர்சிலர்

கருவியென்றால் செயல்முடிக்கும் திடப்பொருளா தாய்மொழியும்
திருநிலைக்கத் திகழுகின்ற தீந்தமிழும் உயிரன்றோ?

பெயரிலென்ன இருக்குதென்பார் பேதையரும் வெட்கமின்றி
அயல்மொழியை அடிமையென தொழுதிடுவார் மானமின்றி

தான்பிறந்த இனக்குழுவின் தண்மைகளைச் சுவடுகளை
தான்சுமக்கும் பேரன்றோ தனித்துவமாய் தான்நிற்கும்

தாய்மொழியை மறந்தயினம் தன்னிருப்பை இழந்துவிடும்
தாய்க்கலைகள் பண்பாட்டை தானிழந்து தனிமைப்படும்
வாய்ச்சொல்லில் வீரரென வாழுகின்ற தமிழர்களே
நோய்நீங்கி நொடிப்பொழுதும் சோராது களமிறங்கி
தாய்தமிழில் பெயர்ப்பலகைத் தானெழுத உறுதியேற்பீர்
காய்நகர்த்தும் அரசியலார் கயமைகளை முறியடிப்பீர்
பேய்போலே பணம்தேடி ஓடுகின்ற வணிகர்களே
போய்ப்பாரும் உலகிலெங்கும் உம்மைப்போல் மடையருண்டோ?



அவரவரின் தாய்மொழியில் அழகாகப் பெயர்ப்பலகை
அலங்கரிக்கும் வீதியெங்கும் அதுவன்றோ தனிப்பெருமை
தவறாகப் பிறமொழியில் எழுதிவைத்தல் இழுக்கன்றோ?
தமிழர்களே தாய்தமிழில் எழுதிடுவீர் பெயர்ப்பலகை
எவருக்கும் தாள்பிடிக்கா எழுச்சிமிகு ஆற்றலுடன்
எழுதிடுவீர் பெயர்ப்பலகை நம்மொழியாம் செம்மொழியில்
சுவருக்கும் வாயிருந்தால் சூழுகின்ற அயல்மொழிகள்
தவறாமல் துப்பிவிடும் தூயதமிழ் மொழிப்பற்றால்

இனத்தின் இருப்பை இனமான நெருப்பை
இருத்திட தமிழில் எழுதுகப் பலகை

மொழியின் மான்பை விழியாய்ப் போற்ற
முதலில் எழுதுக தமிழ்ப் பெயர்ப் பலகை

வளரும் தலைமுறை வருங்கால வழித்தோன்றல்
வசையற எழுதுக வண்டமிழ்ப் பலகை

வரலாற்றுப் பிழைஞர் வரிசையில் நீங்க
திடமாக எழுதுக தெளிதமிழ்ப் பலகை

{தனித்தமிழ் இயக்க விழாவில்20-01-2012 அன்று படிக்கப்பட்ட பாடல்}

Saturday, January 7, 2012

தானே............

2011 ஆம் ஆண்டின்
கடைசி நாட்களை நினைத்தால்
கண்ணீர் தான் காட்சியாகிறது.

பிறக்கும் புத்தாண்டை
வரவேற்க காத்திருந்தவர்களுக்கு
வருடும் தென்றலிடமிருந்து
வந்தது பேரிரைச்சல்

ஓலமிட்டு
ஓங்கி வளர்ந்த மரங்களையெல்லாம்
ஒரு கைப் பார்த்து
கூளமென கூட்டிச் சுருட்டி
குதறித் தள்ளியது.

இடுப்பொடிந்த
மின்கம்பங்கள்

இலை,கிளை மட்டுமா?
தலை அடியென
தங்களை இழந்த தாவரங்கள்

ஆள்வைத்து வெட்டினாலும்
அப்படித் துண்டாட முடியுமாவென
அதிர்ச்சிக் குள்ளாக்கும்
அழிந்த தென்னந்தோப்பு

நூற்றாண்டு கண்ட மரங்களும்
நொடியினில் அழிந்தன
கூற்றென தானே வந்த
தானே புயலால்

அடர்ந்த மரங்களில்
தொடர்ந்து உறங்கிய
அனைத்து பறவைகளும்
அடியோடு மாண்டன

புதுவைக் கடற்கரைச் சாலை
கல்வீசித் தாக்கப்பட்டு
கோமாவில் கிடந்தது

வீதிகள் தோரும்
நாதியற்ற பிணம் போல
நடுத்தெருவில் கிடந்தன
ஊதி எறியப்பட்ட
உயிரற்ற பொருளனைத்தும்.

ஊடகங்கள் செயலிழந்து
உறவுகளும் தொடர்பிழந்து
ஆடு மாடு கோழியெல்லாம்
ஆவியடித்தது போல்
அகால மரணத்தில்.

காற்றுக்கேன் இந்தப் பகை?
கூற்றுக்கேன் இந்த வேடம்?