Sunday, July 24, 2011

மலையரசி

கொடைக்கானல் மலையரசி குளிர்ச்சித் தருகிறாள்-எங்கள்
குழந்தை மனத்தை மறுபடியும் மலர்ச்சி செய்கிறாள்
அடைமழையாய் பெய்து எம்மை அலைக்கழிக்காமல்
அன்புக்குளிர் அரவணைப்பில் அகமகிழ்கிறாள்
உடைநூறு உடலுக்கு உடுத்திக் கொள்ளாமல்
உள்ளம் மகிழ உணர்ந்து நெகிழு உதவிசெய்கிறாள்

வானளவு உயர்ந்து நிற்கும் மரங்களினாலே
வருடம் முழுதும் மழைபெய்து வளமை சேர்க்கிறாள்
ஆனமட்டும் மனிதன் சேர்க்கும் கழிவுகளாலே
அவளுந்தான் கற்பிழந்து கலங்கமடைகிறாள்

கோணல்புத்தி மனிதர்களே கொஞ்சம் நில்லுங்கள்
கோடைக்கானல் குமரிகற்பை சூரையாடாதீர்
மோன நிலையில் நிற்கும் மரங்கள் சாட்சியல்லவா?-அவை
முழுதும் நம்மைக் காக்கின்ற காட்சியல்லவா?

நகரக்கழிவு பொருட்கள் எதற்கு நாசமாக்கவா?-இயற்கை
நமக்களித்த பொக்கிஷத்தை மோசமாக்கவா?
அகரமுதல அறிந்தபின்னும் அறிவில்லையா?-அன்னை
அடிமடியில் கைவைத்தல் அழிவில்லையா?

மலையும் காடும் மனிதயினத்தின் சொத்தல்லவா-அவை
மலரும் புதிய சந்ததிக்கும் வித்தல்லவா?
குலையும் நடுங்கக் குழிபறித்தால் மண்பொறுக்குமா?-மலை
குடைசாய்ந்தால் என்னவாகும் ஊர்பிழைக்குமா?

உயர்ந்த மலைச்சிகர அரசி மடியினைக் காப்போம்
உயிர்கள் வாழ சூழல்காத்து உண்மையாய் இருப்போம்
அயர்ந்து அழிவைச் செய்யும்வேலை அடியோடு மறப்போம்
அழகுக் கொடைக்கானல் மலைக்கு ஆரத்தி எடுப்போம்

No comments: