Wednesday, December 26, 2007

இளைஞர் கண்ணில்

பிரிவினைகள் குவிந்த மண்ணில்
பேதங்கள் நிறைந்த மண்ணில்
நரித்தனங்கள் நடக்கும் மண்ணில்
நாளைய கனவு எண்ணி
நடைபோடும் இளைஞர் கண்ணில்
நம்பிக்கைத் துளியும் இல்லை
கடைவிரித்தக் கவிஞர் சொல்லைக்
கிஞ்சித்தும் கருத வில்லை

நாட்டினிலே நடக்கும் காட்சி
நன்றாக உற்று நோக்கல்
ஏட்டினிலே எழுதும் செய்தி
எடைபோட்டுப் பார்க்கும் பண்பும்
எள்ளலவும் அவருக் கில்லை
ஏன்தானோ தெரிய வில்லை
கள்குடித்தக் கயவர் போலேக்
கிடக்கின்றார் மயங்கி வீணே

வட்ட நிலவினில்

கெட்ட நண்பரை விட்டுத் தொலைத்திடு
கேடுகள் சூழ்ந்திடும் கீழ்மை சேர்ந்திடும்
நட்ட கல்லையே நம்புதல் தவிர்த்திடு
நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லையே

வட்ட நிலவினில் வந்திடும் விடுதிகள்
வளரும் அறிவியல் தொழில் நுட்பத்தாலே
தொட்டச் செயலினை தொடர்ந்து முடித்திடு
தோல்விகள் இல்லையே தொடரும் வெற்றிகள்

பாரதியின் கனவுகள்

காணிநிலம் வேண்டினாய் பாரதி-இன்று
காலிமனைப் பகல்கனவு பாரதி
கவிதை உமக்குத் தொழில் பாரதி-இங்கு
கவிஞருக்குக் கனவேத் தொல்லை பாரதி

குயில்தோப்புக் கவிதைக் களம் பாரதி-இன்று
குடியிருப்பு மனைகளாச்சு பாரதி
மண்விடுதலை வேண்டினாய் பாரதி-பாரதம்
மறுகாலணியம் ஆகுதையா பாரதி

சாதி மறுத்தவன்நீ பாரதி-இன்று
சங்கங்கள் சாதிபேரால் பாரதி
பள்ளியெழுச்சிப் பாடினாய் பாரதி-தமிழர்
தாலாட்டென்று தூங்கினார் பாரதி

பெண்கல்வி வேண்டினாய் பாரதி-மகளிர்
பெண்மொழி பேசுகிறார் பாரதி
காக்கையையும் அடக்கம் செய்தாய் பாரதி-இன்று
காக்கும்கைகள் குழிபறிக்குது பாரதி

Monday, December 17, 2007

மறுகாலணியம்

கூடையில கருவாடு
குடத்தில நீர்மோரு
அடையோடு அத்தணையும்
அம்பானி விக்குறானே

அரைகீரை சிறுகீரை
அதிரசம் ஆப்பம்
விரைவு உணவோட
விக்குறானே அம்பானி

பொட்டிக்கடை சாமானெல்லாம்
பிளாஸ்டிக் பைக்குள்ள
பொட்டலமா விக்குறான்
பொழப்பக் கெடுத்துப்புட்டான்

அன்றாடம் புதுசாக
அறுத்துவரும் காய்கறியை
அடைச்சுக் குளிரறையில்
அதிகநாள் வைக்குறானே

பிரஷூ பிரஷூன்னு
பித்துபிடித்த சனம்
வரிசையில நிக்குறாங்க
வாங்கத் துடிக்கிறாங்க

சிறுவணிகர் எல்லோரும்
சீக்கிரமா செத்தொழிய
பெருமுதலாளி எல்லாம்
பேசிப்புட்டான் ஒப்பந்தத்த

அம்பானி அடிமையாக
ஆகிப்புட்டான் ஆளுரவன்
கொம்பா நீங்களென
வம்புக்கு வாரானே

நாட்டுமக்கள் எல்லோரும்
நல்லாப் புரிஞ்சிக்கணும்
ஓட்டுப்போட்டு வந்தவங்க
ஒழுக்கத்தத் தெரிஞ்சிக்கணும்

பன்னாட்டு வணிகர்களை
பாரத தேசத்துல
அண்டவிடக் கூடாது
அடித்துத் துரத்திடணும்

திண்ணையிலப் படுக்கவிட்டால்
திருடிடுவான் வீட்டையெல்லாம்
அன்னைபூமி அத்தனையும்
அவஞ்சொந்தம் ஆக்கிடுவான்

மக்களே சேர்ந்துடுங்க
மண்ணைக் காப்பாத்த
செக்கிழுத்த சுதந்திரத்தைச்
சேர்ந்துப் பாதுகாக்க

அறுபதாண்டு விடுதலையை
அடகுவைக்கும் அரசுகளை
எறிந்திடுவோம் வெகுதூரம்
எதிர்த்திடுவோம் மறுகாலணியம்

Sunday, December 16, 2007

நமக்கான அரசை வெல்லு

இலக்கியனார் எல்லாம் இன்று
இலக்கின்றி எங்கும் சென்று
வளர்க்கின்றார் வயிறு என்று
வசையடிகள் வழங்கல் நன்றோ?

நிலைக்கின்றப் பாடல் யாத்து
நெஞ்சினையே நேராய் வைத்துக்
கலைக்காண மதிப்பைக் கூட்டிக்
கவிஞரெலாம் வாழ்தல் வேண்டும்

அவலங்கள் கண்டும் கேட்டும்
அடுத்தவர்மேல் குறைகள் போட்டும்
தவளைபோல் இருத்தல் நன்றோ
அறிந்திடுவீர் புலவர் மக்காள்

கொடுமைகள் தீர்க்கப் பாடு
கொள்கைகள் முழங்கிக் கூவு
நடுவுநிலை நீயும் தள்ளு
நமக்காண அரசை வெல்லு

சுடுகாடாச்சே

கல்மரமாய் வயல்கள் ஆகக்
கழனிகளும் காய்ந்தேப் போக
நெல்மணிகள் விளைந்த மண்ணில்
நிழலுக்கும் மரங்கள் இன்றிப்
புல்முளைக்கா வண்ணம் பூமிப்
புழுதியாக ஆன திங்கே
புல்லினமும் விலங்கும் கூடப்
புறப்பட்டுப் போன தெங்கோ?

உருப்படுமோ இந்த ஞாலம்?

திங்களிலும் மனிதர் சென்றார்
திசையெட்டும் பறந்து சென்றார்
எங்கெங்கு வளங்கள் உண்டோ
எல்லாமும் கவர்ந்துக் கொண்டார்

தங்கத்தை வெட்டி னார்கள்
தண்ணீரை உறிஞ்சி னார்கள்
சிங்கத்தைக் கூட்டில் வைத்தார்
சிறுவிலங்கை விரட்டி விட்டார்

பசுமைசூழ் காட்டை யெல்லாம்
பாலையாய் ஆக்கி விட்டார்
விசும்பினிலும் ஓட்டை யாகும்
வேண்டாத வாயுச் சேர்த்தார்

இயற்கையை அழித்து விட்டால்
எப்படித்தான் வாழ்வோம் என்ற
உயரறிவை இழந்து நின்றார்
உருப்படுமோ இந்த ஞாலம்?

Saturday, December 15, 2007

ஆறு எழுந்தால்....

ஆறு எழுந்தால் அருவி யாகும்
அடிமை எழுந்தால் ஆட்சி மாறும்
சேறு வறண்டால் செந்நெல் மறையும்
சாதி மறைந்தால் சமத்துவம் விளையும்

நாறு சேர்ந்தால் மலர் மாலையாகும்
நன்றி மறந்தால் நிலமை தாழும்
வீறு குறைந்தால் கவிதை வீழும்
வேரைத் தொழுதால் வெற்றிக் குவியும்

போரை மறந்தால் புத்தம் தழைக்கும்
புவியைக் காத்தால் சந்ததி வாழ்த்தும்
நீரைச் சேர்த்தால் நிலவும் பசுமை
நிறைவாய்க் கற்றால் நீங்கும் கீழ்மை

Friday, December 14, 2007

தலைப்பாகை

வெய்யிலில் தலையின்
வெக்கைத் தணிக்கும்
தலைக்கவசம்

பண்பாட்டின் அடையாளமாய்
பல இனங்களுக்குப்
பதாகை

வேலை நேரத்தில்
வேட்டியை மடித்துத்
தலைப்பாகைக்கட்டினால்
உற்சாகம்

உழைத்து வியர்த்த
உடலைத் துடைக்க
உடனடித் தோழன்

குளிரில் உடலைக்
காத்து நிற்கும்
கைகள்

நீட்டிப்படுக்கப் பாயாய்
நீளும் தரையில்
துண்டாய்

அந்தி வேளையில்
அப்பா அவிழ்த்தால்
விரும்பியத் திண்பண்டங்களின்
இருப்பிடமாய்த் தலைப்பாகை

Thursday, December 13, 2007

அன்பெனும் மழையினிலே

அன்பெனும் மழையினிலே
அனைவரும் நனைந்திடுவோம்
வன்மங்கள் மறந்திடுவோம்
வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்

என்புகள் தோலுமான
யாக்கையும் நிலையல்ல
பண்புகள் பண்பாடுகள்
பாதுகாத்துப் போற்றிடுவோம்

சொந்தங்கள் மட்டுமின்றி
சூழும் சமூகத்தினை
சொந்தமாய் நினைத்திடுவோம்
சொர்க்கமாகும் வாழ்க்கையுமே

மண்தரை சேரும்நீராய்
ஒன்றியே வாழந்திடுவோம்
விண்வரை வளரும்புகழ்
வீரமே அன்புதானே